இரண்டாவது ஆட்சி காலத்தில் மக்களின் எதிபார்ப்பை நிறைவேற்ற தவறிவிட்டோம் – ராகுல் நெகிழ்ச்சி

0
146

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடியேற்றி தொடங்கி வைத்தார். சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் இந்த மாநாட்டில் பங்கேற்று வருகின்றனர்.

இன்றைய மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது:-

இந்தியா வளர்ந்து வரும் நாடாக உள்ள போதிலும் இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சியிலும் காங்கிரஸ் கட்சியின் பங்கு உள்ளது.

நமது கட்சியில் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கு இடையில் பெரிய சுவர் உள்ளது. எனது முதல் வேலை அந்த சுவரை அகற்ற வேண்டும். இதுகுறித்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் பேசவுள்ளேன். காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கு இடையில் நிறைய வேறுபாடு உள்ளது. நாங்கள் இந்த நாட்டின் உயரிய அமைப்புகளை மதிப்பவர்கள். அவர்கள் அவற்றை அழித்துவிட நினைப்பவர்கள்.

இந்த நாட்டின் விடுதலைக்காக போராடிய மகாத்மா காந்தி 15 ஆண்டுகள் சிறையில் அடைபட்டு கிடந்தபோது, அவர்களின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைவர்கள் சவர்க்கார் போன்றவர்கள் வெள்ளையர் ஆட்சியிடம் இருந்து கருணை பிச்சைக்காக கடிதம் எழுதினார்கள்.

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாக இந்தியாவை இந்த அரசு குறிப்பிட்டு வருகிறது. ஆனால், பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி கிடக்கின்றனர். மக்களால் பிழைக்க முடியவில்லை. விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

ஆனால், வாருங்கள் யோகாசனம் செய்யலாம் என்று மோடி கூறி வருகிறார். காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் பா.ஜ.க.போல் செயல்பட முடியாது.

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவரை மக்கள் பா.ஜ.க.வின் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள். குடிகாரர்கள் அதிகாரத்தில் இருப்பதை அவர்கள் ஏற்றுகொள்வார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியில் அப்படி ஒருவர் இருப்பதை மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்திய சுதந்திரத்தில் பங்கெற்று போராடி, பாகிஸ்தானுக்கு இதுவரை சென்றறியாத முஸ்லிம்களை அவர்கள் இந்நாட்டவர்கள் இல்லை என்று கூறி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் வாழும் மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என அவர்கள் கூறுகிறார்கள். பெண்கள் ஒழுங்காக ஆடை அணிய வேண்டும் என்கிறார்கள்.

பா.ஜ.க. அச்சத்தை பரப்பியுள்ளது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 4 பேர் நீதிக்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை முதன்முறையாக நாம் பார்த்துள்ளோம். இன்று ஊழல்வாதிகளும், அதிகாரத்தில் உள்ளவர்களும் நாட்டின் பேச்சை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.

நாங்கள் மனிதர்கள், நாங்கள் தவறுகள் செய்வதுண்டு. ஆனால், மோடி தன்னை மனிதராக கருதாமல் கடவுளின் அவதாரமாக நினைத்து கொண்டிருக்கிறார்.

இதை நான் மகிழ்ச்சியுடன் கூறாவிட்டாலும், கடைசியாக நாங்கள் அமைத்த ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் மக்களின் எதிபார்ப்பை நிறைவேற்ற எங்கள் அரசு தவறிவிட்டது. மக்களை நாங்கள் கைவிட்டு விட்டோம் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

LEAVE A REPLY