உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் ஆட்சியில் ஒரு மாற்றம் ஏற்படலாம்: இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

0
244

(விஷேட நிருபர்)

காத்தான்குடியில் திங்கட்கிழமை (15) மாலை சிரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடிக்கான பிரதான தேர்தல் அலுவலகத்திதை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் தேசிய ரீதியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.

தேர்தலுக்கு பின்னர் ஆட்சியில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான நிலை காணப்படுகின்றது. இந்த நிலையில் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தப் போகின்றது.

உள்ளுரிலும் தேசிய ரீதியிலும் இந்த தேர்தல் முடிவுகள் ஒரு பாரிய மாற்றத்தினை கொண்டு வருவதற்கான நிலை காணப்படுகின்றது. சிறுபான்மையினருக்கு பாதிப்பான அரசியலமைப்பு மும்மொழிவுகளை நிறைவேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதியளிக்காது

அரசியலமைப்பு தொடர்பான மும்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது அது குறித்து கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூடி ஆராய்ந்தது.

அப்போது அரசியலமைப்பு மும்மொழிவுகளில் உள்ளடங்கியிருந்த ஜனாதிபதி முறை நீக்கம், வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடயங்களை ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கக் கூடாது என நான் எமது கட்சிக் கூட்டத்தில் தெளிவாக கூறினேன். அது தொடர்பில் நீண்ட நேரம் வாத பிரதிவாதங்கள் செய்து இறுதியாக அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்று கட்சித் தீர்மானித்தது. அதற்கமை நாடாளுமன்றத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்தது.

நாங்கள் மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்ற போது எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், எமக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் எம்மிடம் அதிகாரம் இருக்க வேண்டும்.

காத்தான்குடி நகர சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக ஆட்சியமைக்கும் போது அது எமக்கு தேசிய ரீதியில் பல நன்மைகளைப் பெற்றுத்தரும். தேசிய ரீதியில் அது பேசுபொருளாக மாறும்.

காத்தான்குடியில் இருக்கின்ற 10 வட்டாரங்களையும் மிகப்பெரும் பலத்துடன் நாங்கள் வெற்றி கொள்வோம். உறுதியான நிர்வாகத்தை, பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த நாள் முதல் நாளுக்கு நாள் எமது செல்வாக்கு ஆதரவு அதிகரித்து வருகின்றது. 1989-90ஆம் ஆண்டுகளில் என்னுடைய ஆரம்ப கால அரசியல் பயணத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இடைநடுவில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் காரணமாக அவர்கள எம்மை விட்டு பிரிந்து சென்றனர்.
அவர்கள் எம்முடன் மீண்டும் வந்து சேர்ந்துள்ளனர்.

அதேபோன்று கடந்த ஜனாதிபதி, பொதுத் தேர்தல்களில் எனக்கு எதிராக நின்றவர்கள் இப்போது என்னுடன் கைக்கோர்த்துள்ளனர். வெளிநாடுகளில் உள்ள பல சகோதரர்கள் எனது அரசியல் போக்கை பாராட்டி எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றார்.

LEAVE A REPLY