சாதி, மத மறுப்பு திருமணங்களில் யாரும் தலையிட முடியாது – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

0
170

புதுடெல்லி:

சாதி மறுப்பு திருமணங்கள், மத மறுப்பு திருமணங்களில் மூன்றாம் தரப்பினரால், கட்ட பஞ்சாயத்து செய்பவர்களால் பிரச்சினை வருகிறது. இப்படி திருமணம் செய்து கொள்கிறவர்களின் உயிர்களுக்கும், உடைமைகளுக்கும் கூட ஆபத்து நேர்ந்து விடுகிறது.

குறிப்பாக பல இடங்களில் கவுரவ கொலைகளும் நடந்து விடுகின்றன.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ‘சக்தி வாகினி’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு, 2010-ம் ஆண்டு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது.

சாதி அல்லது மதம் மறுத்து திருமணம் செய்து கொள்கிற தம்பதியர், கவுரவ கொலைக்கு ஆளாக நேரிடுகிறது; எனவே இப்படிப்பட்ட தம்பதியருக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்பதுதான் வழக்கின் சாராம்சம்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் விசாரித்தனர்.

விசாரணையின்போது மத்திய அரசின் சார்பில் வாதிட்டபோது, “ மதம் மாறி திருமணம் செய்து கொண்டு அல்லது சாதி கடந்து திருமணம் செய்து கொண்டு விட்டு, அச்சத்தில் உள்ள தம்பதியருக்கு மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும், அவர்களுக்கு அச்சுறுத்தல் வந்தால் அதுபற்றி திருமண அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், அதன்பேரில் பாதுகாப்பு வழங்கப்படும்” என கூறப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில் விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த தீர்ப்பை நீதிபதிகள் நேற்று வழங்கினர்.

தீர்ப்பில், வயதுக்கு வந்த 2 பேர் சாதி அல்லது மதம் மறுத்து திருமணம் செய்தால், அவர்களது உறவில் யாரும் தலையிட முடியாது என கூறியதுடன், கட்ட பஞ்சாயத்து செய்பவர்கள் இதில் தலையிட தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது மட்டுமின்றி, உறவினர்களும் அல்லது மூன்றாவது தரப்பினரும் தலையிடக் கூடாது, மிரட்டல் விடுக்கக்கூடாது, சாதி-மதம் மறுத்து திருமணம் செய்தவர்களுக்கு எதிராக வன் செயல்களை கட்டவிழ்த்து விடவும் கூடாது, மாறாக அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:-

* சமூகத்தின் மனசாட்சியை காப்பவர்கள் என்ற ரீதியில் கட்ட பஞ்சாயத்து செய்கிறவர்கள் நடக்கக்கூடாது.

* வயதுக்கு வந்த 2 பேர் திருமணம் செய்து கொண்டால், அது சட்டத்தின்கீழ் பாதுகாப்பை பெறுகிறது.

* கட்ட பஞ்சாயத்து செய்கிறவர்களை குறிப்பிட்ட நபர்களின் கூட்டமாகவோ, சமுதாய குழுவாகத்தான் கருத முடியும். (சட்டப்படி அங்கீகரிக்க முடியாது என்கிற அர்த்தம் தொனிக்கிற வகையில் தீர்ப்பில் இப்படி கூறப்பட்டு உள்ளது.)

* மதம் கடந்து, சாதி கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள் விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டு வகுத்து அளித்து உள்ள நெறிமுறைகள், இது தொடர்பாக நாடாளுமன்றம் ஏற்ற சட்டத்தை இயற்றுகிற வரையில் அமலில் இருக்கும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY