சாய்ந்தமருதில் மயில் போட்டியிடாது: ஏ.எம்.ஜெமீல்

0
349

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் ஓர் அங்கமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலினால் களமிறக்கப்படவுள்ள பொது சுயேட்சை குழுவுக்கு, தான் ஆதரவு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் இப்பிரதேசத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் எனவும் அக்கட்சியின் பிரதி தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபன தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

தனது இந்த நிலைப்பாடு தொடர்பாக அவர் சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களுக்கு பகிரங்க மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“எமது சாய்ந்தமருது மக்களின் நீண்ட கால தேவையான உள்ளூராட்சி மன்றத்தை வென்றெடுப்பதற்கான இலக்கை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு நமது ஊரின் சார்பில் பொதுவான சுயேச்சை குழுவொன்றை களமிறக்குவது என்ற சாய்ந்தமருது பிரகடன தீர்மானத்தின் பிரகாரம் அதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை வரவேற்றவனாக எனது ஆலோசனைகளை முன்வைக்கும் பொருட்டு இந்த பகிரங்க மடலை வரைகின்றேன்.

நமக்கு ஓர் உள்ளூராட்சி மன்றம் அவசியம் என்ற கோரிக்கை முப்பது வருட காலமாக இருந்து வந்தபோதிலும் அதற்கான சாத்வீக போராட்டங்கள் 2009ஆம் ஆண்டில் சில சிவில் அமைப்புகளினால் ஆரம்பிக்கப்பட்டபோது கட்சி அரசியலுக்கு அப்பால் அதனை ஆதரித்து ஒத்துழைப்பு வழங்கிய இந்த ஊரின் முதலாவது அரசியல்வாதி என்ற ரீதியில் எனது ஆலோசனைகளை மிகவும் பொறுப்புணர்வுடன் பகிர்ந்து கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்தபோது நான் கட்சிக்குள் இருந்து கொண்டு தொடர்ச்சியாக வழங்கி வந்த அழுத்தம் காரணமாகவே பிற்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இக்கோரிக்கைக்கு உடன்பட்டு, அதனை நிறைவேற்றித்தருவதாக வாக்குறுதியளிக்க முன்வந்தார் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

தங்களுடைய தலைமையில் நமது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கடந்த 2015 ஆம் ஆண்டு இக்கோரிக்கையை கையிலெடுத்து, அதற்காக முன்னெடுத்து வந்த அனைத்து முயற்சிகளுக்கும் நான் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வந்ததுடன் அதே ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி சாய்ந்தமருத்துக்கு தனி உள்ளூராட்சி மன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என கோரி கிழக்கு மாகாண சபையில் தனிநபர் பிரேரணை கொண்டு சென்று, அப்போது நான் அங்கம் வகித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஆதரவுடன் அப்பிரேரணை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதன் பலனாக சாய்ந்தமருத்துக்கு ஓர் உள்ளூராட்சி மன்றம் உருவாக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண அரசாங்கம், மத்திய உள்ளூராட்சி அமைச்சுக்கு பரிந்துரை செய்திருந்தமை ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்திருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

அதன் பிறகு அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இக்கோரிக்கையை முன்வைத்து நான் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டதையும் அதன் பேரில் இக்கோரிக்கையை வென்று தருவதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் எமது மண்ணுக்கு வந்து பகிரங்கமாக உத்தரவாதம் வழங்கியிருந்ததையும் ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எமது மக்களின் அபிலாஷையை, அவர்களின் வாக்குகளை சூறையாடுவதற்கான ஒரு துரும்பாக பயன்படுத்தி வந்த நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீனும் நானும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களை தொடர்ச்சியாக சந்தித்து அழுத்தம் கொடுத்து வந்ததன் பயனாக அவர் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை ஏற்படுத்துவதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து, வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு திகதியும் குறித்திருந்த நிலையில் அது எவ்வாறு தடுக்கப்பட்டது என்பதை எல்லோரும் அறிவோம்.

எவ்வாறாயினும் நாம் சோர்ந்து விடவில்லை. தொடர்ந்தும் முயற்சித்தோம். கடந்த ஒக்டோபர் மாதம் நிந்தவூரில் நீங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்தபோது “தன்னால் முடியாது நீங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து பேசிக்கொள்ளுங்கள்” என்று கைவிரித்தபோது அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் நானும் இணைந்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு அமைச்சர் பைசர் முஸ்தபாவை சந்தித்து பேசியதையும் அவர் நமக்கு உத்தரவாதம் தந்து உற்சாகமூட்டியதையும் ஞாபகமூட்டுகின்றேன்.

அதன் தொடர்ச்சியாக மறுநாள் அமைச்சர் பைசர் முஸ்தபா முன்னிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீன், அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் ஹரீஸ் உட்பட சாய்ந்தமருது, கல்முனைக்குடி பள்ளிவாசல் சமூகமும் ஒரே மேசையில் அமர்ந்து பேசுவதற்கான ஒழுங்குகளையும் நாம் செய்திருந்தோம். அதன்போது நான்கு பிரிப்பு எனும் விடயம் திணிக்கப்பட்டு, திசை திருப்பப்பட்டதை எல்லோரும் அறிவோம்.

இதன் பின்னர்தான் எமது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் ரவூப் ஹக்கீமும் ஹரீஸும் நயவஞ்சகமாக நடந்து- நம்மை ஏமாற்றி விட்டனர் என்பதை உணர்ந்து கொண்ட மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டத்தை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தலைமை வகித்து நெறிப்படுத்துவதே இதன் வெற்றிகரமான முன்னெடுப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

இதன் ஓர் அங்கமாகவே எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு நமது ஊர் சார்பில் அரசியல் காட்சிகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு பள்ளிவாசலின் நெறிப்படுத்தலில் பொதுவான சுயேட்சைக்குழுவொன்றை களமிறக்க நீங்கள் தயாராகி வருகிறீர்கள்.

இந்நிலையில் நமக்கொரு உள்ளூராட்சி மன்றத்தை வென்றெடுப்பதற்காக என்னை அர்ப்பணித்து எவ்வாறெல்லாம் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றேனோ பள்ளிவாசல் தலைமையிலான போராட்டங்களுக்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றேனோ அதேபோன்று சுயேட்சைக்குழுவின் வெற்றிக்கும் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு எனும் கூட்டணியில் எமது கட்சியின் மயில் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

அதேவேளை சாய்ந்தமருது பிரதேசத்தில் எமது கட்சி சார்பான வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்கான பொறுப்பை கட்சியின் தலைமைத்துவம் எனக்கு வழங்கியுள்ள நிலையில் நமது பள்ளிவாசல் பிரகடனத்தை மதித்து, அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் பொருட்டு சாய்ந்தமருது பிரதேசத்தில் எமது கட்சி சார்பில் வேட்பாளர்களை களமிறக்கமாட்டேன் என்று அக்கட்சியின் பிரதி தலைவர் என்ற ரீதியில் உத்தரவாதமளிக்கின்றேன்.

மேலும், சாய்ந்தமருதின் பொது சுயேட்சை குழுவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய தகுதியான வேட்பாளர்களை தெரிவு செய்யுமாறும் அவர்கள் தனிப்பட்ட அரசியல் நோக்கம் கொண்டவர்கள் இல்லாமல் எவ்வேளையி்லும் பள்ளிவாசல் தீர்மானங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடக்கக்கூடிய ஊர்ப்பற்றாளர்களாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பது எனது ஆலோசனையாகும்.

அதேவேளை கடந்த சில நாட்களாக பள்ளிவாசலுக்கும் எனக்குமிடையே விரிசலை ஏற்படுத்துவதற்கு சில தீய சக்திகள் வதந்திகளை பரப்பி வருவதாக அறிகின்றேன். நான் சாய்ந்தமருதில் அரசியல் செய்வதாகவும் சிலரை விலை பேசி எம் கட்சிப் பக்கம் இழுத்தெடுக்க முயற்சிப்பதாகவும் உண்மைக்கு புறம்பான கதைகளை இட்டுக்கட்டி என் மீது பள்ளிவாசல் சமூகமும் ஊர் மக்களும் வைத்திருக்கின்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த அந்த சக்திகள் முயன்று வருகின்றன.

பள்ளிவாசல் பிரகடனத்திற்கு மதிப்பளித்து நமது சாய்ந்தமருது பிரதேசத்தில் எனது கட்சி அரசியல் செயற்பாடுகளை முற்றாக முடக்கி வைத்து, இஹ்லாஸ் எனும் தூய எண்ணத்துடன் ஊரின் போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற எனக்கு சேறு பூச நினைக்கும் சக்திகளின் நோக்கம் நிறைவேற நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இது விடயத்தில் பள்ளிவாசல் நிர்வாகம் விழிப்புடன் இருக்க வேண்டும் என பணிவன்புடன் வேண்டிக்கொள்கின்றேன்.

எமது மண்ணின் உடன்பிறவா சகோதரர்களின் முழு ஆதரவுடன் மூன்று தேர்தல்களில் வெற்றியீட்டி மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்ட நான் இந்த மண்ணின் எழுச்சிக்கு உழைப்பதற்கான கடப்பாட்டையும் உரிமையையும் கொண்டுள்ளேன் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எமது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை தொடர்ந்தும் இழுத்தடித்து, மழுங்கடிக்க செய்வதற்கு எவராவது முற்பட்டால் மக்களை வீதிக்கு இறக்கி போராடுவேன் என்று அரசியல் தலைமைகளுடனான முக்கிய சந்திப்புகளில் நான் உறுதியாக தெரிவித்திருந்ததை நீங்கள் அறிவீர்கள்.

நான் என்றும் ஊரின் ஆபிலாஷைகளுக்கு முன்னுரிமை கொடுப்பவன். அதனால் வெளிப் பிரதேசங்களில் நான் ஒரு பிரதேசவாதியாக சித்தரிக்கப்படுவதை நீக்கிகள் அறியாமல் இல்லை. நான் பிறந்த மண்ணுக்கு என்ன விலை கொடுத்தாவது ஓர் உள்ளூராட்சி மன்றத்தை உருவாக்கிக் கொள்வதற்காக பல வருடங்களாக என்னை அர்ப்பணித்து போராடி வருகின்ற நான் இக்கோரிக்கையை மழுங்கடிக்கும் எந்தவொரு செயற்பாட்டிலும் ஒருபோதும் ஈடுபடப்போவதில்லை என்பதை பள்ளிவாசல் நிர்வாகத்தினருக்கு உறுதியளிக்கின்றேன்.

அந்த வகையில் கல்முனை மாநகர சபைக்கு சாய்ந்தமருது பிரதேசத்தில், பள்ளிவாசலினால் முன்னிறுத்தப்படவுள்ள சுயேட்சைக்குழு வேட்பாளர்கள் அனைவரையும் வெற்றியடைய செய்வதற்கு கட்சி பேதத்திற்கப்பால் நானும் ஒரு சாய்ந்தமருது மகன் என்ற ரீதியில் ஒத்துழைப்பை வழங்குவதற்கு தயாராக இருக்கிறேன் என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன்” என்று கலாநிதி ஏ.எம்.ஜெமீல் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY