பந்தை சேதப்படுத்தி கையும் களவுமாக சிக்கிய ஆஸி வீரர்

0
605

போட்டியின் பின் மன்னிப்பு கோரியது அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை விசாரணைக்கு உத்தரவு

ggdfதென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் விளையாடி வரும், டெஸ்ட் தொடரின் 3 ஆவது போட்டியில் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பென்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியமை அப்பட்டமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தென்னாபிரிக்கா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

இத்தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதோடு, 2 ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்று தொடர் 1 – 1 என சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கேப்டவுனின் நியுலேண்டில் இடம்பெறும் இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய (24) 3 ஆம் நாள் ஆட்டத்தின்போது, 25 வயதான அவுஸ்திரேலிய வீரர் கெமரூன் பென்கிராப்ட், மஞ்சள் நிற டேப் ஒன்றினால் பந்தை சேதப்படுத்தி, அது தரையில் மிக இறுக்கமான முறையில் பதிவதன் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்துமாறு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

(வீடியோ காட்சி)

இது, அதி துல்லியமாக கமெராக்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னதாக இடம்பெற்ற இச்சம்பவத்தை அடுத்து, அவ்வணியின் 12 ஆவது வீரரான பீட்டர் ஹேண்ட்ஸ்கொம்ப், குறித்த விடயம் குறித்து, கெமரூன் பென்கிராப்ட் இடம் அதனை தெரிவிக்கிறார். அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டரன் லீமெனின் உத்தரவுக்கு அமைய, இது இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. (வீடியோ காட்சி)

இதனையடுத்து, கெமரூன் பென்கிராப்ட் தனது காற்சட்டை பையிலிருந்த குறித்த மஞ்சள் நிற துண்டை, காற்சட்டையை திறந்து உள்ளாடைக்குள் மறைக்கிறார். (வீடியோ காட்சி)

இதனையடுத்து, ஏதோ ஒரு விடயம் தமக்கு தெரியாமல் நடைபெறுவதை உணர்ந்த நடுவர்கள், குறித்த விடயம் குறித்து, கெமரூன் பென்கிராப்டிடம் கேள்வியெழுப்புகின்றனர். இதன்போது, தனது காற்சட்டையிலிருந்த கண்ணாடி துடைக்கும் கறுப்புநிற துணியை நடுவர்கள் காட்டியதைத் தொடர்ந்து, குறித்த பந்தை தொடர்ந்தும் பயன்படுத்த நடுவர்கள் அனுமதியளிக்கின்றனர். (வீடியோ காட்சி)

இரு அணிகள் இடையேயான இத்தொடரின் ஆரம்பத்திலிருந்தே டி கொக் – டேவிட் வார்னர் இடையே சண்டை, ரபாடாவின் முறையற்ற வார்த்தை பிரயோகம் என பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

021ஆயினும் ஆட்ட நேர முடிவில், விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட 28 வயதான அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித், தமது அணியின் தவறை ஒத்துக்கொள்வதாக தெரிவித்தார்.

குறித்த விடயம் கமெராக்களில் பதிவாகாமல் இருந்திருந்தாலும், இது தொடர்பில் தான் மனம் வருந்துவதாகவும் அதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்த அவர், “பகல் போசண இடைவேளையில் நாம் இது குறித்து பேசினோம், நான் இது குறித்து அறிந்திருந்தேன். ஆனால் இது விளையாட்டின் உயிரோட்டத்திற்கு சிறந்தது அல்ல. இவ்வாறான விடயம் எனது தலைமைத்துவத்தின் கீழ் இனிமேல் ஒருபோதும் இடம்பெறாது என, நான் உத்தரவாதமளிக்கிறேன்” என ஸ்மித் இதன்போது தெரிவித்தார்.

“நான் இது குறித்து பெயர் குறிப்பிட்டு கூற விரும்பாத போதிலும், நாம் இவ்விடயம் குறித்து கலந்துரையாடும்போது, கெமரூன் பென்கிராப்டும் அங்கிருந்தார். இதன் மூலம் நாம் ஏதேனும் இலாபத்தை அடையலாம் என எதிர்பார்த்தோம். ஆயினும் அது வெற்றியளிக்கவில்லை. நடுவர்களாலும் பந்தில் மாற்றம் ஏற்பட்டதை அவதானிக்க முடியவில்லை. இது உண்மையில் மிக மோசமான முடிவு என்பதோடு, எமது நடவடிக்கை தொடர்பில் மனம் வருந்துகிறோம்.”

அணியின் 12 ஆவது வீரருடன், பயிற்சியாளர் லீமென் உரையாடும் காட்சி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஸ்மித்,

“இவ்விடயத்திற்கும், பயிற்சியாளர்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. நீங்கள் இவ்வாறு பல்வேறு கேள்விகளை தொடுத்த போதிலும், நாம் இவ்வாறு நடந்து கொண்டது இதுவே முதல் தடவை என்பதோடு, இவ்வாறு இனி நடைபெறாது என்பதை நான் உறுதிப்பட கூறுகிறேன். நாம் இதிலிருந்து ஒரு பாடத்தை கற்றுள்ளோம். நாம் இதிலிருந்து விடுபட்டு செல்வோம்” என்றார்.

(Thinakaran)

LEAVE A REPLY