மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை – மற்றொரு மாணவி உயிருக்கு போராட்டம்

0
472

சேலம் சங்கர் நகரை அடுத்த ராம்நகரைச் சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் சக்திவேல். இவரது மகள் கவிஸ்ரீ. செவ்வாய்ப்பேட்டை மூலப்பிள்ளையார்கோவுல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ், கூலித் தொழிலாளி. இவரது மகள் ஜெயராணி.

மாணவிகள் கவிஸ்ரீ, ஜெயராணி ஆகியோர் சேலம் அரிசிப்பாளையத்தில் சென்மேரீஸ் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தனர். நேற்று 2 மாணவிகளும் பள்ளி வகுப்பறையில் பேசிக் கொண்டிருந்தனர். இதை ஆசிரியை கண்டித்தார்.

இதனால் 2 மாணவிகளும் பள்ளியை விட்டு வெளியே சென்றனர். பள்ளிக்கு திரும்பி வரவில்லை. வீட்டிற்கும் செல்லவில்லை. இதனால் அவர்களது பெற்றோர் பள்ளிக்கு வந்து எங்கள் குழந்தைகளை காணவில்லை என்று தெரிவித்தனர்.

இதன்பிறகு பள்ளப்பட்டி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். போலீசாரும் மாணவிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 2 மாணவிகளும் சேலம் டவுன் ராஜகணபதி கோவில் அருகே உள்ள அப்சரா விடுதியில் 4-வது மாடியில் இருந்து குதித்தனர். இதில் மாணவி ஜெயராணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டார். உயிருக்கு போராடிய கவிஸ்ரீயை மீட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் துணை கமி‌ஷனர்கள் சுப்புலட்சுமி, தங்கதுரை ஆகியோர் சம்பவம் நடந்த விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்று மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகத்திலும் பள்ளி முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவி கவிஸ்ரீயின் தாயார் விஜி கூறியதாவது:-

என்னுடைய மகளும், ஜெயராணியும் ஒரே பள்ளியில் படிப்பவர்கள். இதற்கு முன்பு இருவரும் ஒரே பெஞ்சில் அமர்ந்து இருந்தனர். அவர்கள் அடிக்கடி பேசிக் கொண்டிருப்பதாக எங்களி டம் ஆசிரியை தகவல் தெரிவித்தார். நாங்கள் பள்ளிக்கு சென்று அந்த ஆசிரியையை சந்தித்தோம். பின்னர் 2 மாணவிகளையும் வேறு வேறு பெஞ்சில் அமர வைத்தனர்.

நேற்று 2 பேரும் பேசிக் கொண்டிருந்ததாக கூறி அவர்களை ஆசிரியை கண்டித்திருக்கிறார். பெற்றோரை அழைத்து வருமாறும் கூறி உள்ளார்.

இதனால் 2 மாணவிகளும் பள்ளியை விட்டு சென்றிருக்கிறார்கள். அவர்கள் சென்ற விவரம் எங்களுக்கு தெரியாது. மாலையில் வீட்டிற்கு வராததால் நேரில் சென்று பள்ளிக்கு சென்று விசாரித்த போதுதான் அவர்கள் 2 பேரும் பள்ளியை விட்டு சென்றது தெரியவந்தது.

இன்று காலை பள்ளிக்கு சென்று கேட்டபோது அவர்களை பற்றிய தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இந்த நிலையில் 2 மாணவிகளும் 4-வது மாடியில் இருந்து குதித்ததாக போலீசார் மூலம் தகவல் கிடைத்தது.

நேரில் சென்று பார்த்த போது என் மகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் விவரமும் இன்னொரு மாணவி இறந்துவிட்டதும் எனக்கு தெரியவந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாடியில் இருந்து குதித்து இறந்த மாணவி ஜெயராணிக்கு தாயார் கிடையாது. அவரது தாயார் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் அவரை அவரது சித்தி செல்வராணி வளர்த்து வந்தார்.

ஜெயராணி இறந்த தகவலை அறிந்த அவரது தந்தை சக்திவேல், சித்தி செல்வராணி மற்றும் உறவினர்கள் அவரது உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

மாணவிகள் குறித்து ஆசிரியை ஒருவர் கூறியதாவது:-

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மாணவி கவிஸ்ரீ வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவர் மற்ற மாணவிகளை வெளியில் அழைத்து செல்வார். இதை ஆசிரியைகள் கண்டித்துள்ளனர். மாணவியின் தந்தையை அழைத்தும் இது குறித்து கூறினோம். அதன்பிறகு மற்ற மாணவிகளுடன் பழகுவதை நிறுத்திய கவிஸ்ரீ ஜெயராணியுடன் மட்டும் நெருங்கி பழகினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயராணியை கவிஸ்ரீ ஏற்காடு அழைத்து சென்றுள்ளார். நேற்று அவரிடம் கவிஸ்ரீ பேசிக் கொண்டிருந்தார். எனவே மீண்டும் பெற்றோரை அழைத்து வருமாறு கூறியதால் அவர்கள் 2 பேரும் பள்ளியை விட்டு சென்று விட்டனர். இன்று காலை ஜெயராணி இறந்த தகவலும் கவிஸ்ரீ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தகவலும் எங்களுக்கு வந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவி இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்களது குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

முன்னதாக இன்று காலை மாணவிகளின் பெற்றோர் பள்ளிக்கு சென்று முற்றுகையிட்டு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அநத சமயத்தில் மாணவி இறந்த தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு ஜெயராணியின் உறவினர்கள் நேரில் சென்று இறந்தது ஜெயராணி என்பதை உறுதிப்படுத்தினர்.

மாணவிகள் மாடியில் இருந்து குதிப்பதற்கு முன்பு சேலம் டவுன் பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும் மாடியில் இருந்து குதிப்பதற்கு முன்பு 2 பேரும் சாமி கும்பிட்டு விட்டு கைகோர்த்து நின்று ஒரே நேரத்தில் 2 பேரும் மாடியில் இருந்து குதித்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

சீருடையில் திரிந்த அவர்களிடம் அந்த பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (வயது 35) என்ற பெண் விசாரித்தார்.

அப்போது பெற்றோர் மார்க்கெட்டில் காய்கறி வாங்க சென்றிருப்பதாகவும் அவர்கள் வரும் வரை காத்திருப்பதாகவும் கூறி உள்ளனர்.

ஏற்கனவே பள்ளியில் ஆசிரியை திட்டியதாலும் வீட்டுக்கு சென்றால் பெற்றோர் திட்டுவார்கள் என்பதாலும், பள்ளியை விட்டு வெளியேறி சுற்றித் திரிந்ததாலும் மன உளைச்சலில் இருந்த அவர்கள் திடீரென்று தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். அந்த நேரத்தில் விடுதியின் படிக்கட்டு திறந்து இருந்ததால் அந்த படிக்கட்டு வழியாக ஏறி மாடியில் இருந்து குதித்துவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து சேலம் டவுன் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கடந்த மாதம் வேலூர் மாவட்டத்தில் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் திட்டியதால் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சேலத்தில் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மாணவிகள் தற்கொலையை தடுக்க அவர்களுக்கு மனநல மருத்துவர்களை கொண்டு பயிற்சி அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY