NFGG யின் வேட்பாளர்களுக்கான தேசிய மாநாடு நாளை (24) காத்தான்குடியில்!

0
302

இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில், NFGG சார்பாக நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேசிய மாநாடு நாளை (24) காத்தான்குடியில் நடைபெறுகின்றது. இம்மாநட்டின் விசேட அம்சங்களாக NFGG யின் வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவை விளக்கம் மற்றும் அதனடிப்படையிலான சத்தியப் பிரமாண நிகழ்வும் நடைபெறுகிறது.

இத்தேசிய மாநாடு இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றது. அதாவது, கிழக்கு மாகாணத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் வேட்பாளர்களாக களமிறங்கும் உறுப்பினர்களுக்கான மாநாடு நாளை நடைபெறுகின்றது. கிழக்குக்கு வெளியிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் களமிறங்கும் உறுப்பினர்களுக்கான மாநாடு சில தினங்களில் கொழும்பில் நடைபெறும்.

நாளை நடைபெறும் தேசிய மாநாட்டில், NFGG யின் கொள்கைகள், இலக்குகள், வழிமுறைகள், தேர்தல் பிரசார ஒழுங்குகள் மற்றும் ஒழுக்கங்கள், வேட்பாளர்களுக்கான ஒழுக்கக் கோவை மற்றும் அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சத்தியப் பிரமாணம் போன்றன குறித்த விரிவுரைகளும், செயலமர்வுகளும் நடாத்தப்படவுள்ளது.

இத்தேசிய மாநாட்டில் NFGG யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான், பிரதித் தவிசாளர் சிராஜ் மஷ்ஹூர், பொதுச் செயலாளர் நஜா முஹம்மத், தேசிய அமைப்பாளர் எம்.பி.எம். பிர்தௌஸ் உள்ளிட்ட தலைமைத்துவ சபை உறுப்பினர்களும், கட்சியின் மூத்த உறுப்பினர்களும் விரிவுரைகளையும், செயலமர்வுகளையும் நடாத்தவுள்ளனர்.

நடக்கவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களிலுமுள்ள பெரும்பாலான உள்ளுராட்சி மன்றங்களிலும், கொழும்பு மாநகர சபை, புத்தளம் நகர சபை, முசலி பிரதேச சபை, அத்தனகல்ல பிரதேச சபை ஆகிய உள்ளுராட்சி மன்றங்களிலும் NFGG தனித்துப் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY