கொண்டதை கோளையாக்காமல் மானத்தை காப்பாற்றிய ஹக்கீம்

0
487

இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒலுவில் நகருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதனை பலரும் அம்பாறை விஜயம் என்று தவறாக அழைத்திருந்தனர்.

அண்மையில் அம்பாறை நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கலவரம் இடம்பெற்றிருந்ததால், அங்கு தான் அவர் செல்லப்போகிறார் என்று தவறான கற்பனையில் சொன்னார்களோ தெரியவில்லை. அம்பாறை சம்பவத்தை தங்களது அரசியலுக்கு பயன்படுத்தும் வகையில், மு.கா பிரதமரை அழைத்து வரும் ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.

அவரும் நேற்று சனிக்கிழமை வர உறுதியளித்ததாக செய்திகள் பரவின. இருந்தாலும் குறித்த தினம் வருகை தந்திருக்கவில்லை.

குறித்த தினத்துக்கு மறுநாளான இன்று வருகை தந்திருந்தார்.சில வேளை அவசர வேலை காரணமாக பிரதமரின் வருகைகள் தடைப்படலாம். பிரதமர் பதவியானது அதிகம் வேலைப்பளு மிக்க பதவியாகும். ஒரு பிரதமரின் ஒரு நிகழ்வு தடைப்படுமாக இருந்தால், அதற்கான காரணத்தையும் அறிவித்தலையும் முன் கூட்டியே அறிந்துகொள்ள முடியும். அனைவரும் சனிக்கிழமை பிரதமரை எதிர்பார்த்துக்கொண்டே இருந்தனர். இருந்த போதிலும், சமூகம் தந்திருக்கவில்லை.

இது பிரதமரை அழைத்து வரப்போகிறோம் என தம்பட்டம் அடித்த மு.கவினருக்கு பலத்த அவமானத்தை ஏற்படுத்தி இருந்தது. இதன் பிறகு அமைச்சர் ஹக்கீம் ஏதாவது சொன்னால், மக்கள் அனைவரும் அதனை நகைச்சுவையாக நோக்கும் நிலையே ஏற்பட்டிருந்தது. இதனை தவிர்க்க அமைச்சர் ஹக்கீம் பிரதமரை அம்பாறைக்கு அழைத்து வந்துவிட்டேன் என கூறியாக வேண்டும்.

பிரதமருக்கு பாதிக்கப்பட்ட அம்பாறை நகருக்கு செல்ல முடியாத நிலை. அவரை அமைச்சர் தயா கமகே தடுத்ததாக ஒரு சிறு தகவல் உள்ளது. இவ்விரண்டையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ள வேண்டுமாக இருந்தால், அம்பாறை மாவட்டத்தில் உள்ள குறித்த பாதிக்கப்பட்ட பிரதேசம் இல்லாமல் வேறு ஒரு இடத்துக்கு சென்றுவிட்டால் சரி. இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்று, ஒலுவில் கடலரிப்பாகும். எனவே, அவரை ஒலுவில் அழைத்துச் சென்றால், அந்த பிரச்சினையையும் பார்க்கவே சென்றதாக, மக்கள் சிறிதளவாவது ஏற்றுக்கொள்ளும் வகையில் மு.காவினரால் கூறிக்கொள்ள முடியும். தாங்கள் மக்களிடத்தில் கூறியவைகளை பொய்யாக்காமல் ஏதோ ஒரு விதத்தில் சமாளித்துக்கொண்டார்கள். இதனைத் தான் “கொண்டதை கொளையாக்காமல்” நடத்தல் என்பதாகும்.

தற்போது, பிரதமர் அம்பாறை நகருக்கு விஜயம் செய்து, குறித்த இடங்களை பார்வை இடுவதால், பெரிதாக ஒன்றும் நிகழ்ந்துவிடப்போவதில்லை. கலவரம் நிகழ்ந்து கொண்டிருக்கையில் சென்றால், அதுவே பயனுள்ளதாகும். ஒரு அரச தலைவர் பாதிக்கப்பட்ட இடத்துக்கு நேரடியாக சென்று, பார்வை இடுவது வழமை. அந்த வழமையை கூட பிரதமரால் கடைப்பிடிக்க முடியவில்லை.

பிரதமர் குறித்த பாதிக்கப்பட்ட அம்பாறை நகருக்கு செல்லாமையை வைத்து மு.காவை அசிங்கப்படுத்தி பேசுவது நியாயமன்று. அவரை குறித்த பாதிக்கப்பட்ட அம்பாறை நகர பிரதேசத்துக்கு அழைத்துச் செல்ல முடியாமல் தான், ஒலுவிலுக்கு அழைத்துச் சென்றிருக்கும் என்பது வெளிப்படையான விடயம். இங்கு பிரச்சினை பிரதமரிடமுள்ளதை, நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.

. இன்றைய முஸ்லிம் அரசியல் வாதிகளில் அதிகமானவர்கள் அவருடன் தான் ஒட்டிக்கொண்டுள்ளனர். இதனை வைத்து வைவதாக இருந்தால், அனைவரையும் வைதல் வேண்டும். மு.கா நினைத்தது போன்று பிரதமர் குறித்த தாக்கப்பட்ட பள்ளிவாயல் சென்றிருந்தால், எதிர்காலத்தில் இவ்வாறானவற்றை செய்ய நினைப்போருக்கு சிறு (பெரிதாக இல்லை) அச்சத்தை ஏற்படுத்தல் போன்ற முஸ்லிம்களுக்கு சாதகமான விடயங்கள் நடந்திருக்கும். இதனை மு.கா அரசியலுக்காக செய்தாலும் நன்மையில்லாமல் இல்லை. எனவே, இந்த கோணத்தில் நோக்குகையில் மு.காவை பாராட்டியாக வேண்டும்.

பிரதமர் குறித்த இடம் செல்லாமையால் மு.கா அவமானப்பட்டது உண்மை. அது பெற்ற அவமானம் முஸ்லிம் சமூகம் என்ற காரணத்துக்காக என்பதை மறுத்துவிட முடியாது. இதன் மூலம் அவமானத்தை பெற்றுக்கொண்டது மு.கா மாத்திரமல்ல, ஒவ்வொரு முஸ்லிமும் தான். இதனை வைத்து பிரதமர் ரணிலை மாத்திரம் குற்றம் சுமத்துவது பொருத்தமானதல்ல. அவர் ஒலுவிலுக்காவது வந்தார், ஜனாதிபதி மைத்திரி..?

நாம் இந்தளவு புறக்கணிப்புக்களை சந்திக்க முஸ்லிம் அரசியல் வாதிகள் கடைப்பிடிக்கும் அரசியல் முறைமை பிரதான காரணமாகும். இந்த கோணத்தில் நோக்குகையில் மு.காவும் குற்றவாளியாகிறது. குறித்த பாதிக்கப்பட்ட இடத்துக்கு பிரதமரால் வர முடியாதென்றால், அவரை மு.கா ஒலுவிலுக்கு அழைத்து சென்றிருக்க கூடாது.

அவரை குறித்த பாதிக்கப்பட்ட இடத்துக்கு அழைத்துச் செல்லும் திராணி மு.காவுக்கு இல்லை. அவர்கள் யானையை மரத்தில் கட்டிப்போடவில்லை என்பதை அறிய இதனை விட சான்று தேவையில்லை. இது அம்பாறை மாவட்டத்தில் தயா கமகேயை விஞ்சி எந்தவித செயற்பாடுகளும் நடைபெறாது என்பதை எடுத்து காட்டுகிறது.. எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம்கள் ஐக்கிய தேசிய கட்சியை புறக்கணித்து பிரதமர் ரணிலுக்கு பாடம் புகட்டுதல் பொருத்தமாக அமையும். அதுவன்றி அவரின் ஒலுவில் வருகையை புகழ்வதை போன்ற மடமை வேறு எதுவும் இராது. இதனை அறிந்த பிரதி அமைச்சர் ஹரீஸ், பிரதமர் ரணில் தைரியமற்றவர் என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

LEAVE A REPLY