அமெரிக்காவுக்கு எதிராக ஐநா பொதுச்சபையில் இலங்கை வாக்களித்ததை வரவேற்கிறோம்: முஜீபுர் றஹ்மான்

0
204

(Media Unit)

ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து அமெரிக்கா கடந்த 5ம் திகதி வெளியிட்ட அறிவிப்பை நிராகரிக்கும் தீர்மானம் நேற்று வியாழக்கிழமை ஐ.நா. பொதுச் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. அமெரிக்காவின் இந்த அறிவித்தலுக்கு எதிராக ஐநா பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இலங்கை உட்பட 128 நாடுகள் ஆதரித்து வாக்களித்துள்ளன என்றும், ஜெரூசலம் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கு எதிராக இலங்கை ஐநா பொதுச்சபையில் வாக்களித்துள்ளதை வரவேற்பதாகவும் முஜீபுர் றஹ்மான் கூறியுள்ளார்.

ஜெரூசலம் தொடர்பாக அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான நிலைப்பாட்டை எதிர்த்து ஐநா பொதுச்சபையில் கொண்டுவரப்பட்ட வாக்கெடுப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,

கடந்த ஏழு தசாப்தங்களாக பலஸ்தீன பூமியின் இடம்பெற்று வரும் ஆக்கிரமிப்பையும், அட்டகாசங்களையும் அமெரிக்கா ஆதரித்தே வந்திருக்கின்றது. மத்திய கிழக்கின் அரசியல் காய் நகர்த்தல்களை இஸ்ரேல் என்ற இந்த சட்டவிரோதமான நாட்டை மையப்படுத்தியே அது நிகழ்த்தி வருகிறது.

கடந்த 5ம் திகதி ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக ஏற்றுக்கொள்வதாக அமெரிக்கா ஜனாதிபதி அறிவித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியதுடன் மத்திய கிழக்கில் அரசியல் கொந்தளிப்பையும் உருவாக்கியது. இந்த விவகாரத்தில் மனித நேயத்திற்கு மதிப்பளித்து இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் எதேச்சதிகார செயற்பாட்டுக்கு எதிராக ஐநா பொதுச்சபையில் தனது வாக்குப்பலத்தை பாவித்திருப்பதை நாம் நன்றியுடன் வரவேற்கின்றோம்.

அமெரிக்காவின் இந்த எதேச்சதிகார செயற்பாட்டுக்கு எதிராக வாக்களித்த 128 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். பலஸ்தீன் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு அமெரிக்காவின் அநீதத்திற்கு எதிராக வாக்களிப்பதற்கு உறுதுணையாக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம்.

அமெரிக்காவின் நிலைப்பாட்டிற்கு எதிராக ஐநா பொதுச்சபையில் கொண்டு வரப்பட்ட குறித்த வாக்கெடுப்பில் 35 நாடுகள்; பங்கெடுக்காமல் இருந்துள்ளதோடு 9 நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

அமெரிக்காவுக்கு எதிரான இந்த தீர்மானத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கு நிதியுதவிகள் நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்தபோதும் 128 நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களித்திருப்பது அமெரிக்காவின் அடாவடித்தனத்திற்கும் அட்டகாசத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ள தகுந்த பதிலடியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY