இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை: கணவர் வெறிச்செயல்

0
466

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகள் மலர்விழி (27) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

கணவனும், மனைவியும் சென்னையில் தங்கி காய்கறி வியாபாரம் செய்து வந்தனர். மலர் விழிக்கு குழந்தை இல்லாததால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் மூர்த்திக்கு வேறுஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதுகுறித்து மூர்த்தி தனது மனைவி மலர்விழியிடம் கூறினார். ஆனால் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மூர்த்தி தனது மனைவி மலர்விழியை சொந்த ஊரான ஆற்காட்டுக்கு அழைத்து வந்தார். நேற்று மாலை அவர் மனைவியிடம் குலதெய்வம் கோவிலான அய்யனார் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வருவோம் என்று அழைத்ததை நம்பி கணவருடன் மலர்விழியும் கோவிலுக்கு சென்றார்.

கோவில் அருகே சென்றபோது, மூர்த்தி மீண்டும் தன் மனைவியிடம் நான் 2-வது திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்று கூறினார். இதற்கு மலர்விழி சம்மதிக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மூர்த்தி மனைவி மலர்விழி முகத்தில் தாக்கினார்.

இதில் காயம் அடைந்து அவர் கீழே விழுந்தார். பின்னர் அவரது கழுத்தைபிடித்து நெரித்தார். சிறிது நேரத்தில் மலர்விழி மயங்கிவிழுந்தார். தனது மனைவி இறந்துவிட்டார் என நினைத்து மூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் மலர்விழி ரத்தக்காயங்களுடன் கிடப்பதை கண்டு திருக்கோவிலூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று மயங்கி கிடந்த மலர்விழியை மீட்டு திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மலர்விழி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த தகவல் மலர்விழியின் தந்தை குப்புசாமிக்கு தெரியவந்தது. அவர் விரைந்து சென்று இறந்துபோன தனது மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் அவர் இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

எனது மகளிடம் மூர்த்தி மற்றும் மாமனார் சாரங்கபாணி, அவரது உறவினர்கள் முருகன், கஸ்தூரி ஆகியோர் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்தனர். மேலும் மலர்விழிக்கு குழந்தை இல்லாததால் மூர்த்திக்கு 2-வது திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்தனர். இதற்கு மலர்விழி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மூர்த்தி எனது மகளை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டார். எனவே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அதன்பேரில் மூர்த்தி, அவரது தந்தை சாரங்கபாணி மற்றும் உறவினர்கள் முருகன், கஸ்தூரி ஆகியோர்மீது போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY