ரஷிய ஷாப்பிங் மால் தீவிபத்தில் 64 பேர் பலி: கெம்ரோவோ பகுதி கவர்னர் ராஜினாமா

0
170

ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ளது கெம்ரோவோ நகரம். இங்குள்ள வின்ட்டர் செர்ரி மால் வணிக வளாகத்தில் கடந்த 25.03.2018 அன்று பொதுமக்கள் பலர் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென அந்த மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்தது. இறந்தவர்களில் 41 பேர் குழந்தைகள் என இன்று (01) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தீ விபத்து நிகழ்ந்த வணிக வளாகத்தை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வணிக வளாக நிர்வாகத்தினரின் மிக மோசமான குற்றவியல் சார்ந்த மெத்தனப்போக்கால் (criminal negligence) இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக புதின் வருத்தம் தெரிவித்தார். இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ள அவர், 64 உயிர்கள் பலியானதற்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மார்ச் 28-ம் தேதியை நாடு முழுவதும் தேசிய துக்கதினம் அனுசரிக்குமாறு அதிபர் புதின் கேட்டுக் கொண்டார்.

இந்த தீவிபத்து நிகழ்ந்த வணிக வளாகத்தில் பாதுகாப்பு நடைமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. அந்த வணிக வளாகத்தின் தலைமை அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், சுமார் 20 ஆண்டுகளாக கெம்ரோவோ பகுதி கவர்னராக பதவியேற்றிருந்த அமான் டுலேயேவ்(73) தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

ஷாப்பிங் மால் தீவிபத்தில் இத்தனை உயிர்கள் பறிபோன பின்னர் இத்தனை கனமான மன அழுத்ததுடன் கவர்னராக என்னால் பணியாற்ற முடியாது. எனவே, எனது பதவியை நான் ராஜினாமா செய்து விட்டேன். எனது ராஜினாமாவை அதிபர் விளாடிமிர் புதின் ஏற்றுக்கொண்டுள்ளார் என அமான் டுலேயேவ் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY