குமார் பொன்னம்பலத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முஸ்லிம் சிரேஷ்ட சட்டத்தரணிகள்

0
208

(முகம்மத் இக்பால்-சாய்ந்தமருது)

அம்பாறை பள்ளிவாசல் தாக்குதலில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், அம்பாறை காசீம் ஹோட்டலை தாக்கிய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்கள்.

நூற்றுக்கணக்கான சிங்களவர்களும், பௌத்த துறவிகளும் நீதிமன்றத்தினை சூழ்ந்திருந்த ஓர் பதட்டமான நிலையிலேயே வழக்கு விசாரணைகள் நடைபெற்றிருந்தது.

இந்த வழக்கில் முஸ்லிம்கள் சார்பாக மூன்று இளம் சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தார்கள். அதேநேரம் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு போலீசார் விருப்பம் தெரிவித்ததனாலும், இது ஓர் தனிப்பட்ட சிறிய விடயம் போன்று கான்பிக்கப்பட்டதாலும் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டார்கள்.

இந்த வழக்கில் துணிச்சலுடன் களம் இறங்கிய எமது மூன்று சட்டத்தரணிகளையும் நாங்கள் பாராட்டியாக வேண்டும். அதேநேரம் எமது சமூகத்தில் எத்தனையோ சிரேஷ்ட சட்டத்தரணிகள் இருந்தும் எவரும் இதில் ஆஜராகவில்லை.

குறிப்பாக சம்பவம் நடைபெற்ற அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த சிரேஷ்ட முஸ்லிம் சட்டத்தரணிகளுக்கு இந்த வழக்கில் ஆஜராவது கட்டாய கடமையாகும். இருந்தும் அவர்களால் இதில் ஆர்வம் காட்டபடாதது ஒரு கவலையான விடயமாகும்.

அவ்வாறு சிரேஷ்ட சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆஜராகி இருந்தால் சில நேரங்களில் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவது பற்றி நீதவான் மீள்பரிசீலனை செய்ய வாய்ப்பிருந்தது.

இந்த நேரத்தில் சிரேஷ்ட சட்டத்தரணியான மாமனிதர் குமார பொன்னம்பலம் அவர்களின் துணிச்சலும், அவர் தனது சமூகத்தின் மீது வைத்திருந்த உறுதியான பற்றுதலையும் நாம் மறந்துவிட முடியாது.

யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தமிழ் இளைஞ்சர்கள் கேள்வி கணக்கின்றி புலிகள் இயக்கத்தினர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படாமல் நீண்டகாலங்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்கள்.

இவ்வாறானவர்களுக்கு கொழும்பிலே உதவுவதற்கு யாருமற்ற நிலையில் துணிந்து நின்று களத்தில் இறங்கியவர்தான் மாமனிதர் சட்டத்தரணி குமார் பொன்னம்பலம் ஆவார்.

மிகவும் பிரபலம்வாய்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியான இவர், அதி கூடிய தொகையினை பெற்றுக்கொண்டே வழக்குகளில் வாதாடுவார். அப்படிப்பட்டவர் தனது வறிய இளைஞ்சர்களுக்காக எந்தவித பணமும் பெறாமல் இலவசமாக தனது சமூகம் என்ற உணர்வில் மட்டும் தானும் தன்னை சார்ந்தவர்கள் மூலமாக வழக்குகளில் வாதாடி புலிகள் என்ற சந்தேகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பல அப்பாவி தமிழ் இளைஞ்சர்களை விடுதலை செய்ய வழிவகுத்திருந்தார்.

இறுதிவரைக்கும் சமூகத்துக்காக பயணித்து தனது உயிரை இழந்தார். இவரை தமிழ் சமூகம் ஓர் மாமனிதராக இன்றும் போற்றுகின்றது. அவரை போன்று எமது முஸ்லிம் சிரேஷ்ட சட்டத்தரணிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக வருகின்ற பிரச்சினைகளுக்கு சட்டத்துறையை பாவித்தால் குமார் பொன்னம்பலத்தை போன்று வரலாறு அவர்களை போற்றும். இல்லாதுவிட்டால் இவர்களால் சமூகத்துக்கு எந்தவித பிரயோசனமுமற்றவர்கள் என்ற நிலையையே தோற்றுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

LEAVE A REPLY