செல்பி’க்கு நீங்கள் அடிமையா? அப்ப இத படிங்க

0
501

செல்போன் பயன்படுத்தும் நான்கு பேரில் 3 பேர் ‘செல்பி’ எடுக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆளை விழுங்கும் பள்ளத்தாக்குகள், விண்ணை முட்டும் மலை முகடுகள், அடர்ந்த காடுகள், உயிரினங்கள், வயல்வெளிகளின் பின்னணியில் ‘செல்பி’ எடுப்பவர்கள் அதிகம். சாகசம் புரியும் வகையிலும் பலர் ‘செல்பி’ எடுக்கிறார்கள். பிறந்த குழந்தையுடன் மட்டுமல்ல இறந்த பிணத்துடனும் ‘செல்பி’ எடுத்து அதிர்ச்சி அளிப்பவர்கள் இங்கே உண்டு.

செல்போன் மூலம் தான் ‘செல்பி’ எடுக்கும் படலம் தொடங்கியது என்றால் அது தவறு. கேமரா வந்த காலத்தில் இருந்தே ‘செல்பி’ எடுக்கும் பழக்கமும் தொடங்கி விட்டது. அமெரிக்க புகைப்பட கலைஞர் ராபர்ட் காரன்லீஸ், கடந்த 1839-ம் ஆண்டு கேமராவால் தன்னை தானே புகைப்படம் எடுத்தார். அதுதான் முதல் ‘செல்பி’ புகைப்படம் என்று நம்பப்படுகிறது. அவர் அந்த படத்தின் பின்னால், “இதுவரை உலகில் யாரும் எடுத்திராத முதல் ஒளிப்படம்” என்று எழுதி இருந்தார்.

அறிவியலுக்கு மக்கள் அடிமையாகி வருகின்றனர். மனதளவில் நிஜ உலகத்தை விட்டு அனைவரும் கற்பனையான அறிவியல் உலகத்தில் வாழ தொடங்கி உள்ளனர். அந்த கற்பனையான வாழ்க்கையில், பல விஷயங்களுக்கு மக்கள் தங்களை அடிமையாக்கி வருகின்றனர். அதில் ஒன்று தான் இந்த ‘செல்பி’. அதாவது தன்னை தானே புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிடும் இந்த ‘செல்பி’க்கு கோடிக்கணக்கான மக்கள் அடிமையாக உள்ளனர்.

இந்த ‘செல்பி’ மூலம் ‘செல்பி’ ஸ்டிக்’ விற்பனை மற்றும் போட்டோக்களை அழகுப்படுத்தும் செயலிகள் விற்பனை மிக அமோக வர்த்தகத்தை கொடுத்து வருகிறது. இந்த ‘செல்பி’ குறித்து பல்வேறு தரப்பில் இருந்து பெறப்பட்ட கருத்துகளை வைத்து நானும், இங்கிலாந்து நாட்டிங்காம் டிரண்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் மார்க் கிரிப்த்சும் இணைந்து ‘செல்பி’க்கு அடிமை என்ற தலைப்பில் ஆய்வு கட்டுரை தயாரித்து உள்ளோம். இந்த கட்டுரை மிகவும் பிரசித்தி பெற்ற சர்வதேச மனநல ஆராய்ச்சி இதழில் வெளியாகி உள்ளது. இதை உலக ஜர்னல் அமைப்பும் ஏற்றுக்கொண்டு உள்ளது. இந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன.

அதன்மூலம், ‘செல்பி’ எடுப்பவர்களின் நோக்கங்களை 6 வகைப்படுத்தி இருக்கிறோம். அதில் முதலாவது வகையினர், அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்க நினைப்பவர்கள். அவர்களின் எண்ணம், அடுத்தவர்கள் தங்களை பற்றி உயர்வாக நினைக்க வேண்டும் என்பது மட்டுமே. இரண்டாவது வகையினர், சமுதாயத்துடன் போட்டி போட விரும்புபவர்கள். இவர்கள் சமூக வலைதளங்களில் கிடைக்கும் ‘லைக்’குக்காக ‘செல்பி’ எடுக்கின்றனர்.
201712200916161189_1_selfie._L_styvpf
மூன்றாவது வகையினர், மனதில் மாற்றம் கொண்டவர்கள். அதாவது ‘செல்பி’ எடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுடைய மனதில் திளைத்து போய்விடும். நான்காவது வகையினர், சுற்றுப்புற தாக்கத்தால் மாறுகிறார்கள். இவர்கள், தங்களை சுற்றியுள்ளவற்றை பதிவு செய்வதற்காக ‘செல்பி’ எடுப்பார்கள். உதாரணத்திற்கு இயற்கையை படம் பிடிக்க ஆவலாய் இருப்பார்கள்.

ஐந்தாவது வகையினர், அடுத்தவர்களை பின்பற்றுபவர்கள். ஒருவரின் படத்தை பார்த்து அதே போல் நாமும் படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆறாவது வகையினர், தன்னம்பிக்கை உடையவர்கள். இவர்கள் தாங்கள் அழகாக இருக்கிறோம். நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்ற எண்ணம் கொண்டவர்கள்.

அதே போல் ‘செல்பி’ எடுப்பவர்களை 3 பிரிவுகளாக பிரித்து இருக்கிறோம். தினமும் 3 ‘செல்பி’ படங்கள் எடுப்பவர்கள் தொடக்க நிலையை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அடுத்ததாக தினமும் 3-ல் இருந்து 6 ‘செல்பி’ வரை எடுப்பவர்கள். இவர்கள் மத்திய நிலையை சேர்ந்தவர்கள். இவர்களின் இந்த நிலை நீடித்தால் இறுதி நிலைக்கு வந்து விடுவார்கள்.

தினமும் 6 ‘செல்பி’க்கு மேல் எடுப்பவர்கள் இறுதி நிலையை சேர்ந்தவர்கள். இவர்களால் தினமும் ‘செல்பி’ எடுக்காமல் இருக்க முடியாது. அவர்களுக்கு ஒருவித மனநோய் ஏற்பட்டு இருக்கிறது. இவர்களுக்கு நிச்சயம் கவுன்சிலிங் தேவை.

இந்த ‘செல்பி’ பழக்கத்தில் இருந்து இவர்கள் விடுபட, தங்களை தாங்களே முதலில் உணர வேண்டும். அறிவியல் உலகத்தில் இருந்து நிஜ வாழ்க்கைக்கு வர வேண்டும். இதற்காக புத்தகம் படிப்பது, தியானம் செய்வது போன்ற விஷயத்திற்கு தங்களை ஆட்படுத்த வேண்டும். அறிவியல் பொருட்களை நமது பயன்பாட்டிற்காகவே என்பதை உணர்ந்து, அதற்கு நம்மை அடிமைப்படுத்திக்கொள்ள கூடாது.

LEAVE A REPLY