அப்துர் ரஹ்மான் என்ற ஓரு நாகரிக அரசியல்வாதி! ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

0
418

தேர்தல் பிரசார மேடைகள் சூடுபிடித்துக் காணப்படும் இன்றைய நிலையில், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் தேர்தல் பரப்புரைகளைக் கேட்பதற்காக மக்கள் தங்கள் நேரத்தை கேளிக்கை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு ஒதுக்குவது போன்று ஒதுக்கி அங்கு செல்கின்றனர்.

ஒருவரை ஒருவர், தாக்குவது, விமர்சிப்பது மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களை விமர்சிப்பது நகைச்சுவை நடிகர்கள் போன்று பேசுவது, வாயச்சவாடல் விடுவது இப்படி இத்தியாதி.. இத்தியாதி.. விடயங்களைக் கேட்பதற்கும் கைதட்டுவதற்கும் என்றே அவர்கள்மேடைகளின் முன் ஒன்று கூடுகின்றனர். இவ்வாறான நிலைமைக்கு மக்களை சில அரசியல்வாதிகளே பழக்கி விட்டனர் என்றே கூற முடியும்.

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என்ற மூன்று பிரபல நடிகர்களுக்கும் மூன்று பிரிவான ரசிகர்கள் கூட்டங்கள் இருந்தன. அவர்களின் திரைப்படங்கள் வெளிவந்தால் போதும் திரையரங்குகள் ரசிகர்களால் நிரம்பி வழியும். கைத்தட்டல்கள், கை விரல்களை வாயில் வைத்து விசிலடித்தல் இப்படி பல..பல சுவாரஸ்யங்கள் திரையரங்கினுள் நடைபெறும். சில வேளைகளில், சோகமான பாடல்கள், காட்சிகளின் போது கூட அவற்றின் அர்த்தங்களையே என்னவென்று புரிந்து கொள்ளாமல் ரசிகர்கள் கைதட்டிச் சிரித்து உற்சாகப்படுத்தும் பாமரத் தனமும் காணப்பட்டது. அவ்வாறானதொரு நிலைமையையே இன்று சில முஸ்லிம் அரசியல்வாதிகள் எமது சமூகத்தின் மத்தியில் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மக்களைக் ருசுப்படுத்தி, சிரிக்க வைத்து, மற்றவர்களைக் கிண்டல் செய்யும் கேவலமான அரசியல் கலாசாரத்தை சில அரசியல்வாதிகள் சமூகத்தின் மத்தியில் இன்று விதைக்க முனைகின்றனர்.

சில முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூக உணர்வுடன், இதய சுக்தியுடன் பேசினாலும் மற்றைய அரசியல்வாதிகள் அதனைக் கேலிக் கூத்தாக தங்களது மேடைகளில் விமர்சித்து மக்கள் மத்தியில் சிந்தனைக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இது தவறான வழிகாட்டலும் மிக மோசமனதொரு அரசியல் பிரசார யுக்தியுமாகும்.

தங்களின் சமகால அரசியல் தேவைப்பாட்டை, வேட்காட்டை நிவர்த்தி செய்து கொள்வதற்காக இவ்வாறு செயற்படுவோர் இளைய சமூகத்தையும் அவர்களின் நாளைய வாழ்வையும் பற்றிச் சிந்திக்கிறார்கள் இல்லை.

சமூக நலனற்ற சுயநலம் கொண்ட இவ்வாறான முஸ்லிம் அரசியல்வாதிகளால் இன்று கசாப்புக்கடை கழிவுகளை கொட்டிய இடத்திலிருந்து எழும் நாற்றம் போல் எமது முஸ்லிம் அரசியல் காணப்படுகிறது.

சாதாரண ஒரு மனிதனிடம் காணப்படும் ஒழுக்க விழுமியங்கள், பண்பாடுகள் கூட சில அரசியல்வாதகளிடம் இல்லாது அவை காலடிகளில் மண்டியிடச் செய்யப்பட்டதால் எழுந்து நிற்க என்றுமே முடியாத நிலைமை தோன்றியுள்ளது.

ஆனால், இவற்றுக்கெல்லாம் வித்தியாசமான ஒருவராக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைவர் பொறியிலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களைக் காண்கிறேன். இதுவரை நான் நேரில் சந்தித்திராத ஒரேயொரு முஸ்லிம் அரசியல்வாதி என்றால் அது அப்துர் ரஹ்மான்தான். அப்படியிருந்தும் அவரது அரசியல் செயற்பாடுகள் என்னைக் கவர்ந்துள்ளன. அவரும் அரசியல்தான் செய்கிறார். ஆனால் ஒழுக்க விழுமியங்கள், பண்பாட்டு நெறிமுறைகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் மீறாத ஒருவராக காணப்படுவதனை அவரது உரைகளைக் கேட்கும் போது என்னால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

தேர்தல் மேடைகளில் அவரால் நிகழ்த்தப்படும் உரைகள், அவர் மேன்மைக்குச் சான்றான ஒரு பண்பாளர் என்பதனை உயர்த்திக் காட்டுகின்றன. அரசியல்வாதிகள் அரசியல் ரீதியாக விடும் பிழைகளையே அவர் சுட்டிக்காட்டி தட்டிக் கேட்கிறார். இதனைத் தவிர மற்றவர்களின் தனிப்பட்ட விடயங்களை அவர் விமர்சிப்பதனை நான் ஒரு போதும் கேட்டதில்லை.

சமூக உணர்வோடு அவர் வெளியிடும் கருத்துகள், ஆலோசனைகள் தேர்தல் காலத்துக்கு மட்டுமல்ல எப்போதும் தேவைப்படுவனவாகவும் சிந்திக்கத் தக்கனவாகவும் காணப்படுவதுடன் அவை அவருக்கு முடி சூடுகின்றன.

தனது தேர்தல் மேடைகளை கேலிக் கூத்தாகவும் தன்னை ஒரு நல்ல நடிகனாகவும் மாற்றிக் கொள்ளாத இந்த மனிதர் தெரிவிக்கும் மிக ஆழமான, அறிவுபூர்வமான விடயங்கள் மிகப் பெறுமதியானவை. அவற்றின் பெறுமதி உடனடியாக எமக்கும் தெரியாவிட்டாலும் காலம் அவற்றின் காத்திரத்தை உணர்த்தியே தீரும்.

இவ்வாறான மனிதர்களே எமது சமூகத்துக்கு தேவை என்பதனை நான் இங்கு கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன். நான் ஒரு வாக்காளன் என்ற ரீதியில் நான் ஆதரிக்கும் கட்சி வேறு என்ற விடயத்துக்கும் அப்பாலும் அவரது அரசியல் நாகரிகத்துக்காக நான் அவருக்கு மதிப்பளிக்க வேண்டியவனாக உள்ளேன்.

LEAVE A REPLY