நள்ளிரவில் 45 நிமிடம் தண்டவாளத்தில் நடந்து சென்ற 2½ வயது சிறுவன்

0
329

நள்ளிரவில் 45 நிமிடம் தண்டவாளத்தில் நடந்து சென்ற 2½ வயது சிறுவனை போலீஸ் அதிகாரியின் முயற்சியால் மீட்கப்பட்டது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட ஆயுதப் படைப்பிரிவு 5-வது பட்டாலியன் அதிகாரியாக உள்ளவர் அனிஷ்மோன். இவரது மனைவி அனு. ஆசிரியை. அனிஷ்மோன் கோட்டயம் மாவட்டம் வைக்கம் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

அனிஷ்மோன் இதற்கு முன்பு எர்ணாகுளம் களமசேரி போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்தார். நேற்று இரவு சொந்த ஊர் செல்வதற்காக நிலம்பூர்- எர்ணாகுளத்திற்கு ரெயிலில் புறப்பட்டார். சேலத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு இருவழிபாதையாகும். 10 நிமிடத்திற்கு ஒரு முறை எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகள் ரெயில், சரக்கு ரெயில் என்று ஏதாவது ஒன்று இந்த பாதையில் செல்லும்.

அனிஷ்மோன் வந்த ரெயில் நள்ளிரவு 11.30 மணியளவில் களமசேரி அருகே மின்னல் வேகத்தில் சென்றது. எதிர் திசையில் மற்றொரு ரெயில் தண்டவாளத்தில் ஒரு குழந்தை நடப்பது போன்று அனிஷ்மோனுக்கு ஒரு நொடி தெரிந்தது. அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து மற்ற பயணிகளிடம் கேட்டு உறுதி படுத்தினார்.

பின்னர் களமசேரி போலீசுக்கு போனில் தகவல் தெரிவித்தார். தகவல் கிடைத்த 3-வது நிமிடத்தில் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அங்கு தண்டவாளத்தில் நடந்த சிறுவனை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

குழந்தை என்ன ஆனது என்று அறிய பலமுறை போலீஸ் நிலையத்திற்கு அனிஷ்மோன் செல்போனில் முயற்சி செய்தார். ஆனால் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. சஞ்சலத்துடனே பயணம் செய்தார். எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இறங்கியதும் குழந்தை என்னவாயிற்று என்று தெரிந்து கொள்ள அனிஷ்மோன் காரில் களமசேரிக்கு புறப்பட்டார். களமசேரி போலீஸ் நிலையத்திற்கு வந்ததும் அங்கு குழந்தைக்கு போலீசார் உணவு ஊட்டிக்கொண்டிருந்தனர். குழந்தை காப்பாற்றப்பட்டதை அறிந்து அனிஷ்மோன் ஆனந்த கண்ணீர் வடித்தார். ஓடிச்சென்று குழந்தையை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரித்தபோது அவரது தாய் மஞ்சு களமசேரி ரெயில்வே ஊழியர் என்பதும், ரெயில்வே குடியிருப்பில் வசித்து வருவதும் தெரியவந்தது. குழந்தை குறித்து அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டனர்.

குழந்தையை ஏன் கவனிக்காமல் விட்டீர்கள் என்று கேட்டபோது மஞ்சு கூறியதாவது, வேலை முடிந்து இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது எனது தாய் சாந்தாவுடன் விளையாடினான். அதன் பின்னர் மகனை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிக்கொண்டிருந்தோம். அப்போது தான் குழந்தை இங்கு இருப்பது தெரியவந்தது என்றார்.

10 நிமிடத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு ரெயில் வரும் தண்டவாளத்தில் குழந்தை 45 நிமிடம் நடந்துள்ளது. அதனை எதிர் திசை ரெயிலில் பயணம் செய்த போலீஸ் அதிகாரி கண்டு பிடித்து போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து காப்பாற்றிய சம்பவம் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு இருந்தது. குழந்தையை காப்பாற்றிய போலீஸ் அதிகாரி அனிஷ்மோன் மற்றும் களமசேரி போலீசாருக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி கூறினர்

LEAVE A REPLY