“நாட்டில் இனவாத நச்சு விதையை விதைத்த பொதுபல சேனாவுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை அவசியம்” நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்து

0
160

கண்டி மாவட்டத்தில் பல பகுதிகளில் இடம்பெற்ற இனவாத செயற்பாடுகளுக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கூறி நல்லவர்களைப் போல நடிக்கும் பொது பல சேனா உறுப்பினர்களே நாட்டில் இனவாத நச்சு விதையை விதைத்தவர்கள். எனவே, அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் திருத்தச் சட்ட மூலத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

நாட்டில் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பும் – கடப்பாடும் அரசாங்கத்துக்கு உள்ளது. இதேவேளை, இந்த நாட்டில் சிங்களவர்களைப் போன்றே தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமைகள் பாதுகாக்கப்பட்டு சகல இன மக்களும் சுதந்திரமாக வாழும் சூழலை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும்.

அளுத்கம கலவரம் இடம்பெற்ற போது இனிமேல் இவ்வாறு எந்த சம்பவமும் இடம்பெறாது என அரசு கூறியது. நல்லாட்சி அரசுக்கு வந்த போது இதற்குப் பின்னர் இந்த நாட்டிலே சகல இனமக்களும் ஒற்றுமையோடு அச்சமின்றி வாழ முடியும் என்ற உறுதிமொழியை அது வழங்கியது. ஆனால் அதற்குப் பிறகு கிந்தோட்டை என்றும், அம்பாறை என்றும், கண்டி – திகன என்றும் பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று விட்டன. எனவே மீண்டும் அவ்வாறான சம்பவங்கள் ஏற்படாத வகையில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய அரசும், அமைச்சும் தங்களது பொறுப்புக்களை உரிய முறையில் செய்ய வேண்டும்.

இந்த நாடு ஒரு இனத்துக்கு மாத்திரம் சொந்தமான நாடு அல்ல. இந்த நாட்டிலே வாழ்கின்ற சகல மக்களுக்கும் இந்த நாடு சொந்தமானது என்பதை தெளிவாக கூறிக்கொள்கின்றேன். ஆகவே இந்த நாட்டிலே உள்ள சட்டம் அனைத்து இன மக்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். நாட்டிலே வாழ்கின்ற சகல இனங்களும் – சமூகங்களுக்கும் தமது கலாசாரத்தினை சுதந்திரமாக பின்பற்றுவதற்காக உரிமை அவர்களுக்கு உள்ளது.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆசியாவில் வாழ்ந்தாலும் சரி, ஆபிரிக்காவில் வாழ்ந்தாலும் சரி, அறபு நாடுகளில் வாழ்;ந்தாலும் சரி, இலங்கையில் வாழ்ந்தாலும் சரி, உலகில் எந்த மூலை முடுக்கில் வாழ்ந்தாலும் சரி அவர்களுக்கு ஒரே கலாசாரம் தான். ஒரே உடை தான். ஒரே மார்க்கத்தை தான் பின்பற்றுகின்றோம். ஆகவே, எமது கலாசாரத்தைப் பற்றியோ எமது உடைகளைப் பற்றியோ யாரும் எங்களுக்கு கற்றுத் தர வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை என்பதை மிகத்தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.

இதேவேளை, சிங்கள மக்கள் மத்தியில் விதைத்த இனவாத நச்சு விதை இன்று விளைத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது எமக்கும் நடந்த சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் – சம்பந்தமும் இல்லை என பொது பல சேனா உறுப்பினர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், அவர்களே அனைத்து சம்பவங்களுக்கும் மூல காரணமானவர்கள். அவர்கள் விதைத்த நச்சு விதையினாலேயே அப்பாவி இளைஞர்கள் தவறான வழிகளில் சென்றுள்ளனர். இனங்களுக்கிடையில் குரோதங்களையும் – குரோத மனப்பான்மைகளையும் உண்டு பன்னி விட்டு இன்று வெளியிலே இருந்து கொண்டு நல்வர்களைப் போல அவர்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் சட்டங்களை திருத்துவது பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் சட்டத்துக்கு கட்டுப்படாமல் தங்களது காவி உடைகளை காட்டிக்கொண்டு சட்டத்துக்கு முரணாக நடந்து கொள்ளும் பிக்குமார்களுக்கு எதிராக ஏன் இதுவரை எந்த சட்டநவடிக்கைகளும் எடுக்கவில்லை?” என இராஜாங்க அமைச்சர் சபையில் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY