க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

0
220

க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட காத்தான்குடி கல்வி கோட்டத்தில் உள்ள சகல பாடசாலை மாணவ மாணவிகளுக்கும் தனது பாராட்டுக்களையும் – வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது,

வெளியாகியுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுகளுக்கு அமைய மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள காத்தான்குடி கல்வி கோட்டத்தில் மாத்திரம் 47 மாணவர்கள் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். அதில், மீரா பாலிகா மகளிர் கல்லூரியில் 23 மாணவிகளும், மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் 8 மாணவிகளும், ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் 4 மாணவிகளும், அல் ஹிரா வித்தியாலயத்தில் 3 மாணவர்களும், அல் அமீன் வித்தியாலயத்தில் 2 மாணவிகளும், அந்நாசர் வித்தியாலயத்தில் ஒரு மாணவனும் 9 ஏ சித்தி பெற்றுள்ளனர்.

9 ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் – பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, சித்தி பெற்ற – சித்த பெறாத ஏனைய மாணவர்களும் தமது உயர் கல்வியை ஏதோ ஒரு துறையில் சிறந்த முறையில் முன்னெடுத்து சமூகத்துக்கு சேவைசெய்யக் கூடியவர்களாக வரவேண்டும்.

கடந்த காலங்களை விட காத்தான்குடி கல்வி கோட்டம் கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்காக பாடுபட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், புத்திஜீவிகள் மற்றும் பாடசாலை சமூகம் சார்ந்த அமைப்புக்கள் உள்ளிட்ட சகலருக்கும் என வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

முஸ்லிம் சமூகம் கல்விக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். சமூகத்தின் கல்வி முன்னேற்றத்துக்காக நாங்கள் பூரண பங்களிப்பு செய்து வருகின்றோம். காத்தான்குடி கோட்டத்தில் உள்ள பாடசாலைகளின் கல்வி முன்னேற்றத்துக்கு கடந்த காலங்களைப் போலவே எதிர்காலத்திலும் பல பௌதீக வள அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளோம் – என்றார்.

LEAVE A REPLY