“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீது நாட்டம் கொண்டதல்ல வாக்குப்பலத்திலேயே நம்பிக்கைகொண்டிருக்கின்றது” தர்காநகரில் ரிஷாட் தெரிவிப்பு!

0
133

-ஊடகப்பிரிவு-

“முஸ்லிம் சமூகம் ஆயுதத்தின் மீதோ வன்முறை மீதோ நாட்டம் கொண்டு எந்தக் காலத்திலும் செயலாற்றியதில்லை. வாக்குப் பலத்தை மட்டுமே நம்பியிருக்கின்றது என்பதை கடந்த காலத் தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியுள்ளது” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

பேருவளை பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் முதன்மை வேட்பாளர் ஹஷீப் மரிக்கார் தலைமையில், தர்கா நகரில் நேற்று மாலை (12) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் உரையாற்றினார்.

அவர் மேலும் கூறியதாவது,
முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் கலவரங்களை ஏற்படுத்தியவர்கள் அல்லர். வன்முறைகளை பாவித்தவர்களும் அல்லர். பெரும்பான்மை மக்களான சிங்களவர்களுடனும், இன்னுமொரு சிறுபான்மையினமான முஸ்லிம்களுடனும் சகோதரத்துவத்துடனும், அந்நியோன்ய உறவுடனும் வாழ்ந்தே பழக்கப்பட்டவர்கள். தமிழ் இளைஞர்களும், சிங்கள இளைஞர்களும் ஆயுதங்களை ஏந்திய காலங்களில் கூட, அவர்கள் நிதானமாகவே செயற்பட்டிருக்கின்றனர். எவருடனும் சண்டைக்குப் போகாமல் அவர்கள் வாழ்ந்து வருகின்ற போதும், பழிகளைச் சுமத்தி,அவர்களை வம்புக்கிழுத்து, கலவரத்தைத் தூண்டி அவர்களது உடைமைகளை நாசமாக்கியும், உயிர்களை அழித்தும் இனவாதிகள் செயற்படுகின்றனர். கடந்த காலங்களில் இந்தப் பிரதேசங்களில் அவர்களின் அடாவடித்தனங்கள் அதிகரித்திருந்தன.

தர்காநகர், அளுத்கமை போன்ற பிரதேசங்களில் இனவாதிகள் அட்டகாசம் செய்த போது, நாம் இறைவனிடம் பாதுகாப்பைத் தேடினோம். அப்போது ஆட்சியிலிருந்த நாட்டுத் தலைமையிடம் இதனை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் பலதடவை கோரியபோதும், அந்தத் தலைமை பாராமுகமாகவே இருந்தது. எங்களை கணக்கிலெடுக்காததினால் வாக்குப் பலத்தினாலும், நமது ஒற்றுமையினாலுமே அவரை வீட்டுக்கு அனுப்பினோம்.

எமது சமூகத்தை எப்போதுமே அச்சத்தில் வைத்திருக்க வேண்டுமென சிலர் விரும்புகின்றனர். பதற்றமான சூழ்நிலையில் எம்மை இருக்கச் செய்து அடிமைபோல தொடர்ந்தும் எம்மை நடாத்த முடியுமென அவர்கள் நினைக்கின்றனர்.

தேர்தல் காலங்களில் எமது வாக்குகளை ஏமாற்றி சூறையாடி வரும் அரசியல் திமிங்கிலங்கள், தேர்தல் முடிந்ததும் எம்மை கிள்ளுக்கீரையாகவே பயன்படுத்தி வருவதே கடந்த கால சரித்திரம்.

அடித்தாலும், கொன்றாலும், சேவை செய்தாலும், சேவை செய்யாவிட்டாலும் முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே வாக்களிப்பர் என்ற அதீத நம்பிக்கையில் அந்தக் கட்சி செயற்பட்டு வருகின்றது.

அந்தவகையில், நாங்கள் கட்சிகளை உருவாக்கி அரசியல் செய்தால் அவர்களுக்கு அது பொறுக்குதில்லை. அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் ஆசன ஒதுக்கீடு கலந்துரையாடலின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் ஒருவர் எம்மை மலினப்படுத்தி பேசியதை நாம் இங்கு நினைவு கூருகின்றோம். முஸ்லிம்கள் செறிந்து வாழும் சில பகுதிகளை இவ்வாறான பேரினவாதக் கட்சிகள் அடையாளப்படுத்தி, இது பச்சைக் கட்சியின் கோட்டை என்றும் இது நீலக் கட்சியின் கோட்டை என்றும் கூறி, நாம் அரசியல் செய்வதை தடுக்க முனைகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது வேறு பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கோ தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் நடாத்த முடியும் என்றால், ஏன் எங்களால் முடியாது?

ஏனைய சமூகத்துக்கு கிடைக்கும் உரிமைகளும், நலன்களும் எமக்கும் கிடைக்க வேண்டும். பெரும்பான்மை சமூகங்கள் அனுபவிப்பது போன்று நாமும் அனுபவிக்க வேண்டும். இல்லையென்றால் தட்டிக் கேட்கும் அரசியல் துணிச்சல் கொண்டவர்களை எமது சமூகம் உருவாக்குவதை நீங்கள் யாரும் விலங்கிட முடியாது.

முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில், நமது வாக்குப் பலத்தின் பெறுமதியை ஆட்சியாளர்களுக்கும், அதிகாரத்தில் கோலோச்சுபவர்களுக்கும் உணர்த்த வேண்டிய தருணம் வந்துள்ளது.

கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலில் நாம் ஒற்றுமையுடன், வாக்குப் பலத்தைப் பயன்படுத்தி உணர்த்தியது போல, இந்தத் தேர்தலிலும் நாம் உணர்த்தும் போதுதான், வலிய வந்து உதவிகளை மேற்கொள்ளும் சூழ்நிலையை ஏற்படுத்த முடியும்.

இந்த தூய நோக்கத்திலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது அரசியல் பணியை முன்னெடுத்து வருகின்றது. அதனைவிடுத்து எந்தவொரு கட்சியையும் வீழ்த்த வேண்டும் என்பதற்காக நாம் அரசியல் செய்யவில்லை.

கட்சிகளையும், சின்னங்களையும் எமது இலக்கினை அடைவதற்காக பயணம் செய்யும் வாகனமாகவே நாங்கள் கருத வேண்டும். குட்டக் குட்ட குனிந்துகொண்டு நாங்கள் இருக்க முடியாது. வாக்குப் பலத்தின் மூலம் நமது ஒற்றுமையை நிரூபித்துக் காட்டினால்தான் நாம் நிம்மதியாக வாழ முடியும்.

கடந்த காலங்களில் இந்தப் பிரதேசத்தில் துன்பங்கள் ஏற்பட்ட போது, நாம் ஓடோடி வந்திருக்கின்றோம். உதவி செய்திருக்கின்றோம். பாராளுமன்றத்திலும், அமைச்சரவையிலும் இந்தப் பிரச்சினை தொடர்பில் மிகவும் காட்டமாக எடுத்துரைத்து நீதி கேட்டிருக்கின்றோம்.

அண்மையில் காலி, கிந்தோட்டையில் கலவரம் இடம்பெற்ற போது, நடுநிசி என்றும் பாராது, உயிராபத்துக்களையும் பொருட்படுத்தாது, பாதுகாப்புத் தடைகளையும் மீறி நாம் அங்கு விரைந்து நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பாடுபட்டோம். தர்கா நகரின் கலவரம் எமது கண் முன்னே நின்றதனாலேயே, காலி மக்களும் அவ்வாறான ஆபத்தில் சிக்கிவிடக் கூடாது என்ற சமூக நோக்கிலேயே நாம் அங்கு சென்றோம்.

எம்மைப் பொறுத்தவரையில் இந்தப் பிரதேசத்துக்கு வந்து அரசியல் செய்ய வேண்டிய எந்தவிதமான தேவைப்படும் எமக்குக் கிடையாது. எந்தக் கட்சிக்கும் போட்டியாக நாங்கள் இந்தப் பிரதேசத்தில் அரசியல் செய்ய வேண்டுமெனவும் நினைக்கவில்லை. நீங்கள் ஒற்றுமைப்பட்டு இந்தப் பிரதேசத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பினால், உங்களின் குரலாக அவர்கள் ஒலிப்பர். தேவைகளையும் நிறைவேற்றித் தருவார்கள் என்று அமைச்சர் கூறினார்.

26230092_1971271379555714_6096595325320759245_n 26805072_1971270676222451_605241434009594848_n 26231021_1971270682889117_4990320975434668867_n

LEAVE A REPLY