அம்பாறை மாவட்ட இனவாத அமைச்சரினால் வழங்கப்படும் அற்ப சொற்ப இலாபங்களுக்காக வரலாற்றுத் துரோகம் புரியாதீர்கள். உதுமாலெப்பை

0
150

(எம்.ஜே.எம்.சஜீத்)

கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்களின் இருபதாயிரம் வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் நமது முஸ்லிம் மக்களின் பாரம்பரிய காணிகளிலிருந்து முஸ்லிம் மக்களை வெளியேற்ற முயற்சி செய்தார். இதனை அறிந்து இவருக்கு பொதுத்தேர்தலில் ஆதரவு வழங்கிய மனச்சாட்சியுள்ள ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம் பிரமுகர்கள் பலர் இனவாத அமைச்சரினால் வழங்கப்பட்ட பதவிகளை தூக்கி எறிந்து விட்டு நமது சமூகத்தின் நலனை மட்டும் எண்ணி சமூகத்துடன் இணைந்து செயற்படும் நிலைமையில் சிலர் இனவாத அமைச்சரினால் வழங்கப்படும் அற்ப சொற்ப இலாபங்களுக்காக நமது சமூகத்திற்கு தொடர்ந்தும் வரலாற்று துரோகம் இழைத்து வருவது குறித்து நாம் எல்லோரும் வேதனைப்பட வேண்டியுள்ளது என உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக இளைஞர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்வு அட்டாளைச்சேனையில் நடைபெற்ற போது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்கள் வறுமைக் கோட்டுக்குள் வாழும் பிரதேசங்களை அடையாளங்கண்டு நமது மக்களின் வறுமையை பாவித்து நமது முஸ்லிம் சமூகத்தின் பிரதி நிதித்துவங்களை இல்லாமல் செய்வதற்கான சதிகளை சுயநலத்தை நோக்கமாகக் கொண்டவர்களை நமது சமூகத்திற்கு எதிராக இனவாதிகள் பாவித்து வருகின்றனர். இந்த விடயத்தில் நமது பிராந்திய இளைஞர்கள் அர்ப்பணிப்போடு செயல்பட்டு நமது வாக்குகளை இனவாதிகளுக்கு சார்பாக நியமிக்கப்பட்டிருக்கின்ற முகவர்களுக்கு வழங்காமலும் இனவாத முகவர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவுப் பொருட்கள் தொடர்பான விபரங்களை இனங்கண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விரும்பிய மக்கள் தாங்கள் விரும்பிய கட்சிகளுக்கு வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது.

பல தடவைகள் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் அதிகாரத்தினைப் பெற்ற முஸ்லிம் காங்கிரஸினால் நமது பிரதேசத்தை திட்டமிட்டு அபிவிருத்தி செய்ய முடியாமையினை நமது பிரதேச மக்கள் பாடமாக கொள்ள வேண்டும்.

தேசிய காங்கிரஸ் அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கு அரசியல் அதிகாரம் உள்ள காலமெல்லாம் எமது எதிர்கால சந்ததியினர் நன்மை பெறும் வகையில் நீண்ட காலமாக நிலைத்து நிற்க கூடிய அபிவிருத்திப் பணிகளை நாம் பூர்த்தி செய்துள்ளோம்.

இந்த அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் சென்று அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இயற்கை வளங்களை அழகுபடுத்தி தென் கிழக்கு மக்கள் நமது அட்டாளைச்சேனைப் பிரதேசத்திற்கு வருகை தரக்கூடிய வகையில் நமது அட்டாளைச்சேனைப் பிரதேசத்தை அழகுபடுத்துவதற்கான எல்லா வகையிலான திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டு நிறைவு செய்யப்படாமல் உள்ளது. இத்திட்டங்கள் நிறைவு செய்யப்படும் போது நமது பிரதேசம் அழகு படுத்தப்படுவதுடன், நமது பிரதேச மக்களின் வாழ்வாதார, பொருளாதார துறைகளில் பாரிய வளர்ச்சி ஏற்படும்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்களை நன்கு திட்டமிடுவதற்கான அமைப்பு தற்போது உருவாக்கப்பட்டுள்ளதால் அதன் சேவையினை பெற்று எமது எதிர்கால அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளலாம்.
எனவே, தேசிய காங்கிரஸின் வேட்பாளர்களை வெற்றியடைச் செய்வதன் ஊடாக நமது அட்டாளைச்சேனைப் பிரதேசத்தை அழகுபடுத்தி அபிவிருத்தி செய்வதற்கான ஆணையினை மக்கள் வழங்க வேண்டும்.

மக்களுக்கு அர்ப்பணிப்போடு சிறந்த சேவைகளைப் புரிபவர்களையும், நமது நாட்டில் வாழும் சகல இன மக்களுடன் இன உறவுகளைப் பேணக் கூடியவர்களை தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களாக முன்நிறுத்தியுள்ளது எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY