காணிப் பிணக்குகளில் இணக்கம் காணப்பட்டால் நற்சான்றிதழ் வழங்கி சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரிய திட்டம்: மட்டு அரசாங்க அதிபர்

0
113

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

காணிப் பிணக்குகளில் இணக்கம் காணப்பட்டால் நற்சான்றிதழ் வழங்கி சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் இது பிணக்குகளில் சிக்கித் தவிக்கும் சமூகங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும் என மட்டக்களப்பு அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

மாவட்ட காணி மத்தியஸ்த சபையின் முதலாவது அமர்வு மட்டக்களப்பு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மத்தியஸ்த சபையின் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியத்துக்கான பயிற்சி அலுவலர் எம்.ஐ. முஹம்மத் ஆஸாத் தலைமையில் நேற்று (31) சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆசிய பவுண்டேஷ‪ன் நிறுவன ஆலோசகர் எம். திருநாவுக்கரசு, நீதியமைச்சின் மத்தியஸ்த சபை ஆணைக்குழு உறுப்பினர் என். சோமசுந்தரம், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிகளுக்கான பொறுப்பாளர் செல்வி ஆனந்தராஜா ரம்யா, மாவட்ட காணி மத்தியஸ்த குழுத் தலைவர் கே. குருநாதன், மாவட்ட காணி மத்தியஸ்த சபையின் உறுப்பினர்கள் மற்றும் பிணக்காளிகள் ஆகியோர் பங்குபற்றினர்.

அவர்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றிய உதயகுமார்,

பிணக்குகளோடு சம்பந்தப்பட்டவர்களை இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வந்து அந்த இணக்கப்பாடு எனும் அரிய செயலைச் செய்தமைக்காக அவர்களுக்குச் சான்றிதழ் வழங்குவது, பிணக்குகளோடு சம்பந்தப்பட்ட தரப்பாருக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதில் சங்கடங்களை எதிர்கொண்டால் அவற்றை மேல் நடவடிக்கைக்காக நீதிமன்றங்களுக்குப் பாரப்படுத்துவது ஆகியவை காணி மத்தியஸ்த குழுவினுடைய மிகச் சிறப்பான செயற்பாடாக இருக்கும்.

அமர்வுகளை மிகக் கிரமமாக நடத்தி மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்புமாகும். குறிப்பாக அரசாங்கம் இந்த எதிர்பார்ப்பை அடைந்து கொள்ள வேண்டும் என்பதில் கரிசனையாக உள்ளது.

1இந்தக் காணி மத்தியஸ்த சபைக்குள் உள்வாங்கப்பட்டுள்ள அங்கத்தவர்கள் சமூகம்சார் சிறந்த அனுபவங்களையும் சமூகத்திலே நன்மதிப்பையும் கொண்டவர்கள்.

எனவே, மாவட்டத்திலே இருக்கின்ற காணிப்பிணக்குகளைத் தீர்த்து மக்கள் அமைதியாகவும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழவேண்டும்.

அதேவேளை பரஸ்பரம் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வோடு ஆக்கபூர்வமான வழிகளில் ஒத்துழைப்புத்தரக் கூடியவர்களாகவும் உருவாக்குவது காணி மத்தியஸ்த உறுப்பினர்களின் கடமையாகும்.

இந்த நாட்டிலே காணி மத்தியஸ்த சபை சமூகங்களுக்கிடையில் ஒப்புரவு ஏற்படுவதற்கு முன்னுதாரணமாகத் திகழ முடியும்.

அரச செயற்பாட்டிலே சமூக நல்லிணக்க ஒப்புரவு என்பது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது. அந்தவகையில் மாவட்ட ஒப்புரவுக் குழுவை ஸ்தாபித்திருக்கின்றோம்.

நாடளாவிய ரீதியில் மாவட்டங்கள் தோறும் இந்த ஒப்புரவுக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

அந்தக் குழுக்களின் ஊடாகவும் உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.’ என்றார்.

இலங்கையில் ஏற்கெனவே வடக்கு கிழக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் காணி மத்தியஸ்த சபைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நான்காவதாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கத் துவங்கியுள்ளதாகவும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிகளுக்கான பொறுப்பாளர் செல்வி ஆனந்தராஜா ரம்யா தெரிவித்தார்.

மேலும், ஏப்ரல் மாதம் அனுராதபுர மாவட்டத்தில் மாவட்ட காணி மத்தியஸ்த சபை ஸ்தாபிக்கப்படவுள்ளது.

அதேவேளை அதன் தொடர்ச்சியாக அம்பாறை முல்லைத்தீவு, வவனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் காணி மத்தியஸ்த சபைகளுக்கு அங்கத்தவர்களை உள்வாங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை சிறிய பிணக்குகளுக்கெல்லாம் நீதிமன்றங்களை நாடி அலைந்து உடல், உளச் சோர்வையும் பொருளாதார இழப்புக்களையும் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்வதில் மக்கள் நாட்டங் கொண்டு மத்தியஸ்த சபைகளினூடாக இணக்கப்பாட்டுக்கு வருவதில் ஆர்வம் காட்டுவதாகவும் ரம்யா மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY