ஆசிரியர்களை நியமிக்குமாறு பணிப்புரை

0
141

(அப்துல்சலாம் யாசீம்)

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட கட்டுமுறிவுக்குளம் பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையை மிக விரைவில் தீர்த்து வைப்பதாக கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் பணிப்புரைக்கமைவாக இப்பாடசாலைக்கு நேரடியாகச்சென்று அப்பாடசாலையின் குறைபாடுகளை கண்டறிந்து அக்குறைபாடுகளை தீர்த்து வைப்பதாகவும் கிழக்கு ஆளுனர் செயலாளர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இப்பாடசாலையில் பதினாறு ஆசிரியர்கள் வெற்றிடம் காணப்படுகின்ற போதிலும் ஏழு ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இப்பாடசாலைக்கு ஆசிரியர்களை நியமித்து தருமாறு பல தடவைகள் மாகாண கல்விப்பணிப்பாளர் வலயக்கல்வி பணிப்பாளர்களுக்கும் கோரிக்கை விடுத்தும் இன்றுவரைக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லையெனவும் விஷனம் தெரிவிக்கின்றனர்.

இப்பாடசாலையின் பற்றாக்குறை தொடர்பாக இன்று புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளரை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இச்சந்திப்பில் கிராம அபிவிருத்தி சங்கம் மாதர் சங்கம் பாடசாலை அபிவிருத்தி சங்கம் என பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் வருகை தந்தனர்.

அத்துடன் 1972ம் ஆண்டு ஆரம்பித்து நாற்பத்தைந்து வருட நிறைவிலும் ஒரு ஆங்கில ஆசிரியர் இன்றியே கற்பிக்கப்பட்டு வருவதாகவும் கணிதம் ஆங்கிலம் வரலாறு போன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லையெனவும் 01ம் 02ம் 04ம் ஆண்டுகளுக்கு கற்பிப்பதற்கு ஆசிரியரே இல்லையெவும் சுட்டிக்காட்டினர்.

இதனையடுத்து கிழக்கு மாகாண ஆளுனரின் பணிப்புரைக்கமைவாக அப்பாடசாலைக்கு சென்று குறைபாடுகளை கண்டறிந்து அக்குறைபாடுகளை மிக விரைவில் தீர்த்து வைப்பதாகவும் கிழக்கு மாகாண ஆளுனர் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்த்தன இதன் போது உறுதியளித்தார்.

LEAVE A REPLY