பிரதமர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்: சிறிசேனா ஆதரிப்பார் – ராஜபக்சே நம்பிக்கை

0
150

 நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரனில் விக்ரம சிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி கண்டது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார். ஆனாலும், புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ரனிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு மந்திரி பதவியை அதிபர் சிறிசேனா பறித்தார்.

இப்போது ரனில் மீது ராஜபக்சே கட்சி (இலங்கை மக்கள் முன்னணி), அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை சபாநாயகர் கரு ஜெயசூரியாவிடம் அந்தக் கட்சி அளித்து விட்டது. அதில் அவர் மீது நிதி மோசடி செய்ததாகவும், இனக்கலவரத்தை அடக்கத்தவறி விட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இந்த தீர்மானம் 4-ந் தேதி (நாளை மறுதினம்) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதுபற்றி ராஜபக்சே, கொழும்பு நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் அதிபர் சிறிசேனா, ரனில் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறும்போது, “தனது இலங்கை சுதந்திரா கட்சி எம்.பி.க்களின் ஆதரவை பெற்றுத்தந்து, ரனில் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றி அடையச்செய்வதை அதிபர் சிறிசேனா உறுதி செய்ய வேண்டும்” என குறிப்பிட்டார்.நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து, இலங்கை சுதந்திரா கட்சி முடிவு எடுத்து இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY