திருகோணமலையில் அசிற் வீச்சு மற்றும் வாள் வெட்டில் மூவர் படுகாயம்

0
172

(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காந்திநகர் கிராமத்தில் இடம்பெற்ற அசிற் வீச்சு மற்றும் வாள் வெட்டுச் சம்பவங்களில் மூவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இளைஞன் ஒருவருக்கே முதலில் அசிற் வீசப்பட்டுள்ளது.

இதனை அவதானித்த அவரது சகோதரர்கள் அசிற் வீசிய நபரைப் பிடிப்பதற்காக துரத்திச் சென்றுள்ளனர்.

விபரீதத்தை உணர்ந்த அசிற் வீசியவரின் சகபாடிகள் ஓடிச் சென்று அசிற் வீசிய நபரை எவரும் பிடித்துக் கொள்ளாதவாறு காப்பாற்றியதோடு அசிற் வீசிய நபரைத் துரத்தி வந்தவர்கள் மீது சரமாரியாக வாள்வீசித் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

அசிற் வீச்சுக்கு உள்ளானவரும் வாள்வெட்டுக்கு இலக்கான இருவருமாக இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் பற்றி விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினர்.

அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டில் இடம்பெற்று வந்த வாள்வெட்டு, அசிற் வீச்சுத் தாக்குதல்கள் தற்போது திருகோணமலைக்கும் விரிவடைந்திருப்பது குறித்து பொது மக்கள் அதிர்ச்சியும் வெறுப்பும் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY