உடலுக்கு ஊறுவிளைவிக்கும் உணவுகள்

0
236

மூன்று வேளை உணவை போல, மருந்துகளையும் உட்கொள்ளும் அளவுக்கு நோய்கள் பெருகிவிட்டன. அதற்கு முக்கிய காரணம் நமது உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம். இதுதான் ஆரோக்கியமான உணவு என்று நாம் நம்பும் பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளில் கூட நச்சுத்தன்மை இருப்பதாக கூறுவது வேதனை அளிக்கிறது. அவற்றை விளைவிக்கும்போது உரம் என்ற பெயரில் ரசாயனத்தை கலந்து விடுகிறோம். பின்னர் எங்கிருந்து ஆரோக்கியமான விளைபொருட்களை பெறுவது?

விற்பனை கூடங்களிலும் ஆப்பிள் பழத்தில் மெழுகு பூசுவது, மாம்பழத்தை செயற்கை முறையில் பழுக்க வைப்பது, அரிசி, கோதுமை, பருப்பு, காபி தூள் போன்ற பல்வேறு பொருட்களில் கலப்படம் செய்வது என ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கிறார்கள். அதுமட்டுமின்றி, அவசர உலகில் பாஸ்ட் புட் என்கிற துரித உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் புற்றீசலாய் பாஸ்ட் புட் கடைகளும் பெருகிவிட்டன. சுவைக்கு ஆசைப்பட்டு சாப்பிடும் நம்மில் பலரும் அந்த உணவு சுகாதாரமான முறையில் தயாரித்து விற்கப்படுகிறதா? என்ற ஆராய்ச்சிக்குள் நுழைவதில்லை. விளைவு, நோய்களை விலைக்கு வாங்குகிறோம்.

கெட்டுப்போன எண்ணெயை பயன்படுத்துவது, தடை செய்யப்பட்ட கலர் பொடியை சேர்ப்பது, புழுதி படுமாறு உணவுகளை வைத்திருப்பது, உடல் கோளாறு ஏற்படுத்தும் அஜினமோட்டோவை சேர்ப்பது என பல துரித உணவு கடைகள் மீது குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படுகின்றன. பெரிய ஓட்டல்களிலும் கூட சுகாதாரமான, உடலுக்கு ஊறு விளைவிக்காத முறையில் உணவு வகைகள் தயார் செய்யப்படுவதில்லை என்ற புகார்கள் எழுகின்றன.

நாம் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சாலையோரக் கடைகள், ஓட்டல்களில் சீரான இடைவெளியில் தொடர் ஆய்வுகளை நடத்தி தப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதே போல தள்ளுவண்டி கடைக்காரர்கள் முதல் பெரிய ஓட்டல் உரிமையாளர்கள் வரை வாடிக்கையாளர்களை தெய்வமாக கருதுவதை காட்டிலும் சக மனிதர்களாக மதித்து ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க முன்வர வேண்டும். சுவை தேடும் நாக்கை நம்பாமல், சுகாதாரமும், ஆரோக்கியமும் தரும் உணவுகளை நாடுவது நமக்கு நலம்.

LEAVE A REPLY