நேற்று என்றால் போல் உள்ளது; இன்றுடன் இருபத்தைந்து வருடங்கள் கழிந்து விட்டது

0
434

நேற்று என்றால் போல் உள்ளது இன்றுடன் இருபத்தைந்து வருடங்கள் கழிந்து விட்டது எனது தந்தை எல்லோராலும் மகுமூது மாஸ்டர் என்றழைக்கப்படும் எஸ்.ஏ.எஸ்.மகுமூது இவ்வுலகைவிட்டுப் பிரிந்து புலிப்பயங்கரவாதிகளால் 1992.12.26ம் திகதி மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் மீயான்குள சந்தியில் வைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடியில் கொள்ளப்பட்ட ஆறு பேரில் எனது தந்தையும் ஒருவர்.

அன்று சனிக்கிழமை ஜப்பார் நானா திருமணம் முடித்து 18வது நாள் ஜப்பார் நானா மதினியும் வீட்டில் நிற்கின்றார்கள் முஸம்மில் நானா பதுளையில் தாதிப்பயிற்சி கல்லூரியில் இரண்டாம் வருட பயிற்சியில் இருக்கின்றார் நானாவுக்கு பயிற்சி காலத்தில் விடுமுறை பெறுவது சற்று சிறமம் அந்த சந்தர்ப்பத்தில் வாப்பா மரணிப்பதற்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை கிறிஸ்மஸ் தினம் வருகின்ற படியால் முஸம்மில் நானாவுக்கு ஊருக்கு அவசரமாக வரவேண்டும் என்று தனது மனதிற்கு பட்டதால் வியாழக்கிழமை கடமை முடிந்தவுடன் அன்றிறவே ஊருக்குப்புறப்பட்டு வந்துநின்றார்.

ஜப்பார் நானாவும் தொழில் நிமித்தம் சவுதியில் இருந்து இரண்டு வருடங்களின் பின்னர் நாட்டுக்கு வந்திருந்தார் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் 25.12.1992ம் ஆண்டு ஒன்றாக இருந்த கடைசிநாள் என்று எங்கள் எவருக்கும் தெரியாமல் போய்விட்டது.

எனது தந்தை மாணவ ஆசிரியராக மீராவோடை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (தற்போதைய அல் ஹிதாயா வித்தியாலயம்) மாணவ ஆசிரியராக 01.06.1964ல் நியமனம் பெற்று தனது ஆசியிரியர் தொழிலை ஆரம்பித்த எனது தந்தை 15.02.1971 தொடக்கம் 31.12.1972 வரை அட்டாலைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை பூர்த்தி செய்து கொண்டார் நாட்டில் பல பாகங்களிலும் ஆசியிரியர் தொழில்புரிந்த எனது தந்தை 11.02.1985 அன்று பிறைந்துரைச்சேனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (தற்போதைய பிநை;துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயம்) அதிபராக கடமைப் பொறுப்பை ஏற்ற எனது தந்தை இறுதியாக 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தின் முதலாவது அதிபர் என்ற பெருமைக்குறியவர் இவர் மரணிக்கும் தினம்வரை அதே பாடசாலையில் அதிபராக கடமையாற்றினார்.

நான் ஊடகத்துரையை நேசிப்பதற்கும் அத்துறைக்குள் செல்வதற்கும் எனது தந்தையே காரணம் எனது தந்தை ஆரம்பித்தில் வெளிவந்த தினபதி நாளிதழுக்கும் சிந்தாமணி வாராந்த பத்திரிகையின் பிரதேச செய்தியாளராக செயற்பட்டார் எனது தந்தையை அதிகமானவர்கள் “ரிப்போட்டர்” என்று அழைப்பதைப்பார்த்தும் வாப்பா செய்தி எழுதும் நேரங்களில் அதிகமாக அவருக்கு அருகாமையிலயே இருப்பேன் அதில் என்னை அறியாமல் அத்துரையில் ஓர் ஈர்ப்பு இருந்தது.

1992.12.26ம் திகதி காலை 07 மணியிருக்கும் எனது உம்மாவின் சாச்சியின் மகன் அசன் மாமா எங்கள் வீடு வந்து வாப்பாவிடம் மச்சான் உங்கள வை.அஹமட் மச்சான் வரட்டுமாம் என்று சொன்னார் இதைக்கேட்ட உம்மா என்னத்துக்கு என்று கேட்க ரிதிதென்னய்க்கு பேகவாம் என்று சொன்னார். (கல்லிச்சை கிராமத்தில் இருந்து வெளியேறிய முஸ்லம் மக்கள் அந்த நேரத்தில் ஜெயந்தியாய மற்றும் அத்துகல பிரதேசத்தில் அகதிகளாக வசித்து வந்தனர்.) அம்மக்களை பார்வையிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபராக இருந்த வை.அஹமட், ஓட்டமாவடி பிரதேச செயலாளர் ஏ.கே.உதுமான் ஆகியோர் கடமையின் நிமித்தம் செல்லும் போது வாப்பா கல்லிச்சை பிரதேச மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்படும் போது அக்கிராமத்தில் உள்ள பாடசாலையில் இருந்த காரணத்தினால் இவர்களுடன் அந்த பயணத்தில் இணைந்து கொள்வதாக உதவி அரசாங்க அதிபராக இருந்த வை.அஹமட் சேரிடம் தெரிவித்திருக்கிறார் அதற்காகத்தான் அவர் வாப்பாவை வரச்சொல்லி செய்தி அனுப்பியிருக்கார்.

வாப்பா போவதற்கு தயாராகும் போது உம்மா சொன்னா பிள்ளைகள் எல்லோரம் இன்றுதான் ஒன்றாக நிற்காங்க அதுக்குள்ள நீங்க ஏன் போகப்போரீங்க வர ஏலா என்று சொல்லி அனுப்புங்க என்று வாப்பா என்னை அழைத்து வாப்பாவுக்கு வர ஏலாதாம் வீட்ட கொஞ்சம் வேலையிருக்காம் என்று சொல்லிட்டு வரச்சொல்லி சொன்னார்.

நான் வை.அஹமட் சேரின் வீட்டுக்குச் சென்று வாப்பா சொன்ன விடயத்தை தெரிவிக்கவும் அவர் சொன்னார் 12 மணிக்கு வந்திடலாம் வாப்பாவை வரச்சொல்லுங்க என்று சொன்னார் நான் வந்து வாப்பாவிடம் சொல்லவும் என்னிடம் ஐநூறு ரூபாய் பணத்தினை தந்து நான் போயிட்டு வாரன் நீங்க இறாலும் கறிக்கொச்சிக்காயும் வாங்கிக் கொடுங்க என்று சொன்னார் அதன் பின்னர் நான்தான் வை.அஹமட் சேரின் வீட்டுக்கு வாப்பாவை துவிச்சக்கர வண்டியில் ஏற்றிக் கொண்டு விட்டு விட்டு வந்தேன் அந்த துவிச்சகர வண்டி இன்றும் எனது வீட்டில் வாப்பாவை தினமும் நினைவு படுத்திக் கொண்டு இருக்கின்றது.

அன்று மதியம் பதினொரு மணியிருக்கும் என்று நினைக்கிறேன் ஜப்பார் நானா சொன்னார் கடுமையான வெயிலாக இருக்கின்றது தயிர் குடித்தால் நன்றாக இருக்கும் என்று நான் தயிர் வாங்குவதற்காக வாழைச்சேனை ஆலிம் வீதியில் இருந்த இல்யாஸ் நானாவின் கடைக்கு சென்ற போது கடைக்காரர் சொன்னார் ஏ.ஜி.ஏ.வை அஹமட் போன ஜீப் கண்ணிவெடியில் அகப்பட்டு அதில் சென்னவர்கள் மரணம் என்று எனக்கு தலை சுற்றுவது போல் இருந்தது யா அல்லாஹ் என்னட வாப்பாவும் அதில் போனயே என்று நினைத்துக் கொண்டு வை.அஹமட் சேரின் வீட்டுக்கு செல்கிறேன் அங்கு அதிகமான ஆட்கள் நிற்கின்றார்கள் அவ்விடத்தில் நின்ற சலாம் மனேஜரிடம் என்ன மாமா என்று கேட்க வை.அஹமட் சேர் போன வாகனத்திற்கு எல்.ரீ.ரீ. மீயான்குள சந்தியில் கண்ணிவெடி வைத்தயாம் அதில் போனவர்கள் அனைவரும் மௌத்தாம் என்று சொன்னர் நான் மாமா வாப்பாவும் அதில் போன என்று சொல்வதற்குள் எனக்கு அழுகை வந்து விட்டது வாப்பா அதில் போகவில்லை என்று சொல்கின்றார்கள் எதற்கும் விசாரித்துப்பாருங்கள் என்று சொன்னார்.

