சின்னங்களையும், நிறங்களையும் மார்க்கமென எண்ணி வாக்களித்த காலம் மலையேறி வருகிறது”ரிஷாட்!

0
210

சுஐப் எம்.காசிம்

கட்சி சின்னங்களையும், அவர்களின் நிறங்களையும் நம்பி வாக்களித்த யுகம் தற்போது படிப்படியாக மாறி, மக்களுக்கு எந்தக் கட்சி இதயசுத்தியாக பணியாற்றுகின்றதோ அவர்களுக்குப் பின்னால் அணிதிரளும் சூழல் ஏற்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டத்தின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கொழும்பு புதுக்கடையில் நேற்று மாலை (11) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு அமைச்சர் உரையாற்றினார்.

மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் ரம்ஸி தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் தவிசாளர் அமீர் அலி, செயலாளர் சுபைர்தீன், மாகாணசபை உறுப்பினர் பாயிஸ், அரசியல் சட்ட விவகாரப் பணிப்பாளர் ருஷ்தி ஹபீப் உட்பட பலர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
கொழும்பு மாவட்ட முஸ்லிம் சமூகம் கடந்த கலங்களில் வாக்களிக்கும் இயந்திரமாகவே பயன்படுத்தப்பட்டமை வரலாறு. பெரும்பான்மைக் கட்சிகளின் தலைவர்கள், நமது சமூகத்தின் வாக்குகளை போலியான வாக்குறுதிகளை வழங்கி கொள்ளையடித்து, அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர், எம்மை ஏறெடுத்தும் பார்க்காத துரதிஷ்ட நிலையே நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்றது.

எமது வாக்குகளின் பெறுமதியை மதிக்கத் தெரியாத, மதிக்கத் தவறிய பல கட்சிகளின் ஏமாற்று நடவடிக்கைகளைக் கண்டே, கடந்த மாகாண சபைத் தேர்தலில் முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாவட்டத்தில் தனித்துக் களமிறங்கியது.

காலாகாலமாக யானைக் கட்சிக்கு வாக்களித்து பழக்கப்பட்ட கைகள், புதிதாக நாங்கள் அறிமுகப்படுத்திய மயில் சின்னத்துக்கு வாக்களித்து, மக்கள் காங்கிரஸுக்கு உறுப்பினர் ஒருவரை பெற்றுத் தந்தது. சிறிய கட்சியாகவும், சிறுபான்மைக் கட்சியாகவும் நாங்கள் இருந்தபோதும், கொழும்பு மாவட்டத்தில் எமக்கு அரசியல் அங்கீகாரத்தை நீங்கள் தந்தீர்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி. அரசியல் என்பது அழுக்குகள் நிறைந்த சாக்கடை என்று கல்விமான்கள் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு.

அரசியல்வாதிகள் ஏமாற்று அரசியலை மேற்கொண்டு வருவதனாலேயே அவ்வாறு கூறப்படுகின்றது. எனினும், மக்கள் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் வறுமையின் வெளிப்பாட்டினால், சமூகத்தின் கஷ்டங்களையும் துயரங்களையும் உணர்ந்து அவற்றுக்கு விடிவுகாண உதயமான கட்சி.

எமது பயணத்தை பூச்சியத்திலிருந்து ஆரம்பித்தோம். மற்றைய அரசியல் கட்சிகளை விட நாங்கள் இறைவனை முன்னிறுத்தி சமூக விடுதலையை நோக்கிப் பயணிக்கின்றோம். இந்தப் பிரதேசத்துக்கு வந்து எத்தனையோ பேர் வாக்குகளுக்காக போலி வாக்குறுதிகளை அளித்துவிட்டுச் சென்றதை நீங்கள் அறிவீர்கள். தேர்தல் முடிந்ததும் அவர்கள் உங்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள். நாங்கள் அரசியலை ஒரு சமூகப்பணியாக செய்வதால் இறைவன் எங்கள் கட்சியை நாடளாவிய ரீதியில் வியாபிக்கச் செய்து வருகின்றான்.

இந்தத் தேர்தலில் மக்கள் காங்கிரஸின் ஆதரவுத் தளத்தை உரசிப்பார்க்க நாங்கள் எண்ணினோம். கொழும்பு மாவட்டத்திலும் நாங்கள் தனித்துப் போட்டியிடவே முடிவு செய்து வேட்புமனுவையும் தயாரித்திருந்த போதும், இறுதி நேரத்தில் அது கைகூடாமல் போய்விட்டது.

ஐ.தே.க வின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க முக்கிய பாத்திரம் வகிக்கும் இந்த அரசாங்கத்தில், நாமும் பங்காளிக் கட்சியாக இருப்பதனால், கொழும்பு மாவட்டத்தில் அவர்களுடன் இணைந்து போட்டியிடுமாறு பிரதமர் ரணில் விடுத்த கோரிக்கையை நாங்கள் நிராகரிக்க முடியாது. எனவே, ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றோம்.

மக்கள் சேவையே எமது இலக்கு என்பதால் கட்சிகளோ, சின்னங்களோ எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. அண்மைய சில நாட்களுக்கு முன்னர், நான் அம்பாறை மாவட்டத்தில் பேசிய உரை ஒன்றை சிலர் திரிவுபடுத்தி, அதனை பூதாகாரப்படுத்தியிருந்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ் மயில் சின்னத்தில் போட்டியிடும் நாம், அந்தப் பிரதேசங்களில் இடம்பெறும் பிரசாரக் கூட்டங்களில் யானைக்கு வாக்களிக்க வேண்டாமென கூறாமல், நாம் வேறு எப்படிக் கூற வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது நான் ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைக்குள் நின்று சொல்கின்றேன். யானைக்கு வாக்களித்துப் பழக்கப்பட்ட மக்கள் மத்தியிலே நின்று சொல்கின்றேன். கட்சி என்பது மார்க்கமும் அல்ல. சின்னம் என்பது மார்க்கமும் அல்ல. எந்தக் கட்சி சரியான பாதையில் செல்கின்றதோ அந்தக் கட்சியை ஆதரியுங்கள். அவர்களின் பின்னால் அணிதிரளுங்கள். சின்னங்களையும், கட்சிகளையும் மார்க்கம் போல காட்டி அரசியல் நடத்தும் கட்சிகளை நிராகரியுங்கள். இதன் மூலமே நீங்கள் விமோசனம் பெறமுடியும் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.

26196451_1970141316335387_8370280151924433011_n 26731072_1970141793002006_1735669562307830165_n 26220060_1970140813002104_8502882933958119384_n

LEAVE A REPLY