போதை கலந்த அரசியலால் மனித சமூகம் சீரழியும் அபாயம் நெருங்குகிறது ஷிப்லி பாறூக்

0
378

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தமது சுயலாப அரசியல் நோக்கங்களுக்காக போதை பொருள் விற்பனையின் பின்னணியில் ஒரு சில ஈனத்தமான அரசியல்வாதிகள் இருந்து வருவது மனித சமூகம் சீரழியும் அபாயம் நெருங்குகிறது என்பதை குறிப்புணர்த்துவதாக கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் அதிகரித்து வரும் போதைப் பொருள் சார்ந்த குற்றச் செயல்கள் பற்றி சமூகம் விழிப்பூட்டப்பட வேண்டும் என்று திங்கட்கிழமை 01.01.2018 அவர் ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

போதைப் பொருள் பாவனையை, விற்பனையை ஒழிக்கப்பபோவதாகக் கூறிக் கொண்டு ஒரு சில அரசியல்வாதிகள் போதைப் பொருள் பாவனையுள்ள பிரதேசங்களில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இருந்தபோதும் இவ்வாறான பிரதேசங்களில் போதை மாத்திரை வியாபாரம் குறைந்ததாகவும் இல்லை, வியாபாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்கு சென்றுவந்தவர்கள் திருந்தியமாகவும் இல்லை. அவர்களுக்கெதிராக அப்பிரதேசங்களிலுள்ளவர்கள் ஊரின் நன்மைகருதி எதுவிதமான தீர்க்கமான முடிவுகளை எடுத்ததாகவும் இதுவரை தெரியவில்லை.

இவை அனைத்தையும் செய்பவர்கள் பிள்ளையையும் கிள்ளவிட்டு, தொட்டிலையும் ஆட்டிவிடும் சில அரசியல்வாதிகள் அவர்களின் அற்பசொற்ப அரசியல் வாழ்க்கைக்கு இளைஞர் சமுதாயம் பலியாகின்றது.

போதையை ஒழிக்க வேண்டும், போதைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்லுகின்ற எந்த அரசியல்வாதியாவது இவற்றை தடுப்பதற்கு இறுக்கமான சட்டங்களை நடைமுறைப்படுத்த உதவியதுண்டா? அல்லது சட்டங்களை இன்னும் இறுக்கமாக இயற்றும் அதிகாரம் கொண்ட நாடாளுமன்றத்தில் உரையாற்றி அதற்கான தீர்க்கமான சட்டத்தினை இயற்ற முயற்சித்ததுண்டா?

சில அரசியல்வாதிகளும், அரசியல் அதிகாரம் கொண்ட நபர்களும் தங்களது அதிகாரத்தினை ஒரு சமூகம் அழியும் செயற்பாட்டிற்கும், தங்களது அரசியல் இலாபங்களுக்காகவும் மாத்திரம் பயன்படுத்திக்கொண்டு மனித சமூகத்தினை சீரழிக்க போதை மாத்திரை வியாபாரிகளுடன் கைகோர்த்து நிற்கின்றனர்.

இவ்வாறான செயற்பாடுகளை இன்னும் நமது பிரதேசங்களில் இருந்து நீக்கவிட்டால் அப்பிரதேசங்களிலுள்ள எதிர்கால அப்பாவி சமூகம்தான் என்பதை நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகளோ அல்லது கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகும் போதை மாத்திரை வியாபாரிகளோ ஒரு போதும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதையும் சிந்தித்துணர வேண்டும்.

எனவே போதைப் பொருளுக்கெதிராக அனைவரும் அணிதிரள வேண்டும்.

பிரதேசங்களை மையப்படுத்தி சிந்தித்து செயற்படக்கூடிய செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்’ என்றார்.

LEAVE A REPLY