அப்போதுதான் எனக்கு உம்மாவின் நினைப்பு வந்தது அவ அதிர்ச்சியான தகவல்களை தாங்கும் சக்தி உடையவர் அல்ல அதிர்ச்சியான தகவல்களைக்கேட்டால் மயக்கமடைந்துவிடுவார் அவவின் நிலமை என்னவோ என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்குச் செல்கிறேன் வாசலில் இருந்து மயக்கமடைந்த நிலையில் உம்மாவை தூக்கிக்கொண்டு வீடு;டுக்குள் செல்கின்றார்கள் அப்போது நினைத்தேன் இந்த சம்பவத்தில் வாப்பாவுக்கு ஏதும் நடந்திருக்கும் என்று பிறகு நேரம் செல்லச் செல்ல தகவல்கள் விடயத்தை உறுதி செய்தனர்.

மீயான்குள சந்தியில் இருந்து இராணுவத்தினரால் வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜனாஸாக்கள் மீண்டும் ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுறவு சங்க லொறியில் ஜனாஸாக்கள் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு அன்று மாலை ஜனாஸாக்கள் உறவினர்களிடம் ஜனாஸாக்கள் ஒப்படைக்கப்பட்டு வாப்பாவின் ஜனாஸா அன்று இரவு வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

எனது தம்பி ஹாதிக்கு வாப்பா மரணமடைவதற்கு ஒரு வாரத்திற்கு முதல் கை உடைந்து கையில் முறிவு வைத்தியரிடம் சென்று “பத்து” போடப்பட்டிருந்தார் அடுத்த நாள் எனது தம்பி காலையில் எழும்பி வீதியைப் பாரத்துக் கொண்டிருந்தார் என்ன நீங்க ரோட்ட பாரத்துக்கிட்டு இருக்கீங்க என்று நான் கேட்க வாப்பா வாராரா என்று பார்த்துக்கிட்டு இருக்கேன் என்று சொன்னார் எனக்கு எதைச் சொல்லி தம்பியை ஆருதல் படுத்துவது என்று தெரியாமல் தம்பியை அனைத்துக் கொண்டு அழுவதைத்தவிர.

அதில் இருந்து சில நாட்களின் பின்னர் தம்பி ஒரு காலையில் எழும்பி சொன்னார் கனவுல வாப்பா வந்து கைக்கு மருந்து கட்டுவதற்கு கூட்டிப்போய்வந்த இப்ப நல்லாயிருக்கு என்ற சொன்னர் அதன்பின்னர் தற்போதைய பொலிஸ் நிலைய சந்தியில் இருந்த காராலசிங்கம் என்ற முறிவு வைத்தியரிடம் (அவரும் எனது தந்தையின் நண்பர்.) தம்பியை கூட்டிச் சென்றபோது தம்பியின் கையைப் பார்த்துவிட்டு இவருக்கு கை சுகமாகிட்டுது பயப்படத்தேவையில்லை என்று சொல்லி எங்களை அனுப்பிவைத்தார்.

டிசம்பர் 26ம் திகதி என்றால் எல்லோருக்கும் நினைவு வருவது சுனாமி பேரலையைத்தான் சுனாமி பேரலை எமது சகோதர உறவுகளை எம்மிடம் இருந்து பிறித்து 13 வருடங்கள்தான் கடந்துள்ளது ஆனால் கல்குடா தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் இருபத்தைந்து வருடங்களுக்கு முதலே நிலகண்ணிவெடி என்ற ரூபத்தில் சுனாமி வந்து எமது பிரதேசத்தின் கல்வியலாளர்களை திட்டமிட்டு இல்லாமல் செய்து விட்டது.

எனது தந்தைக்கு நாடு முழுவதும் தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதேசங்களில் அதிகமான நண்பர்கள் இருந்தனர் இன்றும் எங்கள் உறவினர்கள் வாப்பாவின் பெயரை சொல்லி அறிமுகமாவதை பார்க்கும் போது எனக்கு பெருமையாக இருக்கின்றது வாப்பாவுக்கு அதிகமாக இருந்த நற்பின் காரணமாகத்தான் மரணத்திலும் நண்பர்களுடன் இணைந்திருந்தார்.

எனது வாப்பா மற்றும் வாப்பாவுடன் மரணித்த உதவி அரசாங்க அதிபர் வை.அஹமட், பிரதேச செயலாளர் ஏ.கே.உதுமான், சட்டத்தரணி ஏ.பி.எம்.முஹைதீன், விறகு வியாபாரி சாகுல்ஹமீட், வாகன சாரதி மகேந்திரன் ஆகியோருக்காக இச் சந்தரப்பத்தில் பிராத்தித்துக் கொள்ளுங்கள்.

எஸ்.எம்.எம்.முர்ஷித் – வாழைச்சேனை

LEAVE A REPLY