மு.கா.தனித்து போட்டியிடுவது பெரும் கட்சிகளுக்கு சவாலாகும்: கலேவலயில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்

0
77

வட்டார முறைத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தனித்துவமான பிரவேசம் இன்று பெரும் கட்சிகளுக்குள்ளும் பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்திலுள்ள கலேவல பிரதேச சபையின் வேட்பாளர் அனீஸ் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும் போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் அங்கு உரைநிகழ்த்திய அமைச்சர் ஹக்கீம்,

இந்த இயக்கத்தின் வரலாற்றிலே பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இந்த புதிய வட்டார அடிப்படையிலான தேர்தலில் ஒவ்வொரு ஒவ்வொரு வட்டாரத்திற்கும் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளோம். இதன் மூலம் தங்களது கிராமங்களிலிருந்தும் பிரதிநிதிகளை பிரதேச சபைக்கு அனுப்புகின்ற வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இன்று பெரிய கட்சிகளுக்குக்கூட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரவேசம் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் சமூகத்தினுடைய வாக்குகளை சூறையாடிக்கொண்டு அக்கட்சிக்கூடாக பிரதிநிதிகளை உருவாக்கினால் கூட அக்கட்சிகளின் தீர்மானங்களை மாற்ற முடியாது.

சமூகத்திற்கான பிரச்சினைகள் எழுகின்றபோது ஆணித்தரமாக அமைச்சரவையில் பேசுவதற்கு பதிலாக அவர்கள் தயங்குகின்ற போக்கினை காணக்கிடைக்கிறது.

எம்மைப் பொறுத்தமட்டில் இந்த சமூகத்திற்கான விடுதலை இயக்கம் உணரப்படுகின்ற காலகட்டத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்களுடைய மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் இந்த இயக்கத்தை உருவாக்கிய போது அதனது நோக்கம் சிதறி வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளை, அவர்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அந்த பிரச்சினையை மேல் மட்டத்திற்கு கொண்டு செல்கின்ற தனித்துவமான இயக்கமாக இருக்க வேண்டும் என்பதாகும். இந்த இயக்கத்தினுடைய உருவாக்கத்திலிருந்து இன்றுவரை இது ஒரு பலமான, சக்திவாய்ந்த இயக்கமாக பரிணமித்து இன்று நாடுமுழுவதிலும் பெரும் ஆலமரமாக வேரூன்றியுள்ளது என்பது எல்லோரும் அறிந்துள்ள உண்மை.

அதேநேரம் இந்த இயக்கத்திலிருந்து தங்களது சுயநல விடயங்களை அடைய முடியாத போது இந்த இயக்கத்தை பிளவுபடுத்தி பிரிந்து சென்று சொந்தமாக கட்சிகளை அமைத்துக்கொண்டவர்களும்,தேசிய கட்சியில் அடைக்கலம் தேடிக்கொண்டவர்களும் என்று ஒரு பட்டியல் இருக்கிறது.

ஆனால் ஒவ்வொருவரும் தங்களுக்கான ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தனிவழி போகிறார்களே தவிர, தங்களுக்கும் ஒரு அமைச்சுப்பொறுப்பை எடுக்கவேண்டும் என்பதற்காக இந்த இயக்கத்தில் வந்து அடையாளம் பெற்றுக்கொண்டு இப்போது தங்களுக்கு தாங்களே முடிசூட்டிக்கொள்ளுவதை பார்க்க முடிகிறது. இதனால் இந்த மக்கள் இயக்கம் அழிந்து விடவில்லை. இந்த பிரச்சினை பெரிய கட்சிகளுக்கும் இருக்கின்ற சவாலாகும். தங்களது சுய இலாபங்களுக்காக கட்சித்தாவல்களை மேற்கொள்கின்றவர்களின் பட்டியல் ஐக்கிய தேசிய கட்சியிலும்,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலும் இருக்கிறது.

எம்மைப்பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்கள் இயக்கத்திலிருந்து எவ்வளுவுதான் பலம் வாய்ந்தவர்கள் பிரிந்து சென்றாலும் இந்த இயக்கத்திற்கு இருக்கின்றன மக்கள் பலத்தையும்,செல்வாக்கையும் அழிக்க முடியாது. இன்று நாடு முழுவதிலும் இந்தக்கட்சி தனித்தும் சேர்ந்தும் நாங்கள் பொட்டிட்டுக்கொண்டிருக்கிறோம்.

இந்த அரசாங்கத்தின் அங்கமாக இருந்து கொண்டு ஒருபாலாமான அரசியல் சக்தியாக இருந்துகொண்டு இந்த பிரதேசத்தின் பிரச்சினை தீர்த்துக்கொள்கின்ற ஒருசந்தர்ப்பமாக நாம் இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த பிரதேசத்திலே வாழுகின்ற நிறையப்பேர் கூலித்தொழில் செய்கின்ற வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கின்ற பெரும்பாலான மக்களுக்கு அவர்களுடைய வாழ்வாதார பிரச்சினை சரியானமுறையில் தீர்ப்பதற்கும் இந்த உள்ளூராட்சி சபையிலே உங்கள் பிரச்சனைகளை கொண்டுசெல்வதற்கும் இந்த ஊரின் சார்பாக ஒரு பிரதிநிதியை நீங்கள் தெரிவு செய்கின்ற தேவைப்பாடு இருக்கின்றமையை நன்கு உணர்ந்து கொண்டவர்களாக இந்த தேர்தலை நீங்கள் அணுக வேண்டும்.

அந்த அடிப்படையில் தான் சகோதரர் அனீஸை போன்றவர்கள் முன்னிறுத்தி வென்றெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம். கடந்த சிலவருடங்களாக இந்த பிரதேச சபையில் உங்களுக்கான பிரநிதித்துவம் இல்லாமையினால் உங்கள் பிரச்சனைகளை பிரதேச சபையிலும், இந்த கட்சியின் மேலிடத்திட்டத்திற்கும் கொண்டு செல்வதற்கு இயலாமல் போயிருப்பத்தை நாங்கள் உணர்கிறோம்.

இந்த ஊரை பொறுத்தமட்டில் ஒரு வைத்திய நிலையம் தேவை என கோரிக்கை வைக்கப்பட்டது. பிரதி சுகாதார அமைச்சர் கௌரவ பைசல் காசிம் எமது கட்சியை சேர்ந்தவர் அவரோடு பேசி அவரை இங்கே கொண்டுவந்து அதற்கான ஏற்பாடுகளை செய்துதர முடியும். இந்த விடயங்களை சாதிப்பதற்கும், செய்து முடிப்பதற்கும் எமது கட்சிக்கு கணிசமான வாக்குகளை வழங்கி சகோதரர் அனீஸையும் இந்த பிரதேச சபையின் உங்கள் பிரதிநிதியாக தெரிவு செய்ய வேண்டும்.

அதுமாத்திரமல்ல நான் என்னுடைய அமைச்சின் ஊடாக பலவேலைத்திட்டங்களை செய்ய உத்தேசித்துள்ளேன். பாரிய தம்புள்ள குடிநீர் திட்டத்தின் மூலம் இந்த பிரதேசத்திற்கு குழாய் நீர் திட்டத்தை அமுல்படுத்த உத்தேசித்துள்ளேன். அவ்வாறே இங்கேயுள்ள உள்ளக குறுக்குப்பாதைகளை செப்பனிட்டு சீர்செய்து தருகின்ற வேலையை செய்து தரமுடியும்.

எனவே எமது பிரதிநிதித்துவம் இங்கே பிரதேச சபையில் உறுதி செய்கின்ற வகையில் நீங்கள் செயற்பட வேண்டும். அதற்கான பங்களிப்பை இங்குள்ள ஒவ்வொருவரும் செயற்படவேண்டும் எனக்கூறினார்.

LEAVE A REPLY