சட்டக் குறைபாடுகளினால் இலத்திரனியல் வணிகத்தில் நுகர்வை மேற்கொள்ள இலங்கையர்கள் அச்சம்

0
229

‘’
-உலக நுகர்வோர் தின நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு-
ஊடகப்பிரிவு-
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு
ஆன்லைன் முறைமையை பயன்படுத்தும் இலத்திரனியல் வர்த்தக நடவடிக்கையில், இலங்கை நுகர்வோர்கள் இன்னும் அச்சத்துடனேயே இருப்பதாகவும், சட்டங்களிலும் ஒழுங்கு விதிகளிலும் உள்ள குறைபாடுகளும் போதிய பாதுகாப்பு இன்மையுமே இதற்குக் காரணமாக அமைவதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

உலக நுகர்வோர் தினத்தையொட்டி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் டிஜிட்டல் முறையிலான சாதாரண சந்தைப்படுத்தல் உருவாக்கம் எனும் தொனிப்பொருளிலான ஐரோப்பிய இலங்கை வர்த்தக உறவுகளின் ஒத்துழைப்பு தேசிய பகிரங்க மற்றும் பிரத்தியேக கலந்துரையாடல் நிகழ்வு இன்று (15) இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறியதாவது,
நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை, ஐரோப்பிய யூனியன், ஜெனீவா சர்வதேச வர்த்தக நிறுவனம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த முன்னோடி நிகழ்வின் அங்குரார்ப்பண விழாவில் கலந்துகொள்வதையிட்டு நான் பெருமைகொள்கின்றேன்.

இலத்திரனியல் வர்த்தகத்தில் சட்ட வரைபை உருவாக்கி நவீன முறையிலான நுகர்வை ஸ்திரப்படுத்துவதற்காக இலங்கையின் ஆரம்ப சிபாரிசுகளை ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரதான சட்ட மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைத்தொழில், இலத்திரனியல் வர்த்தகம் உலகளாவிய ரீதியில் முன்னெடுத்துச் செல்வதற்கு, இவ்வாறான புரட்சிகரமான மாற்றங்கள் இன்றியமையாதது. உலகாளவிய சில்லறை இலத்திரனியல் வர்த்தகம் கடந்த வருடம் 2.29 ட்ரில்லியன் டொலரை எட்டியுள்ளது.

சர்வதேச வியாபார நிறுவகத்தின் கணக்கெடுப்பின்படி பூகோள இலத்திரனியல் வர்த்தகம் பெருமளவில் வளர்ந்து வருகின்றது. சுமார் 38 சதவீதமான இலத்திரனியல் வர்த்தக உரையாடல்கள் முகநூல்களின் வழியாக நடாத்தப்படுகின்றன. அதிகரித்து வருகின்ற பயன்பாட்டு பதிவிறக்கங்கள், ஸ்மார்ட் போன்கள் ஆகியவை சில்லறை இலத்திரனியல் வணிகத்தின் வளர்ச்சியின் மற்றொரு முக்கிய திருப்பங்கள் ஆகும்.
ஆன்லைன் வழியாக 05 சதவீதமான இணைய வழிக் கணக்குகள் பரிமாறப்படுவதாக சமூக ஊடகங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 70 சதவீதமான உலகளாவிய நுகர்வோர், டிஜிட்டல் கட்டண முறைமையினால் பாதுகாப்பு இல்லையென்று கவலை கொண்டுள்ளனர்.

மாற்றீட்டு வர்த்தகத்தில் இலங்கையானது கிழக்கு, தெற்கு, தென்கிழக்காசியாவில் முதல் பத்து இடங்களில் மின் வணிகத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றது. இந்த தரவரிசை 2017 ஆம் ஆண்டு அங்டாட் (UNCTAD) மின் வணிக குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இலங்கையானது 144 நாடுகளில் 73 ஆவது இடத்தை வகிக்கின்றது.

தரவு நிறுவனமான ஸ்டெட்டிஸ்டிகாவின் மதிப்பீட்டின் படி, இலங்கையர்களில் 25 சதவீதமானோர் முகநூல் உட்பட அனைத்து விதமான சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றன. ஸ்மார்ட் போன் மற்றும் சமூக ஊடக பயன்பாடு உச்சளவு உள்ள போதும், இலத்திரனியல் வணிகத்துக்கான பயன்பாடு இன்னும் குறைந்த மட்டங்களிலேதான் இருந்து வருகின்றது.

உதாரணமாக, இலங்கையின் உள்நாட்டு சந்தையின் நுகர்வோர் விற்பனையில் ஒரு சதவீதம் மட்டுமே, இலத்திரனியல் வர்த்தகம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் வருடாந்த உள்ளூர் இலத்திரனியல் வணிகம், விற்பனைப் பெறுமானம் கிட்டத்தட்ட 19 மில்லியன் டொலர்கள் அல்லது சுமார் 3000 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்துறையின் மெதுவான வளர்ச்சிக்கான மற்றொரு காரணம் இலத்திரனியல் வர்த்தக ஆரம்பம், வங்கி நிதித்துறையிலிருந்து போதிய அளவிலான ஆதரவை பெற்றுக்கொள்ளாமையே.
இலங்கையின் நுகர்வோர், ஸ்மார்ட் போன் பயன்பாட்டில் மிக உயர்ந்த விகிதத்தைக் கொண்டிருந்த போதிலும், ஆன்லைன் விறபனையில் பாதுகாப்பற்ற தன்மை காரணமான பயத்தினால் இவ்வாறான பரிவர்த்தனையில் அக்கறை காட்டுவது குறைவாக உள்ளது.

எனவே, இவ்வாறன இலத்திரனியல் வணிகச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி நுகர்வோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தினால் இந்த நவீன விற்பனைத் துறை உயர்வடையும் என்றார்.

இந்த நிகழ்வில் வரவேற்பு உரையை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசித்த திலகரத்னவும், தொடக்க உரையை சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் இணைத்திட்ட ஆலோசகர் கில்ஸ் செப்பலும், சிறப்புரையை சர்வதேச வர்த்தக நிறுவனத்தின் இலத்திரனியல் வணிக நிபுணர் மைக்கல் கேஸ்ட் ஆகியோரும் நிகழ்த்தினர்.

இன்று ஆரம்பமான இந்த நிகழ்வு எதிர்வரும் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

FB_IMG_1521102821100 FB_IMG_1521102829313 FB_IMG_1521102850660

LEAVE A REPLY