அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்கள் யானை சின்னத்திற்கு வாக்களித்து மீண்டும் ஒரு வரலாற்று துரோகம் செய்து வருந்த வேண்டாம்..உதுமாலெப்பை

0
192

எம்.ஜே.எம்.சஜீத்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் நாங்கள் பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவு செய்ய படுவோம் என முஸ்லிம் மக்களுக்கு தவறான நம்பிக்கைகளை தெரிவித்து இருபது ஆயிரம் வாக்குகளை சிறுபான்மை மக்களிடம் இருந்து ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்திற்கு பெற்றுக்கொடுத்தனர்.

பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம், தமிழ், வேட்பாளர்கள் யாரும் வெற்றி பெறவில்லை. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தைப் பெற்றதனால் நமது மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகளை பரித்தெடுக்கும் நடவடிக்கைகளும், கல்முனையில் இருந்து பொத்துவில் வரை அமைந்துள்ள தமிழ், முஸ்லிம் கிராமங்களில் சுமார் 12500 ஏக்கர் காணிகள் பௌத்த விகாரைகளுக்கு உள்ளதாகக் கூறி ஐக்கியமாக வாழ்ந்து வந்த தமிழ்,முஸ்லிம், சிங்கள மக்களிடையே சந்தேகங்கள் ஏற்படுத்துவதற்கும், அச்சங்கள் ஏற்படுத்துவதற்குமான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டது.

நமது நாட்டின் அரசியல் வரலாற்றை பின்னோக்கிப்பார்க்கும் போது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக திரு ரணில் விக்ரமசிங்க அரசியல் அதிகாரத்தில் இருந்த காலமெல்லாம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அநீதிகள் தொடர்ந்த வண்ணம் நடைபெற்றுள்ளது. இதனை நமது முஸ்லிம் சமூகம் மறந்து விடக்கூடாது.

நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் யானை சின்னத்திலே வாக்களிக்குமாறு முஸ்லிம் வேட்பாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மீண்டும் ஒரு வரலாற்று துரோகம் புரிந்தால் முஸ்லிம் மக்கள் அனைவரும் வருந்த வேண்டிய நிலை ஏற்படும் என அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் அல்- ஹாஜ் ஏ.சீ.கியாஸ்த்தீன் அவர்களை ஆதரித்து ஓய்வு பெற்ற கல்விப்பணிப்பாளர் அல்-ஹாஜ் எஸ்.எல்.ஏ. றஸாக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…..

கடந்த காலங்களில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் அதிகாரத்தினை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சி செய்த போதும் இப்பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளை திட்டமிட்டு நிறைவேற்றாத நிலைப்பாடே தொடர்ந்த வண்ணம் இருந்தன. எனவே, தற்போது உருவாகியுள்ள நல்ல சூழ்நிலையை பயன்படுத்தி அட்டாளைச்சேனை பிரதேச சபையின் நிறுவாகத்தினை தேசிய காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றியடையச் செய்து நமது பிரதேசம் திட்டமிட்ட முறையிலே அபிவிருத்திகளை செய்வதற்கான சந்தர்பத்தினை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் தேசிய காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களும், கல்விமான்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY