அரசியல் கைதியாக சிறையில் வாடும் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வேண்டுகோள்!!

0
241

அண்மையில் தாயை பறிகொடுத்த துயரத்திலும், ஏக்கத்திலும் அனாதைகளாகிப் போன ஆனந்த சுதாகரனின் சிறிய குழந்தைகளின் நலனைக் கருத்திற்கொண்டு, சிறையில் வாடும் ஆனந்த சுதாகரை கருணை அடிப்படையில், பொதுமன்னிப்பு வழங்கி, உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனநாயக சோஷலிச குடியரசின் தலைவர் அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை வேண்டிக்கொள்கிறோம்

கடந்த போர் காலத்தின் போது, அரசுக்கெதிராக ஆயுதம் தூக்கிப் போராடிய விடுதலை புலிகளின் போராளிகளை மாத்திரமின்றி, அப்பாவித் தமிழர்களும் சிற்சில காரணங்களுக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

யுத்த முடிவுக்குப் பின்னரான சமாதானம் ஏற்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளின் அநேகருக்கு அரசு பொதுமன்னிப்பு வழங்கி, புனர்வாழ்வளித்து விடுதலை செய்து மானிடமும் மனித நேயமும் இன்னும் வாழ்கிறது என்பதை இலங்கை அரசு நிரூபித்து இருந்தது.

பொது மன்னிப்பு பெற்று விடுதலையானவர்கள் தமது இயல்பு வாழ்க்கையை சுமூகமாக வாழ்ந்து, சமூகத்தின் நல்ல பிரஜைகளாக வாழ்ந்து வருகின்றனர் என்பதை தங்கள் நன்றாக அறிவீர்கள்.

அந்தவகையில், கிளிநொச்சியைச் சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான சகோதரர் ஆனந்த சுதாகர், ஏதோ காரணங்களுக்காக கடந்த பத்து வருடங்களாக சிறையில் வாடுகின்றார். அவரது மனைவியும் அண்மையில் இறந்துவிட்ட நிலையில், எதுவும் அறியாத 09 வயதுடைய ஆண் பிள்ளையும், 11 வயதான பெண் பிள்ளையும் தாயும், தந்தையுமின்றி அனாதைகளாக்கப்பட்டு நிற்கதி நிலையில் வாழ்கின்றனர்.

எனவே, இந்தக் குழந்தைகளின் துயர் கருதி, அவர்களது தந்தையை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் தயவாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை வேண்டுகிறோம்.

தலைவர் 
அல்ஹாஜ் நூறுல் ஹுதா உமர்
அல்-மீஸான் பௌண்டசன்,ஸ்ரீ லங்கா
செயலாளர் 
சட்டத்தரணி மெரியம் பி. மோசஸ்
அல்-மீஸான் பௌண்டசன், ஸ்ரீ லங்கா.
தவிசாளர்
அல்ஹாஜ் MHM இப்ராஹீம்
அல்மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா