நன்றி சொல்லுவதை ஞாபகப்படுத்திய பல்

0
527

“வலது பக்கம் உள்ள பல்லுக்குள் கோரை அதிகமாக இருப்பதாலும் உள்ளே முரசு வளர்ந்து விட்டதாலும் அந்த பல்லை கழற்றுவதை தவிர வழியில்லை” எனது பல் வைத்தியர் சொன்னதும் உடன்பட்டேன்.

மறு நிமிடம் ஆசை ஆசையாக ஒரு வயதில் தோன்றிய பல்; எனது 40 வருட புன்னகையை அலங்கரித்த பல்; குழந்தையாக இருக்கும் போது பெற்றோரால் பெருமையாக காட்டப்பட்ட அதே பல்லு இரத்தம் தோய்ந்த நிலையில் பல் வைத்தியரின் பாத்திரத்தில் என்னைப்பார்த்து அழுதது.

கடந்த 40 வருடங்களாக வாய்க்கு ருசியான உணவுகளை அரைத்து அரைத்து எனக்காக சம்பளமே இன்றி சேவையாற்றிய அந்த பல்லு செத்துப்போய் இரத்தம் தோய்ந்த நிலையில் கிடந்தது.

பல் பிடுக்கப்பட்ட பின்னர் உணவுப்பொருட்களை பிடுக்கப்பட்ட பகுதியால் உண்ண முடியவில்லை. அப்போதுதான் அந்த பல்லின் பெறுமதியை உணர்ந்தேன்.

அந்த பல்லை தந்திருந்த இறைவனுக்கு அந்த பல்லுக்காக ஓரு தடவையாவது நன்றி சொல்லியியிருப்பேனா? நினைத்த போது கூனிக்குறுகி என்னையே நினைத்து வெட்கப்பட்டேன்.

இல்லாத எதை எதையோவெல்லாம் அளவற்ற அருளாளன் அல்லாஹ்விடம் அழுது அழுது மன்றாடிக்கேட்கின்றோம். இருக்கின்ற விலை மதிக்க முடியாத நம் உறுப்புகளுக்காக எப்போது நாம் நன்றி சொல்லியிருக்கிறோம்.

கண்ணில்லாதவனுக்குத்தான் கண்ணின் பெறுமதி தெரியும். ஊமைக்குத்தான் பேசத்தெரிந்த நாக்கின் பெறுமதி புரியும். சிறுநீரக வியாதி உள்ளவனுக்குத்தான் ஆரோக்கிய சிறுநீரகத்தின் பெறுமதி தெரியும்.

பல கோடிகளை செலவழிக்க தயாராக இருந்தும் இழந்த உறுப்புகளை பதிலீடு செய்ய முடியாமல் தடுமாறுபவர்களுக்குத்தான் உடல் உறுப்புகளின் பெறுமதி பற்றித்தெரியும்.

பதிலீடு செய்ய முடியாத கண்கள், காதுகள், பற்கள், நாக்கு, மூக்கு, தலைமுடி, மூளை, இதயம், ஈரல், சுவாசப்பை, சிறுநீரகம், கைகள், கால்கள் என்று அடுக்கிக்கொண்டு போனால் பேனாக்கள் மைகளை இழந்து விடும்.

மனித உடலில் இருக்கிற பெயர்கள் கூட சூட்டப்படாத 100 பில்லியன் நியூரோன்களை எழுதி முடிய முழு ஆயுளும் இடம் அளிக்காது. மனித உடலில் உள்ள இன்னமும் பெயர்கள் கூட சூட்டப்படாத 200 கும் மேற்பட்ட எலும்புகளை என்னவென்று எழுதி முடிப்பது?

சராசரி மனித ஆயுளில் 182 மில்லியன் லீட்டர் இரத்தத்தை அழுத்தி தள்ளுகின்ற இதயத்தை எப்படி வருணிப்பது?

இவற்றை எல்லாம் அழகிய முறையில், விலை மதிக்க முடியாத முறையில் இலவசமாக நமக்கு தந்த அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வுக்கு எத்தனை முறை நன்றி சொல்லியிருப்போம்?

இறைவா நன்றி கெட்டவர்களாக இருக்கின்றோம். எங்களை மன்னித்துக்கொள்ளுவாயாக!

இல்லாதவற்றை இறைவனிடம் கேட்கின்ற அதேவேளை இறைவன் நமக்கு அளித்த பெறுமதி மிக்க உடல் உறுப்புக்களுக்காக; அளித்த அனைத்துக்கும் நன்றி சொல்ல பழுகுவோமாக!

“மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங்கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு (மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் (புகழ்) வார்த்தைகள் முடிவுறா; நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்.” (அல்குர்ஆன்  31:27)

-முஹம்மது ராஜி-

LEAVE A REPLY