அமைச்சர் ஹக்கீம் , எம்மை ஏனையவர்கள் இழிந்து பேசும் போது வாய் திறந்து பேசுவாரா?

0
161

சபீக் ரஜாப்தீனின் சர்ச்சை, அவரது இராஜினாமாவோடு சற்று தணிந்துள்ளது. இருந்தாலும், இதன் மூலம் கிழக்கு மாகாண மக்கள் ஏமாற்றப்படுகிறார்களா என சிந்திப்பதும் அவசியமாகிறது. அவரது பேச்சு கிழக்கு மாகாண மக்களை உச்ச அளவில் கேவலப்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இவரது இராஜினாமா மூலம், இவரது குற்றம் போலி முக நூல் குற்றச் சாட்டுகளுக்கு அப்பால் மிகத் துல்லியமாக நிரூபணமாகியுள்ளது. இவர் மு.கா என்ற கட்சியின் தேசிய அமைப்பாளாராக மிக நீண்ட காலமாக உள்ளார். அது மாத்திரமன்றி, இவர் நீர் வழங்கல் அதிகார சபையின் பிரதி தலைவராகவும் இருந்துள்ளார்.

நீர் வழங்கள் அதிகார சபையின் தேவை ஒன்றை நிறைவேற்றிக்கொள்ள கிழக்கு மாகாண மக்கள் யாராவது இவரிடம் சென்றிருந்தால், இவர் அவர்களை எப்படி கவனித்திருப்பார்? ஒரு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி என்பது மிக முக்கியமானது. கட்சி தேவைகளுக்காக இவரிடம் கிழக்கு மாகாண மக்கள் சென்றிருந்தால், இவர் கிழக்கு மாகாண மக்களை, என்ன கண்ணோட்டத்தில் பார்த்திருப்பார்? அவர்களை எவ்வாறு பயன்படுத்தி இருப்பார்?

இவருக்கு நீர் வழங்கள் அதிகார சபையின் பிரதி தலைவர் பதவியை அமைச்சர் ஹக்கீமே வழங்கியிருப்பார். இது கட்சி சார்ந்த ஒரு பதவியல்ல. அமைச்சர் ஹக்கீம் இப்படியான மன நிலை உள்ள ஒருவருக்கு, மிக முக்கியமான பதவியை வழங்குகிறார் என்றால், அமைச்சர் ஹக்கீமின் கிழக்கு மாகாண மக்கள் பற்றிய மன நிலை எவ்வாறு இருக்கும்? அமைச்சர் ஹக்கீமின் மனோ நிலையை அறிந்துகொள்ள, இது ஒரு அளவுகோலாகும். கிழக்கு மாகாண மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தினால் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்ற விடயம் நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. அவர் இவ்வாறானவர்களை தனக்கு நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம், அது உண்மையே என்பதற்கு சான்றுபகர்கிறது.

கத்தரிக்காய் முற்றி சந்தைக்கு வந்த பிறகு, அது பற்றி கதைப்பதில் வேலை இல்லை. இவர் இவ்வாறான மனோ நிலை கொண்டவர் என்பதை அறிந்துகொண்டு, அமைச்சர் ஹக்கீம் ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால், அவரை தலை மீது தூக்கி வைத்து கொண்டாடியிருக்கலாம். இப்போது கூட, அமைச்சர் ஹக்கீமோ அல்லது மு.காவோ எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் தானாக பதவி விலகியுள்ளார். இவர் மு.காவினால் விசாரணை செய்யப்பட்டு, இவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவரது உயர்பீட உறுப்பினர் பதவி கூட பறிக்கப்படுதலே பொருத்தமானது. அவர் தொடர்பான சில சர்ச்சைக்குரிய விடயங்கள் பற்றி ஏற்கனவே பல முறைப்பாடுகள் உள்ளன. இது வரையில் இவைகள் பற்றி மு.கா கட்சி விசாரித்த வரலாறும் இல்லை. பிரச்சார மேடைகளில் வாக்குகளை பெறுவதற்காக மாத்திரம், இது குர்ஆன் ஹதீஸை அடிப்படையாக கொண்ட கட்சி என்பார்கள்.

கிழக்கு மாகாண மக்களின் தன் மானத்தை, சபீக் ரஜாப்தீனின் கேள்விக்குட்படுத்தியுள்ள போதும், அமைச்சர் ஹக்கீம் இதுவரை வாய் திறந்து எதுவும் பேசியதாகயில்லை. இவர் கிழக்கு மாகாண மக்களைப் பற்றி பேசும் போதே, அதனை எதிர்த்து கதைக்க இயலாத அமைச்சர் ஹக்கீம் , எம்மை ஏனையவர்கள் இழிந்து பேசும் போது வாய் திறந்து பேசுவாரா? இவர் எப்படி கிழக்கு மாகாண மக்களின் பலத்தில் உயிர் வாழும் மு.கா என்ற கட்சியின் தலைமைத்துவத்துக்கு பொருத்தமானவர். இதில் விசாரணை செய்ய ஒன்றுமில்லை. அனைத்தும் பகிரங்கமானவை. குறைந்தது, இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் வாய் திறந்து ஏதாவது பேச வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

LEAVE A REPLY