அட்டப்பள்ளம் மயான காணி விவகாரம்; 21 பேர் பிணையில் விடுதலை

0
370

(பாறுக் ஷிஹான்)

அட்டப்பள்ளம் மயான காணி சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் போடப்பட்டு இருந்த இக்கிராமத்தை சேர்ந்த 21 பேர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (05) திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அக்கரைப்பற்று நீதிவான் முஹமட் பஸீல் இவர்களை தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவித்து வழக்கை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இவர்களை ஆதரித்து சட்டத்தரணிகளான வி. சந்திரமணி, ஜெகநாதன், என். சிவரஞ்சித், ஆர்த்திகா, முஹமட் பிர்னாஸ் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

இவ்வழக்கோடு சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்ட இருவர் இதே நீதிமன்றத்தால் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ள நிலையிலும், இரு சமூகங்களுக்கும் இடையிலான பிரச்சினையில் நீதிமன்றம் முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என்பதாலும் இவர்களுக்கு பிணை வழங்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரினார்கள்.

நீதிவான் முஹமட் பஸீல் இவர்களின் வாதங்களை கவனமாக செவிமடுத்தார். அத்துடன் இவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதை பொலிஸார் ஆட்சேபிக்கவில்லை. சட்டவிரோதமாக கூட்டம் கூடியமை, அத்துமீறி காணிக்குள் பிரவேசித்தமை, அரசாங்க அதிகாரியான உதவி பிரதேச செயலாளரை தாக்கியமை, அரசாங்க வாகனத்துக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரிலேயே இரு பெண்கள் அடங்கலாக அட்டப்பள்ளத்தை சேர்ந்த 23 பேர் கடந்த வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர் என்பதும் இரு பெண்களையும் நீதிமன்றம் பிணையில் விடுவித்து ஏனையோரை விளக்கமறியலில் போட உத்தரவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

sss (1) sss (4)

LEAVE A REPLY