மக்கள் காங்கிரசின் அத்தனை அழுக்குகளையும் YLS ஹமீட் வெளியில் வந்து சொல்ல வேண்டும் – சுபையிர் பகிரங்க அழைப்பு

0
218

எம்.ஜே.எம்.சஜீத்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது அதிருப்தியுற்றுள்ள அம்பாரை மாவட்ட முஸ்லிம்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் அடமானம் வைப்பதற்கு திறைமறைவில் சிலர் செயற்படுவதாகவும், அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றமடைவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது எனவும், எமது சமூகத்தை பாதுகாப்பதற்கு வை.எல்.எஸ்.ஹமீட் போன்றோர் களத்தில் இறங்கி போராட வேண்டும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார்.

தேசிய காங்கிரசின் தேர்தல் பிரச்சாரக்கூட்டம் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் (7) இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அம்பாரை மாவட்ட மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் மீது அதிருப்தியுற்று இருக்கும் இக்காலகட்டத்திதல் அம்மக்களை மீண்டும் ஏமாற்றுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசில் அடகு வைப்பதற்கு திறைமறைவில் சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர். எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அத்தனை அழுக்குகளையும் YLS ஹமீட் வெளியில் வந்து சொல்ல வேண்டும். அதற்காக YLS ஹமீட்டுக்கு பகிரங்க அழைப்புவிடுகிறேன். அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் தொடர்தேர்ச்சியாக ஏமாற்றப்படுவதற்கு நாம் ஒருபோதும் துனைபோகக்கூடாது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடைய அரசியல் உட்பட அனைத்து விடயங்களையும் நான் நன்கறிந்தவன். அவரை ஒருபோதும் நம்பிவிடாதீர்கள். நமது முடிவுகள் சட்டியில் இருந்து அடுப்பிற்குள் விழுந்த கதையாக இருந்துவிடக்கூடாது. நான் ஜம்மிய்யத்துல் உலமாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கின்றேன். அதற்கு இன்னும் பதிலில்லை. இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் அவருடைய அத்தனை அரசியல் நடவடிக்கைகளையும், இந்த சமூகத்தை ஏமாற்றிய விடயங்களையும் விலாவாரியாகச் சொல்வேன்.

எங்கு, எவ்வாறு பணம் பெறப்பட்டது என்கின்ற அத்தனை விடயங்களையும் தெரிந்தவன் நான். அந்த கட்சியினுடைய செயலாளராக இருந்த வை.எல்.எஸ்.ஹமீட் ஒரு நேர்மையானவர் அவர் பெருந்தலைவர் அஷ்ரபுடைய பாசறையில் வளர்ந்தவர். அவர் இன்னும் மௌனம் தாழ்த்தக்கூடாது. வெளியிலே வந்து அந்தக்கட்சியினுடைய அத்தனை அழுக்குகளையும், அவர்கள் சமூகத்துக்குச் செய்த அநியாயங்களையும், மக்களுக்கு தெளிவாகச் சொல்ல வேண்டும்.

மஹிந்த கம்பனியிடம் எவ்வளவு பணம் பெறப்பட்டது. நல்லாட்சியில் எவ்வளவு பணம் பெறப்பட்டது என்கின்ற அத்தனை விடயங்களையும் அவர் சொல்ல வேண்டும். நமது கிழக்கு மண்ணை கிழக்கிலே பிறந்தவன் ஆளவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். இன்னும், இன்னும் கிழக்கு மக்களை காட்டிக்கொடுக்கின்ற தலைமைகளை நம்பி கிழக்கு மக்கள் ஏமாந்துவிடக்கூடாது.

ஆண்டாண்டு காலமாக முஸ்லிம் காங்கிரசிக்கு வாக்களித்து வந்த அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் எதனைச்சாதித்துள்ளீர்கள். இன்று தேசியப்பட்டியல் பாராளுமன்ற பதிவிக்காக போராடிக்கொண்டிருக்கிறீர்கள், அந்த விடயத்தில் கட்சிக்குள்ளே இருக்கின்றவர்கள் பிரிந்து முட்டி மோதிக்கொண்டிருக்கிறீர்கள். தேசிய பட்டியல் பாராளுமன்ற பதவியை வைத்து இந்த மக்களை கூறுபோடுவதற்கு அக்கட்சியின் தலைமை செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

சாய்ந்தமருதுவில் எவ்வாறு பிரச்சினை ஏற்பட்டதோ அவ்வாறு அட்டாளைச்சேனை பிரதேச மக்களையும் குழப்புவதற்கு மு.கா தலைவர் நாடகமாடுகிறார். எனவே அட்டாளைச்சேனை மக்கள் போலி தலைவர்களை நம்பி தொடர்ந்தும் ஏமாறாது அஷ்ரபுடைய பாசறையிலே புடம்போடப்பட்ட தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லாவின் கரங்களை பலப்படுத்தி இந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு முற்பட வேண்டும்.

தேசிய காங்கிரசினுடைய தலைவர் அதாஉல்லா அட்டாளைச்சேனைக்கு இரண்டு தடவை கிழக்கு மாகாண அமைச்சுப்பதவிகளை வழங்கி அந்த மண்ணணையும் மக்களையும் கௌரவப்படுத்தியிருக்கின்றார். எனவே அட்டாளைச்சேனை மக்கள் இந்த தேர்தலில் அதாஉல்லாவிற்கு நன்றி செலுத்தும் முகமாக தேசிய காங்கிரசின் குதிரைச்சின்னத்திற்கு வாக்களித்து அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சியினை கைப்பற்ற வேண்டும் என்றார்.

LEAVE A REPLY