(விஷேட நிருபர், முகம்மது அஸ்மி)
25 வருடங்களாக விமானப்படையினரின் கட்டுப்பாட்லிருந்து வந்த மட்டக்களப்பு விமான நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக இன்று (25) ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டு சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மட்டக்களப்பு விமான நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு சிவில் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவத்தில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதன் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க, இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், எஸ்.யோகேஸ்வரன், அலிசாஹீர் மௌலானா, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ரி.எஸ்.விதானகே, சிவில் விமான சேவைகள் தலைவர் ஆனந்த விஜயகோன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் உட்பட சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் பணிப்பாளர் அதன் அதிகாரிகள் பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் சமய பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது நவீனமயப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையக் கட்டிடத்தினை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா திறந்து வைத்ததுடன் அதன் நினைவுப்பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தார்.
இந்த நவீனமயப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையத்திலிருந்து தினமும் கொழும்பு ரத்மலானை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் என்பவற்றுக்கான உள்ளுர் விமான சேவைகள் இடம் பெறவுள்ளன.
இந்த விமான நிலையத்தில் பிரயாணிகளின் நன்மை கருதி பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடு பாதை விஸ்தரிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு கடந்த கடந்த 2016ம் ஆண்டு ஜுலை மாதம் 10ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிரீசேனா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.