நாடாளுமன்ற முடக்கத்தால் ஓய்வு பெறும் உறுப்பினர்களால் விவாதங்களில் பங்கேற்க முடியவில்லை: பிரதமர் மோடி வருத்தம்

0
113

நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருவதால், விரைவில் ஓய்வுபெற இருக்கும் உறுப்பினர்கள் விவாதங்களில் பங்கேற்க முடியாமல் போய்விட்டதாக பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார்.

நாடாளுமன்ற முடக்கத்தால் ஓய்வு பெறும் உறுப்பினர்களால் விவாதங்களில் பங்கேற்க முடியவில்லை: பிரதமர் மோடி வருத்தம்

புதுடெல்லி:

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து சுமார் 60 உறுப்பினர்கள் அடுத்த சில வாரங்களில் ஓய்வு பெறுகின்றனர். அவை துணைத்தலைவர் பி.ஜே.குரியன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர், நடிகை ரேகா, முன்னாள் அட்டார்னி ஜெனரல் கே.பராசரன், தொழிலதிபரும், சமூக சேவகருமான அனு அகா, இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் திலிப் திர்கே ஆகியோர் இதில் முக்கியமானவர்கள் ஆவர்.

இந்த உறுப்பினர்களுக்கு மாநிலங்களவையில் நேற்று பிரிவு உபசார விழா நடந்தது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து முடங்கி வருவது குறித்து கவலை வெளியிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘நாடாளுமன்ற மாநிலங்களவை, சிறந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு புகழ்வாய்ந்த சபை மட்டுமின்றி இந்திய ஜனநாயகத்தில் முக்கிய பங்காற்றும் ஒரு அமைப்பும் ஆகும். விரைவில் ஓய்வு பெற இருக்கும் இந்த உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் ‘முத்தலாக் மசோதா’ உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகள் குறித்து தங்கள் ஓய்வுக்கு முன் அவையில் விவாதிப்பதற்கு நினைத்திருக்கக்கூடும். ஆனால் அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை’ என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் கட்ட அமர்வு தொடர்ந்து முடங்கி வருவதால் இந்த உறுப்பினர்களால் பல விவாதங்களில் பங்கேற்க முடியாமல் போய்விட்டதாக கூறிய பிரதமர், இது துரதிர்ஷ்டவசமானது என்றும் தெரிவித்தார்.

ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவர்கள் ஒவ்வொருவரின் தனித்தன்மை குறித்தும் இந்த நிகழ்ச்சியில் பாராட்டி பேசினார்.

இதற்கிடையே காவிரி மேலாண்மை வாரியத்தை முன்வைத்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் நேற்றும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அரசுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு எடுக்க முடியவில்லை.

பிரிவு உபசார விழாவுக்குப்பின் பிற்பகல் 3.40 மணிக்கு மாநிலங்களவை கூடியது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் குறித்து அ.தி.மு.க. உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் பேசினார். அப்போது அவர், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவையே அமல்படுத்தவில்லை என்றால், சட்டத்தின் ஆட்சிக்கான பொருள் என்ன?’ என்று வினவினார்.

இதைத்தொடர்ந்து பொதுத்துறை வங்கிகள் விவகாரம் குறித்த விவாதத்தை தொடங்க அவை துணைத்தலைவர் பி.ஜே.குரியன் அழைப்பு விடுத்தார். ஆனால் காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்குதேசம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியை தொடர்ந்ததால், சபை அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

LEAVE A REPLY