இந்தியாவிற்கு 167 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம்

0
189

இலங்கையில் நடைபெற்று வரும் நிதாஹாஸ் டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் சிராஜ் நீக்கப்பட்டு உனத்கட் சேர்க்கப்பட்டுள்ளார். வங்காள தேச அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

வங்காள தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பால், லித்தோன் தாஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் தமிம் இக்பால் பவுண்டரி அடித்தார். 2-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 3-வது ஓவரை உனத்கட் வீசினார். இந்த ஓவரில் லித்தோன் தாஸ் சிக்ஸ் ஒன்று விளாசினார். இதனால் உனத்கட் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

முதல் மூன்று ஓவரில் வங்காள தேசம் 26 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் லித்தோன் தாஸ் ஆட்டமிழந்தார். அவர் 9 பந்தில் 11 ரன்கள் சேர்த்தார். சுந்தர் இந்த ஓவரில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். அடுத்த ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரில் சாஹல் தமிம் இக்பாலையும், சவுமியா சர்காரையும் வீழ்த்தினார். இதனால் வங்காள தேசத்தின் ரன் வேகத்தில் மந்தநிலை ஏற்பட்டது.

3-வது வீரராக களம் இறங்கிய சபீர் ரஹ்மான் மட்டும் சிறப்பாக விளையாடினார். அவருக்கு மெஹ்முதுல்லா நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். ஆனால் மெஹ்முதுல்லா 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். சபிர் ரஹ்மான் 37 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய சபிர் ரஹ்மான் 50 பந்தில் 7 பவுண்டரி, 4 சிக்சருடன் 77 ரன்கள் எடுத்து 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

உனத்கட் 19-வது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தி வங்காள தேச அணியின் கடைசிகட்ட ரன்குவிப்பிற்கு முட்டுக்கட்டை போட்டார். இருந்தாலும் கடைசி ஓவரில் ஷர்துல் தாகூர் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்ருடன் 18 ரன்கள் விட்டுக்கொடுக்க வங்காள தேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது.

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

LEAVE A REPLY