அந்தக் கிணறு

0
414

(Mohamed Nizous)

பிள்ளைப் பருவத்துப்
பெருங் கிணறும் திலாந்தும்
உள்ளத்தின் நினைவுகளில்
ஊற்றெடுக்கும் அடிக்கடி.

அந்தப் பெருங் கிணறு
ஆழமாய் அகலமாய்
கமுக மரம் அருகில்
கனகாலம் இருந்தது.

இடுப்பு உயரம் வரை
எழுப்பிய வட்டச் சுவர்.
ஐபோண் பெட்டி அளவில்
அதில் ஒரு இடைவெளி
சவர்க்காரம் வைத்தால்
சரியாமல் இருக்கும்.

ஆர்ட்டிலறி குழல் போல்
ஆகாயம் நோக்கியிருக்கும்
திலாந்தைப் பிடித்து
அழுந்திக் கிணற்றின்
உள்ளே அனுப்ப
உள்ள வாளியிலே
நீர் நிறைந்த பின்னர்
நேரே மேலெழும்பும்.
திலாந்தின் பின்னால்
திரண்ட பாரத்தால்
நியூட்டனுக்குப் பயந்து
நேரே மெலெழும்பும்.

காலைப் பொழுதில்
கமுக மரம் பூச்சொரிய
வாளி நீர் அள்ளி
வார்க்கின்ற போது
ஓடுகின்ற நீர்
ஓடையால் சென்று
முருங்கை மர வேரை
முழுசா சார்ஜ் பண்ணும்.

உச்சி வெய்யிலில்
உள்ளே எட்டிப் பார்க்க
இன்னுமொரு சூரியன்
இருக்கும் கிணற்றுள்

பின்னேர விளையாட்டில்
பிள்ளைகள் ஒழிக்க
கிணற்றின் பின்னால்
கிடப்பான்கள் குந்திக் கொண்டு

ராவு ஆகினா
ராத்தாமார் கை பிடித்து
போக வேண்டும் கிணற்றுக்கு
பொல்லாத பயம் உள்ளே

கோடையில தோண்டி
கொட்டிறக்கிக் கட்டியதாம்
கிராமமே காய்ந்தாலும்-அந்தக்
கிணறு காயாது.

மாரி காலத்திலே
மள மளண்ணு நீர் கூடும்.
யாரும் விழுந்திட்டா
இறப்பு நிச்சயம்.
கிணற்றுப் பக்கம்
கிட்டப் போனாலும்
உம்மாவின் சத்தத்தில்
உயரக் காகம் பறக்கும்.

எப்ப வெட்டுவானோ
எவ்வளவு பில் வருமோ
அளவு தாண்டிவிட்டால்
அப்புறம் டபுளாமே!
இப்படிக் கணக்குகள்
எதுவுமே இல்லாது
அள்ளி அள்ளி ஊத்தி
அழுக்குக் கழுவியதை
சின்னவளுக்கு சொல்ல
சிரித்துக் கேட்டாள்
இடையில கரண்டு போனால்
எப்பிடித் திலாந்தியங்கும்?

இன்று குளியலறை
இலக்ட்ரிக் வோஸிங் மெஷின்
என்று இருந்தாலும்
இளமைக் காலத்தில்
மொண்டு அள்ளி
முழுதாய்க் குளித்த சுகம்
என்றும் கிடைக்கவில்லை
ஏக்கம் மனதுக்குள்

LEAVE A REPLY