திருகோணமலையில் தாக்கல் செய்யப்பட்ட 66 வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன

0
218

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலையில் 2ம் கட்ட வேட்புமனு நியமனத்தில் தாக்கல் செய்யப்பட்ட 66 வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட பிரதான தெரிவித்தாட்சி அதிகாரி என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.

2ம் கட்டமாக திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகரசபை திருகோணமலை நகர சபை மொறவெவ பிரதேச சபை குச்சவெளி பிரதேச சபை கந்தளாய் பிரதேச சபை மூதூர் பிரதேச சபை ஆகிய 06 உள்ளுர் அதிகாரசபைகளுக்கு கடந்த 18ம் திகதி முதல் 21ம் திகதி மதியம் 12 மணிவரை வேட்புமனு கோரப்பட்டிருந்தது. வேட்பு மனு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது அங்கீகரிக்கப்பட்ட 61 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தது. அவற்றுள் 59 அரசியல் கட்சிகள் மற்றும் 07 சுயேட்சை குழுகக்கள் உட்பட மொத்தமாக 66 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் அவை யாவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மாவட்ட பிரதான தெரிவத்தாட்சி அதிகாரி என்.ஏ.ஏ.புஸ்பகுமார தெரிவித்தார்.

கட்டுப்பணம் செலுத்திய 2 கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதுடன் கந்தளாய் பிரதேச சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்த சிறிலங்கா பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒரு வேட்பாளரும் கிண்ணியா நகர சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த ஒரு வேட்பாளரும் கந்தளாய் பிரதேச சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை குழுவை சேர்ந்த ஒரு வேட்பாளரின் பெயரும் நிராகரிக்கப்பட்டதாக மாவட்ட பிரதான தெரிவத்தாட்சி அதிகாரி மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY