(Article) சிவில் விமானப் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு விமான நிலையம்

0
230

(விஷேட நிருபர்)

கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக விமானப்படையினரின் கட்டுப்பாட்லிருந்து வந்த மட்டக்களப்பு விமான நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு கடந்த 25.3.2018 ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக உத்தியோக பூர்வமாக மட்டக்களப்பு விமான நிலையம் கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு விமான நிலையத்தை பொறுத்த வரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் ஒரு பெருமை சேர்க்கும் இடமாகும். அத்தோடு கிழக்கு மாகாணத்தின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் ஒரு முக்கியமான இடமாகும்.

இந்த வகையில் மட்டக்களப்பு விமான நிலையம் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை விமானப்படையினரின் வசமிருந்ததுடன் இதன் சகல பராமரிப்புக்களையும் இலங்கை விமானப்படையினரே நிருவகித்து வந்தனர்.

இலங்கை விமானப் படையினர் நிருவகித்து வந்த காலப்பகுதியில் விமானப்படையினருக்கு சொந்தமான விமானங்களே இங்கு வந்து சென்றன.

மட்டக்களப்பு விமான நிலையம் 1958ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

மட்டக்களப்பு வலையறவு மற்றும் புதூர் பகுதியிலேயே இந்த விமான நிலையம் அமைந்துள்ளது.

வெளிநாட்டு நிபுனர்கள் பொறியியலாளர்கள் இங்கு வந்து இந்த விமான நிலையத்தினை அமைக்கவில்லை. நமது நாட்டு பொறியியலாளர்கள் மற்றும் நிபுனர்கள் சேர்ந்து விமானப்படையினரின் ஒத்துழைப்புடன் 98 நாட்களுக்குள் மட்டக்களப்பு விமான நிலையத்தினை அமைத்தார்கள் என இதன் ஆரம்ப வரலாறுகள் தெரிவிக்கின்றன.

1958ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரை இந்த விமான நிலையத்தினூடாக சிவில் விமானப் போக்குவரத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

அப்போது இரண்டு விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு வந்து சென்றுள்ளன.

வர்த்தகர்கள் அரசியல் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் சாதரண பொது மக்களும் கூட அப்போது இந்த விமான நிலையத்தினூடாக கொழும்பு சென்று திரும்புவார்கள் என முதியவர்கள் கூறுகின்றனர்.

இந்த விமான நிலையத்திற்கு தினமும் காலை 7மணிக்கும் 7.30 மணிக்குமிடையில் இரண்டு விமானங்கள் வரும் அந்த விமானம் வரும் நேரத்தை கணிப்பிட்டே சிலர் அன்று காலையில் பாடசாலைக்கு செல்வார்கள் என ஒருவர் தெரிவித்தார்.

காலையில் எழும்புவதற்கு முதல் இரண்டு விமானங்களும் போய் விட்டதா எனக் கேட்டு விட்டு எழும்பி அன்று பாடசாலைக்கு சில மாணவர்கள் சென்ற வரலாறுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறு மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு இரு விமானங்கள் வந்து சென்றுள்ளன.

கொழும்பு புறக்கோட்டையிலிருந்து ரத்மலானை விமான நிலையம் வரை அந்தக் காலப்பகுதியில் ஒரு பஸ் சேவை இடம் பெற்றது.

கொழும்பில் வேலைகளை முடித்துக் கொண்டு அந்த பஸ்ஸில் ஏறி ரத்மலானை விமான நிலையம் சென்று மட்டக்களப்புக்கு வரும் விமானத்தில் ஏறி மட்டக்களப்புக்கு வந்துள்ளோம் என அதனை அனுபவித்த ஒருவர் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் என பலரும் வந்து சென்றுள்ளனர்.

1958ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம் எயர் சிலோன் என்றே அன்று அழைக்கப்பட்டுள்ளது.

பின்னர் இந்த விமான நிலையத்தில் 1979ம் ஆண்டு உள்ளுர் விமானப் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

1983ம் ஆண்டு இந்த விமான நிலையத்தினை இலங்கை விமானப்படையினர் பொறுப் பேற்றனர்.

அதன் பின்னர் இங்கு விமானப்படைக்கு சொந்த விமானங்களே வந்து சென்றன.

இலங்கையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மத்தல சர்வதேச விமான நிலையம் இருப்பது போல உள் நாட்டுக்குள் சிவில் விமானப் பேக்குவரத்துக்காக உள்ள ரத்மலானை விமான நிலையத்திற்கு அடுத்ததாக உள்ள சிவில் விமானப் பேக்குவரத்துக்கான விமான நிலையமாக மட்டக்களப்பு விமான நிலையம் திகழ்கின்றது.

மட்டக்களப்பு விமான நிலையத்திற்கான புதிய கட்டம் அமைக்கும் நடவடிக்கை 2010ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன் மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடுபாதையும் புனரமைக்கப்பட்டதுடன் பெரிய விமானங்களும் தரையிறங்க ஏற்றவாறு இதன் ஓடுபாதை விஸ்தரிப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பி;ன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிரீசேனா ஜனாதியானதன் பின்னர் இதன் அபிவிருத்தி வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டு இதற்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் அர்ஜுனா ரணதுங்க மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு வருகை தந்து இதன் அபிவிருத்திப்பணிகளை பார்வையிட்டதுடன் அதன் வேலைத்திட்டங்களையும் துரிதப்படுத்தினார்.

இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிரீசேனா கடந்த 2016ம் ஆண்டு ஜுலை மாதம் 10ம் திகதி .மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு வருகை தந்து அங்கு புனரமைக்கப்பட்ட ஓடுபாதையை திறந்து வைத்தார்.

30 வருடங்களுக்கு மேலாக விமானப்படையினரின் கட்டுப்பாட்லிருந்து வந்த மட்டக்களப்பு விமான நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் கடந்த 25.3.2018 ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இங்கு நிர்மானிக்கப்பட்டுள்ள விமான நிலையக் கட்டிடம் போதிய வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் பயணிகளின் உள் வருகை வெளியேறுதல் போன்றவைகளுக்காக தனித்தனி பிரிவாக கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நவீனமயப்படுத்தப்பட்ட இந்த விமான நிலையத்தினை திறந்து வைபவத்தில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள்; பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன், அலிசாஹீர் மௌலானா, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ரி.எஸ்.விதானகே, சிவில் விமான சேவைகள் தலைவர் ஆனந்த விஜயகோன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உட்பட சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் பணிப்பாளர் அதன் அதிகாரிகள் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் சமய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முதலாவது பயணிகளை ஏற்றிய முதலாவது சிவில் விமானம் கடந்த 27.3.2018 செவ்வாய்க்கிழமை கொழும்பு ரத்மனாலை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11.15 மணிக்கு மட்டக்களப்பு விமான நிலையத்தை வந்ததடைந்தது.

பிளே சௌர்ரதன் எனப்படும் இந்த முதலாவது சிவில் விமானத்தில் வருகை தந்த பயணிகளை மட்டக்களப்பு விமான நிலைய ஊழியர்கள் மலர்களை வழங்கி வரவேற்றனர்.

மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து முதல் கட்டமாக பிளே சௌர்ரதன் எனப்படு;ம் உள்ளுர் சிவில் விமானம் வாரத்தில் செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மட்டக்களப்புக்கும் கொழும்பு ரத்மனாலை விமான நிலையத்திற்குமிடையில் சேவையில் ஈடுபடும் என மட்டக்களப்பு விமான நிலைய முகாமையாளர் சிந்தக்க பொன்சேகா தெரிவித்தார்.

இந்த விமானம் மேற்படி தினங்களில் காலை 9 மணிக்கு ரத்மனாலை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு மட்டக்களப்பு விமான நிலையத்தை வந்தடையும். பின்னர் மட்டக்களப்பிலிருந்து மாலை 4மணிக்கு புறப்பட்டு மாலை 5மணிக்கு கொழும்பு ரத்மனாலை விமான நிலையத்தை சென்றடையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பிரயாணிகளின் தொகைக்கு ஏற்பட ஏனைய விமானங்களையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேற்படி பிளே சௌதர்ரன் எனப்படு;ம் இந்த விமானத்திற்காக மட்டக்களப்புக்கும் கொழும்பு ரத்மனாலை விமான நிலையத்திற்குமிடையில் ஒரு வழிக்கட்டணமாக 100 டொலர் அறவிடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதே நேரம் இன்னும் ஓரிரு மாதங்களில் 40 பேர் தொடக்கம் 70 பேர் இருந்து பயணிக்க கூடிய பிளே சௌதர்ரன் எனப்படும் விமானத்தை பிரயாணிகளின் நன்மை கருதி சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அந்த விமானத்திற்கு குறைந்த கட்டணத்தை அறிவிட தீர்மானித்துள்ளதாகவும் பிளே சௌர்ரதன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சமித்த அபேசிங்க தெரிவித்தார்.

மட்டக்களப்பு விமான நிலையத்தினை பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் வந்து பார்வையிட முடியும். இந்த விமான நிலையத்தினை கிழக்கு மாகாணத்திலுள்ள மக்கள் பயன் படுத்த முன் வருமாறு நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என மட்டக்களப்பு விமான நிலைய முகாமையாளர் சிந்தக்க பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கொழும்புக்கிடையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிவில் விமானப் போக்குவரத்துக்கான கட்டணத்தை குறைக்குமாறு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

நடுத்தரமானவர்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் இதன் கட்டணத்தை குறைக்க வேண்டும். குறைந்த கட்டணத்தை அறவிடுகின்ற போதுதான் கூடுதலானோர் பயன்படுத்துவர்.

இது தொடர்பில் சிவில் விமான சேவைகள் அமைச்சர் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனம் ஆராயுமாறும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேலும் கேட்டுள்ளார்.

மட்டக்களப்பு விமான நிலையம் சமூக நல்லிணக்கத்துக்கும் இன நல்லுறவுக்கும் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்புச் செய்யுமென கூறப்படுகின்றது.

இதன் மூலம் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையில் பெரிதும் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY