கவி எழுது (உலகக் கவிதை தினம்)

0
290

Mohamed Nizous

அலுத்துப் போன
‘அவளின்’ வருணனைகள்
புளித்துப் போன
புகழும் பாடல்கள்,
இவற்றை எழுதுவதை
இடையில் நிறுத்தி
எவற்றை எழுதினால்
இந்த சமூகத்தின்
கோடியில் ஒன்றேனும்
கொஞ்சம் விழிக்குமோ
தேடி அதை எழுது
திருந்தனும் பழுது.

எழுத்தின் அழுத்தம்
இறைவனை நினைவூட்ட
கொழுத்துப் போன
குற்றங்களை விமர்சி.
இழித்துப் பேசும்
இனவாதிக்கெதிராய்
பழித்துப் பேசும்
பகைவருக்கெதிராய்
விழித்து எழுது
விமர்சனம் தாங்கு.

தெருக்களில் காணும்
தீயவை பற்றி,
உருக்குலைந்து போன
ஒற்றுமை பற்றி,
குருக்கள் மடத்துக்
கொலைகள் பற்றி,
துருக்கி சிரியா
துன்பங்கள் பற்றி
பொறுக்கி எழுது
பொறுக்கியாய் எழுதாதே!

இளமைக் கால
இனிய நினைவுகள்
இனி வரும் கால
இலக்ட்ரோனிக் யுகங்கள்
எழுதும் கவிகளில்
இடைக்கிடை இவற்றையும்
எளிதான தமிழில்
இனிமையாய் எழுது.

நகச்சுவை கலத்தல்
நல்ல பலன் தரும்
பகைவரைக் கூட
பக்கம் சேர்க்கும்
ஆகையால் கொஞ்சம்
அதனையும் தூவி
ஆக வேண்டியதை
அழகாய் எழுது.

இலக்கியத் தமிழில்
எழுதும் கவியிலும்
புழக்க மொழியில்
பொழியும் கவிதைகள்
வழக்கமாக வரவேற்கப்படும்
விளக்கமாக நோக்கப்படும்.
அன்றிலும் பெடையுமெனும்
அக்காலத் தமிழிலும்
அண்ட்றொய்டும் பொடியனுமென
அதனை எழுதினால்
இளைஞர் சமூகம்
இலகுவாய் விளங்கும்.

எதுகை மோனை
எதிர்பார்க்கப் படுவதிலும்
எதார்த்தக் கருத்தே
இங்கே தேவை.

சுத்தத் தமிழில்
சுருதி பிசகாது
முத்துக் கவியெழுதும்
முன்னோடிக் கவிகளை
விமர்சிக்க இங்கு
விடயத்தை எழுதவில்லை.
அவர்களின் திறமை
அற்புதத் திறமை.
ஆனால் சமூகத்தில்
அந்த மொழி நடை
காணும் தாக்கம்
காணாது என்பதால்
புதிய வழிகளில்
விதியை வகுத்து
எழுதும் கவிகளால்
இனி ஒரு மாற்றம் காண்போம்.

LEAVE A REPLY