முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைப் பாகனாக இருந்து முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்த விடுதலைகள் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டும். உதுமாலெப்பை

0
268

எம்.ஜே.எம்.சஜீத்

மத்திய அரசாங்கத்திலும், கிழக்கு மாகாண சபையிலும் நாங்களே உச்ச நிலையிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் யானைப் பாகனாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம் எனக் கூறும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் இதுவரை முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்த விடுதலைகள் பற்றிய விபரங்களை வெளியிட வேண்டும் என அட்டாளைச்சேனைப் பிரதேச சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல்.அஜ்மல்(ஆசிரியர்) அவர்களை ஆதரித்து தைக்காநகர் வட்டத்தில் சஃஜான் தலைமையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில்….

மறைந்த பெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் ஒப்பந்தம் செய்து நமது நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கு பெரும் பங்களிப்பு செய்து நமது சமூகத்திற்கு மாத்திரமல்லாமல் மூவின மக்களுக்கும் பாரிய அபிவிருத்தியினை மேற்கொண்டார்.

தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் ஒப்பந்தம் செய்து நமது நாட்டில் நிலவிய கொடூர யுத்தத்தினை இல்லாமல் செய்து நிரந்தர சமாதனத்திற்கும், கிழக்கு மாகாணம் தனியாக பிரிந்து பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் மூவின மக்கள் மத்தியில் இன ஒற்றுமையை ஏற்படுத்தியதுடன் நல்லாட்சி அராசங்கத்தை ஏற்படுத்த முஸ்லிம் சமூகம் தீர்மானித்து செயல்பட்ட போது சென்ற ஜனாதிபதி தேர்தலில் தபால் வாக்களிப்பு நடைபெற்ற பின் இறுதி நேரத்தில் இணைந்து கொண்ட முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றஊப் ஹக்கீம் மத்திய அரசாங்கத்தையும், மாகாண அரசாங்கத்தையும் தாங்களே செயல்படுத்துவதாக கூறிக்கொண்டு நல்லாட்சி அரசில் பிரதமர் ரணிலோடு இணைந்து நமது முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக் கொடுத்த உரிமைகள் என்ன என்பதனை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தனும், பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரனும் அரசாங்கத்தை பாவித்து தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தவைகளைப் போன்று முஸ்லிம் சமூகத்திற்கு தாங்கள் இதுவரைப் பெற்றுக் கொடுத்தவைகளைப் பற்றிய விபரங்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் தெரிவிக்க வேண்டும்.

பிரதேச சபைத் திருத்தச்ச சட்டம் , மாகாண சபைத் திருத்தச் சட்டம் என்பவைகளை கண்களை மூடிக் கொண்டு ஆதரவு வழங்கியதால் நமது சமூகம் நமக்கான பிரதிநிதித்துவங்களை இழந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ் தலைவர்கள் தங்களின் சமூகத்தின் நன்மைகளில் அரசாங்கத்தை பாவித்து தமிழ் மக்கள் இழந்த காணிகளை விடுவிப்பதும், இனப் பிரச்சினை தீர்வு விடயத்தில் தங்களின் சமூகம் தொடர்பான உச்ச உணர்வுகளை வெளிப்படுத்தி இலங்கை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் உரிமைகள் தொடர்பாகவும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான பரம்பரை பரம்பரையாக விவசாயம் மேற்கொண்ட காணிகளை விடுவிக்கும் விடயத்தில் மௌனமான நிலைமை தொடர்கின்றன.

நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டு 03 வருடங்கள் முடியும் நிலையில் இதுவரை வட – கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் சமூகம் இழந்த காணிகளில் ஒரு அங்குல காணியும் விடுவிக்கப்படாமல் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகம் ஏமாற்றப்பட்டு கொண்டு வருகின்றது. துரதிஷ்டவசமாக முஸ்லிம் சமூகம் தங்களிடம் இருந்த காணிகளை இழக்க வேண்டிய அபாய நிலைமையும், அச்சமான சூழ்நிலைமையும் தற்போது உருவாகி உள்ளது எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY