தனித்துவ மண்ணில் பேரினவாத புற்றுக்கள்!

0
97

-சுஐப் எம்.காசிம்-

பேரினவாதக் கட்சிகளின் தயவைத் தூக்கியெறிந்து பச்சையும் வேண்டாம், நீலமும் வேண்டாம், அஞ்சியும் வாழோம்! கெஞ்சியும் வாழோம்! என்ற விடுதலைக் கோஷத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் தோற்றம் பெற்ற காலம் (1986) எனக்குள் இன்னும் விடுதலை விதைகளை விதைக்கிறது. இதனால் எனது இதயம் ஓயும் வரையும் சமூகத்தின் விளை நிலமாகவே பண்படுகிறது.

அஷ்ரபுரம், ஷேகு இஸ்ஸதீனும்கட்சியைக் கட்டி வளர்த்த காலங்கள், முஸ்லிம் தேசத்தின் காலக் கண்ணாடிகள். இவை எமது விடுதலைத் தாகத்தால் அழியாதவை. ஆனால், அழிந்தது சமூகத்தின் தனித்துவமே. காலமாறிய அரசியல் நகர்வுகளில் குறிவைக்காமல், அதிகாரத்தை மாத்திரம் இலக்கு வைத்ததால் வந்த வினையோ இது. இந்த வினைப் பொறிக்குள் விழுந்து தவிப்பது நமது தனித்துவமே! கிழக்கில் பேரினவாதத்தை விரட்டி, பேரம் பேசும் சக்தியை வளர்க்க வந்த தனித்துவ தலைமை, சொந்த அடையாளத்தையும் தொலைத்து, மடிகாலில் தடுமாறும் காட்சிகள் நம்மை வெட்கிக்க வைக்கின்றன.

தனித்துவக் கட்சியின் தனிக் கோட்டையான அம்பாறை மாவட்டம், மீண்டும் பேரினவாதக் கட்சிகளின் கூடாரங்களாக மாறுவதை கள நிலவரங்கள் கட்டியங் கூறுகின்றன. ஒரு காலத்தில் பேரினவாதக் கட்சிகளில் பிழைப்பில்லை என்றாகி, முஸ்லிம் அமைச்சர்கள் பலர் தனித்துவக் கட்சியுடன் இணைந்து, விடுதலை வேட்கை, தனித்துவ அடையாளத்துக்கு முகவரி தந்தமை எமது வீரவரலாற்றின் சான்றுகள்.

பேரினவாதக் கட்சிகளின் பழம்பெரும் விக்கெட்டுக்களை வீழ்த்தி (முன்னாள் ஐ.தே.க அமைச்சர் நிந்தவூர் முஸ்தபா, முன்னாள் ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ. உதுமாலெப்பை, ரிஸ்வி சின்னலெப்பை) முஸ்லிம் அரசியல் ஆடுகளத்தை பலப்படுத்துவதில் நான் எடுத்த முயற்சிகள் அஷ்ரபின் ஆளுமைக்கு வளம் சேர்த்தன. நமது சமூகம் மீதான வலிகளே எனது எத்தனங்களுக்கு இறைவனின் உதவியினால் வெற்றியைத் தந்தன.

இன்றோ தனித்துவம் இருப்பிழக்கிறது. தனித்துவக் கட்சியின் பரம்பரைக் கோட்டைகளான நிந்தவூர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, கல்முனை, உள்ளூராட்சி சபைகள் பெரும் இழுபறிக்குள்ளாகி, தனித்துவம் உருக்குலைகின்றது. இத்தனைக்கும் மறைந்த தனித்துவ தலைவரின் அதியுச்ச அதிகாரங்கள் கோலோச்சிய சபைகளே இவை. இன்று இவற்றில் தனித்துவ கட்சியின் அதிகாரங்கள் வறிதாகி, பேரம் பேசும் யுக்திகள் மலிவாகி, சமூக முகவரி இழந்துள்ளது. தனித்துவம் தொலைந்ததால் சமூகப் போராளிகளின் வீரியமும் ஒடிந்துள்ளது. இந்தப் போராளிகள் மீண்டும் போர்க்களம் புறப்படுவார்களா என்பது சந்தேகமே. ஆனால், புறப்பட்டே ஆக வேண்டும்.

“போர்க்களம் போகாத போராளியும், புதுமனை புகாத மணவாளனும் ஆண்பிறவியா”? என்பது வழக்காற்றுச் சொல். புறப்படு தோழா! புறப்படு! தனித்துவம் காக்கப்புறப்படு. பெரும்பான்மை இனக் கட்சிகளா?

எமது தனித்துவ மண்ணில் அரியணை ஏறுவது! விடுதலை வேரில் பேரினவாத புற்றுக்கள் முளைக்க விடுவதா?

மறைந்த தனித்துவ தலைவருக்கு முதுகில் குத்தியன இந்த தந்திர (ஸ்ரீலங்கா சுதந்திர) கட்சிகள்தானே. இதை தடுத்து நிறுத்த நமது சாணக்கிய தலைமைக்கு திராணியில்லையா? இதுதான் எமது களப் போராளிகளின் குமுறல்கள். இனிவரும் காலங்களிலாவது, காலச் சுழற்சிக்கேற்ற வியூகங்கள் வகுப்பதில்தான் வெற்றிக் கொடியை நாட்ட வேண்டியுள்ளது.

பெரும்பான்மை வாதத்துக்கு சாமரம் வீசி, தேசப்பற்றை வெளிப்படுத்தி, பொறுமை காக்கும் முஸ்லிம்கள் சாதித்தது எதுவுமில்லை. தூண்டப்படும் கலவரங்களிலும், திடீரென எழும் மோதல்களிலும் துவம்சம் செய்யப்படுவது முஸ்லிம்களின் சொத்துக்களே. நூற்றாண்டுகால முஸ்லிம்களின் தேசப்பற்று, பேரினவாதிகளின் புரிதலுக்குப் புலப்படவில்லையே. எனவே, புரிதலுக்கும், பிரிதலுக்கும் இடையிலான தனித்துவச்சாயலுள்ள கட்சி பற்றியே சிந்திக்க வேண்டியுள்ளது. பெரிதாக சாதிக்காவிட்டாலும், களமாடும் கட்சியின் தேவை முஸ்லிம்களின் தேவையாகியுள்ளது. வன்னியில் களமாடி, கொடி நாட்டிய காங்கிரஸ் ஒன்று, கிழக்கிலும் கால் பாதித்துள்ளது.

இக்கட்சி இதுவரை எய்த அம்புகள் இலக்கின் எல்லைக்குள் சென்று தனித்துவத்தை எதிரொலித்துள்ளது. சிங்களப் பேரினவாதம் தமிழ் பெரும்பான்மைவாதங்களுக்கு மத்தியில் முஸ்லிம்களை தலை நிமிர்த்த களமாடுகிறது இக்கட்சி. தேவையான நேரத்தில் அடைக்கலம் கோரும் மாற்று இனத்தவரையும் அரவணைக்கும் மனப்பாங்கு இக்கட்சிக்குள்ளது.

வடக்கு கோட்டைக்குள் கொடி நாட்டி, கிழக்கில் கூடு கட்ட வந்த இந்த மயிலின் நடனம் நாள்பட்டுப் போனாலும் நன்றாகவே இருக்கும்.

LEAVE A REPLY