பிறந்து 11 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொலை

0
311

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள கல்லங்காட்டு வலசு, காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 26). இவர் ஒரு விசைத்தறித் தொழிலாளி. இவருடைய மனைவி தனலட்சுமி.

இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தனலட்சுமிக்கு கடந்த 6-ந் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது.

நேற்று முன்தினம் இரவு தனலட்சுமியுடன் பச்சிளம் குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. நேற்று காலையில் எழுந்து பார்த்த போது தனது குழந்தையை காணாததால் தனலட்சுமி அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அவர் தனது கணவர் பூபதியிடம் தெரிவித்தார். பூபதியும், தனலட்சுமியும் குழந்தையை தேடினர். ஆனால், குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று குழந்தை காணாமல் போனது பற்றி பூபதி புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் அவரது வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையின்போது போலீசாருக்கு பூபதி மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டது.

போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று கருதிய பூபதி அமாணி கிராம நிர்வாக அலுவலர் ஜனார்த்தனன் முன்னிலையில் சரண் அடைந்தார். தான், வீட்டில் தனலட்சுமியுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிச்சென்று தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு குழந்தையை காணவில்லை என்று கூறி நாடகமாடியதை கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் பூபதியை ஒப்படைத்தார். அதன் பேரில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர்.

மேலும் தண்ணீர் தொட்டியில் இருந்து குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைதான பூபதியை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பிறந்து 11 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

விசைத்தறி தொழிலாளியான பூபதி திருமணத்திற்கு முன்பே வேலைக்கு சரியாக செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். எனவே பூபதியை பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும் அவர் திருந்தவில்லை.

திருமணம் செய்து வைத்தால் மகன் திருந்தி விடுவான் என கருதி திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர். பூபதிக்கும், தனலட்சுமிக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகும் பூபதி வேலைக்கு செல்லாமல் இருந்தார். அப்போதும் பெற்றோர் அவரை கண்டித்தனர்.

கடந்த 6-ந்தேதி தனலட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கணவர் வேலைக்கு செல்லாததால் குழந்தைக்கு பால் மற்றும் சத்தான பொருட்கள் வாங்கவும், மருத்துவ செலவு மற்றும் அன்றாட வீட்டு செலவுக்கும் பணம் இல்லாமல் தனலட்சுமி சிரமப்பட்டார்.

இப்படி ஊர் சுற்றிக் கொண்டு இருக்கிறாயே? குழந்தைக்கு பால் வாங்க பணத்திற்கு எங்கு செல்வாய்? என்று கூறி பெற்றோர், பூபதியை சத்தம் போட்டனர். மேலும், அவர் ஏற்கனவே வேலைபார்த்த விசைத்தறி கூடத்தின் உரிமையாளர் ஒருவர் பூபதியை சந்தித்து வேலைக்கு வருகிறாயா? பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறாயே? என்று கூறியுள்ளார். அதற்கு அவர் வேலைக்கு வர முடியாது என தெரிவித்தார்.

இந்த நிலையில் தான் வேலைக்கு செல்லாமல் இருப்பதை பார்த்து பெற்றோர் கண்டிக்கிறார்கள்… குழந்தைக்கு பால் வாங்க பணம் இல்லையே என திட்டுகிறார்கள் என நினைத்து கோபம் அடைந்த பூபதி தனது குழந்தையை கொலை செய்ய துணிந்தார்.

நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அவர், தனலட்சுமியுடன் தூங்கி கொண்டிருந்த குழந்தையை தூக்கிச்சென்று அருகில் உள்ள ஒருவரது வீட்டின் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொடூரமாக கொலை செய்தார்.

பின்னர் உடலை அங்கேயே போட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார். தனலட்சுமி தூங்கி எழுந்து குழந்தையை தேடியபோது தானும் தனலட்சுமியுடன் சேர்ந்து குழந்தையை தேடுவது போல் நாடகமாடி உள்ளார்.

இவ்வாறு மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

LEAVE A REPLY