சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியான விவகாரம்: ‘குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது’ – மத்திய மந்திரி உறுதி

0
201

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வெளியான விவகாரத்தில் குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் உறுதியுடன் கூறினார்.
புதுடெல்லி:

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு கடந்த 26-ந்தேதி நடந்தது. இந்த தேர்வு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே வாட்ஸ்அப்பில் வினாத்தாள் வெளியானதாக தகவல் பரவியது. ஆனால் இதை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் மறுத்தது.

இந்த அதிர்ச்சி மறைவதற்குள், நேற்று முன்தினம் நடந்த சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு கணித தேர்வுக்கான வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக செய்தி பரவியது. இதை உறுதி செய்த நிர்வாகம், இந்த தேர்வும், 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இந்த 2 பாடங்களுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் எனவும் தகவல் வெளியிட்டது.

10-ம் வகுப்பு கணிதம் மற்றும் 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வுகள் மீண்டும் நடத்தப்படுவதாக தகவல் வெளியானதும், மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் கடும் அதிர்ச்சியடைந்தனர். சி.பி.எஸ்.இ.ன் முடிவால் ஏமாற்றத்துக்கு உள்ளான அவர்கள் அழுது புலம்பினர்.

இவ்வாறு கொந்தளிப்பில் இருக்கும் மாணவ-மாணவிகள் பல இடங்களில் போராட்டங்களில் இறங்கி உள்ளனர். டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று காலையிலேயே சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் குவிந்தனர். சி.பி.எஸ்.இ. வாரியம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் வந்திருந்த அவர்கள், கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் கூறுகையில், ‘பெரும்பாலும் அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படுத்தப்பட்ட வினாத்தாள்களும், அந்தந்த தேர்வுக்கு முன்தினமே வெளியாகி இருக்கின்றன. மறுதேர்வு நடத்தப்பட்டால், அனைத்து பாடங்களுக்கும் நடத்தப்பட வேண்டும்’ என்று ஆவேசமாக தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் கூறும்போது, ‘மறுதேர்வு குறித்த தகவல் கேட்டு நாங்கள் அனைவரும் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்துள்ளோம். வினாத்தாள் கசிந்ததன் மூலம் ஒருசில மாணவர்கள் மட்டும் ஆதாயம் பெற்றதற்காக, நாங்கள் ஏன் துன்பப்பட வேண்டும்?’ என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

வினாத்தாள் வெளியான சம்பவம் குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினாத்தாள் பரவியதாக கூறப்படும் செல்போன் எண்களை பெற்று அவர்கள் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

மேலும் டெல்லி ராஜேந்தர் நகரில் இயங்கி வரும் பயிற்சி மையம் ஒன்றின் உரிமையாளரிடமும் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் இந்த பயிற்சி மையத்தில் கணிதம் மற்றும் பொருளாதாரம் கற்பிக்கப்படுகிறது. எனவே போலீசாரின் சந்தேக வளையத்தில் இருக்கும் முக்கிய புள்ளிகளில் அவரும் ஒருவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் யாரும் தப்ப முடியாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை நாங்கள் தப்ப விடமாட்டோம். அவர்கள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவர். எஸ்.எஸ்.சி. தேர்வில் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தது போல, இந்த விவகாரத்திலும் தவறிழைத்தவர்களை டெல்லி போலீசார் கைது செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மறுதேர்வு நடத்துவதால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ள விரக்தி மற்றும் கோபத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வினாத்தாள்கள் வெளியாகாமல் தேர்வுகள் அனைத்தும் நேர்மையாக நடப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.

10-ம் வகுப்பு கணிதம் மற்றும் 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கான மறு தேர்வு உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த மாதம் (ஏப்ரல்) 2 அல்லது 3-ந்தேதிக்குள் சி.பி.எஸ்.இ. அறிவிக்கும்.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

இதற்கிடையே வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் மற்றும் சி.பி.எஸ்.இ. தலைவர் அனிதா கர்வால் ஆகியோரை நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து உள்ளது. அத்துடன் வினாத்தாள் வெளியானது தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதி மூலம் நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறினார்.

LEAVE A REPLY