அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்கி வைப்பு

0
156

அளுத்கம கலவரத்தில் உயிரிழந்தவர்களது குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு நட்டஈடு இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்ட போதிலும், பெருமளவு சொத்துக்களை இழந்தவர்களுக்கான நட்டஈட்டினைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அதன் அங்கீகாரத்தை பெற்ற பின்னர் வெகு விரைவில் அதற்கான நட்டஈடுகளும் வழங்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அளுத்கம, பேருவளை கலவரத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டஈடு வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சில் இடம்பெற்றது. புனர்வாழ்வு அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நட்டஈடு வழங்கி வைக்கும் நிகழ்வில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, புனர்வாழ்வு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட அளுத்கம கலவரத்தில் உயிரிழந்தவர்கள் மூவரது குடும்பத்தினருக்கும் தலா 20 இலட்சம் ரூபா வீதமும், காயமடைந்தவர்கள் 12 பேருக்கு தலா 5 இலட்சம் ரூபா வீதமும், சிறு சொத்துக்களை இழந்தவர்கள் 84 பேருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வீதமும் மொத்தம் சுமார் 15,655,000 ரூபா வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,

2014ஆம் ஆண்டு அளுத்கம, பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற கலவரத்துக்கான நட்டஈடு நான்கு வருடங்களுக்கு பின்னரே எம்மால் பெற்றுக்கொடுக்க முடிந்தமை கவலைக்குரியது. இந்த சம்பவத்தை முன்னிறுத்தியே நல்லாட்சி அரசு ஆட்சிக்கு வந்தது. ஆனால், நட்டஈட்டினை வழங்க அரசு தாமதப்படுத்தியது.

இதனால், ஊடகங்களில் இந்த விடயம் சம்பந்தமாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதனடிப்படையில் நான் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கடுமையாக உரையாற்றியிருந்தேன். பின்னர் பிரதமர் என்னுடன் பேசி அதற்கான ஏற்பாடுகள் செய்ய அமைச்சரவைப் பத்திரமொன்றை தயார் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

பின்னர், தேவையான அனைத்து தகவல்களையும் புனர்வாழ்வு அதிகார சபையினால் பெற்றுக்கொண்டு அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்தேன். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக இந்த நட்டஈட்டினை வழங்க நிதி அமைச்சு பின்வாங்கியது. என்றாலும் ஏனைய அமைச்சர்களது முயற்சியால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நட்டஈட்டினை வழங்குவதற்கு அனுமதியளித்தார்.

அதனடிப்படையில் மரணித்தவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும் வழங்கவும் அனுமதியளிக்கப்பட்டது. அத்துடன், சொத்துக்கள் சேதமடைந்தவர்களது 273 விண்ணப்பங்கள் எமக்கு கிடைக்கப்பெற்றது. அவர்களுக்கு 185 மில்லியன் ரூபாய் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதியளித்த போதிலும் அந்த பத்திரத்தில் இருந்த சிறிய பிழையின் காரணமாக மீண்டும் அது அமைச்சரவையில் திருத்தப்பட வேண்டி ஏற்பட்டுள்ளது. எனினும், அதற்காக மரணமடைந்தவர்கள், காயமடைந்தவர்கள், சிறு சொத்து சேதமடைந்தவர்களுக்கான நட்டஈட்டினை தாமதிக்காமல் வழங்க நாம் நடவடிக்கை எடுத்தோம். அவர்களுக்கான காசோலைகள் கடந்த டிசம்பர் மாதமே எழுதப்பட்ட போதிலும் தேர்தல் வந்தமையால் அதனை வழங்குவதற்கு தேர்தல்கள் திணைக்களம் அனுமதியளிக்கவில்லை.

அளுத்கம கலவரம் போன்றே திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட 660 விண்ணப்பங்கள் எமக்குக் கிடைத்துள்ளன. அவற்றுக்கு நட்டஈட்டினை வழங்க எமக்கு பெருமளவு நிதி தேவைப்படுகின்றன. இவை அனைத்தும் மக்களின் நிதியினாலேயே அரசு வழங்குகின்றது. நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியான நிலையில் இருக்கின்ற போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது நாட்டின் முன்னேற்றத்திற்கே பாதிப்பாக அமையும் – என்றார்.

LEAVE A REPLY