ஏறாவூர் நகர சபையில் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் விரைவில் தீர்மானம்: முன்னாள் மாகாண அமைச்சர் சுபைர்

0
624

(முகம்மட் அஸ்மி)

கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் ஏறாவூர் நகர சபையில் எந்த ஒரு தரப்பும் தனித்து ஆட்சி அமைக்க கூடிய அளவிற்கு அறுதி பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளாததால் கூட்டு ஆட்சியே அமைக்க வேண்டி இருப்பதால் பல்வேறு தரப்புக்களும் காய் நகர்த்தல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நேரத்தில், ஏறாவூர் நகர சபையில் முஸ்லிம் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து சுதந்திர கட்சி ஆட்சி அமைக்க போவதாக ஊடகங்களில் வெளி வந்துள்ள தகவலின் உண்மைத் தன்மை என்ன என முன்னாள் மாகாண அமைச்சர் சுபைர் இடம் வினவிய நேரத்தில் அவர் தெரிவித்ததாவது, இது தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா தன்னுடன் தொடர்பு கொண்டு கூட்டாட்சி தொடர்பில் அழைப்பு விடுத்தமை உண்மையே என தெரிவித்தார்.

அத்துடன் இதுவரை எந்த உறுதியான பதில்களையும் தான் வழங்க வில்லை. ஆயினும் இது தொடர்பில் தனது ஆலோசனைக்கு குழுவோடும், ஆதரவாளர்களோடும் கலந்து பேசிய பின்னர், கட்சி உயர் மட்டத்தின் கவனத்திட்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் இறுதியாக அனைவரின் ஒப்புதலோடு, ஏறாவூரின் எதிர்காலம், அபிவிருத்தி முன்னெடுப்புக்கள், சமூக நோக்கு உட்பட பல விடயங்களை கவனத்திற் கொண்டு தன்னால் விடுக்கப்படும் நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் இணைந்து செயற்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏறாவூர் நகர சபைக்காக முஸ்லிம் தேசிய கூட்டமைப்பில் போட்டி இட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் அணி 5 ஆசனங்களை பெற்றுள்ளதுடன், ஐக்கிய தேசிய கட்சியில் போட்டி இட்ட முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தரப்பு 4 ஆசனங்களையும், முன்னாள் மாகாண அமைச்சர் சுபைர் தலைமையில் போட்டியிட்ட சுதந்திர கட்சி 3 ஆசனங்களையும் பெற்றதுடன், தமிழ் அரசுக்கட்சி 2 ஆசனங்களும், ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சுயேட்சைக் குழு ஆகியன தலா 1 ஆசனத்தையும் பெற்றுள்ளதால் எந்த ஒரு தரப்பிற்கும் பெரும்பான்மை பலம் அற்ற நிலையில் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்வதில் பிரதான அரசியல் குழுக்கள் ஆடு புலி ஆட்டம் ஆட ஆரம்பித்துள்ளமை இங்கு குறிப்பிடத் தக்கது.

LEAVE A REPLY