மார்க்க விழுமியமும் ஆளுமையும் இருந்தால் முஸ்லிம் பெண்களும் உயர் பதவி வகிக்கலாம்.

0
1005

விசேட நிருபர்

காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றிப்கா

இஸ்லாமிய மார்க்க விழுமியமும் ஒழுக்கமும் ஆளுமையும் இருந்தால் முஸ்லிம் பெண்கள் சாதரண பதவி முதல் உயர் பதவி வரை வகிக்க முடியும் என காத்தான்குடி நகர சபையின்; புதிய செயலாளர் ஜனாபா எம்.ஆர்.பாத்திமா றிப்கா ஸபீன் (ளு.டு.யு.ளு) தெரிவித்தார்.

அவருடனான நேர்காணலின் போதே அவா ;மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கேள்வி: முஸ்லிம் பெண்கள் உயர் பதவிகள் வகிப்பது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: ஆண்களைப் போன்று பெண்களும் உயர் பதவிகளை சிறப்பாக வகித்து முன்னேற்ற கரமான முன்னெடுப்புக்களை செய்ய பொருத்தமானவர்களாகும்.

அந்த வகையில் முஸ்லிம் பெண்கள் இஸ்லாமிய மார்க்க ஒழுங்குகளுடன் ஒழுக்கமும் ஆளுமையுடன் சாதரண பதவிகள் முதல் உயர் பதவிகளை வகிக்க முடியும்.

முஸ்லிம் பெண்கள் ஏனைய சமய பெண்களை போன்று உயர் பதவிகளை வகிக்க மிகவும் பொருத்தானவர்களேயாகும். இதில் மாற்றுக் கருத்துக்கு எவ்வித இடமுமில்லை.

2009ம் ஆண்டு தொடக்கம் மாற்று சமூகத்தவர்களுடனான எனது பயணத்தில் முஸ்லிம் பெண் என்ற ரீதியில் நான் எந்தவொரு இடைஞ்சலையோ அல்லது தடங்கலையோ அனுபவிக்க வில்லை.

ஆனால் உயர் பதவிகளை வகிக்கும் போது குடும்ப வாழ்வும் தொழில் ரீதியான பதவிகளும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது. குடும்பங்களை சரியான முறையில் பேண வேண்டும்.

கேள்வி: முஸ்லிம் பெண்கள் உயர் பதவிகளின் போது எதிர் கொள்ளும் சவால்கள் பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்.?

பதில்: அல்ஹம்துல்லில்லாஹ் முஸ்லிம் பெண் என்ற வகையில் நான் இதுவரை எந்தவொரு சவாலையும் எதிர் கொள்ள வில்லை.

பெண்கள் இவ்வாறான உயர் பதவிகளை வகிக்கும் போது சவால்களை எதிர் கொள்ள வேண்டியுமுள்ளது. குடும்பம் வீட்டை பராமரித்தல், குழந்தைகளுடன் கழிப்பதற்கு நேரம் போதாமை போன்றவை அதிகமானவர்கள் எதிர் கொள்ளும் சவால்களாகும்.

பொருத்தமான ஏற்பாடுகளுடன் இவ்வாறான சவால்களை வெற்றி கொள்ள முடியும்.

கேள்வி: இலங்கை நிர்வாக சேவை என்ற இந்த உயர் கல்வித் தகமைக்கு உங்களால் எவ்வாறு வர முடிந்தது.?

பதில்: அல்லாஹ்வின் உதவியும் எனது பெற்றோரின் துஆப்பிராத்தனையும் எனது அதிகளவான முயற்சிகளும் இந்த தகமைக்கு என்னைக் கொண்டு சென்றது.

எனக்கு வழங்கப்படும் எந்தவொரு விடயத்தையும் நான் மிகவும் சிறப்பாக செய்ய வேண்டும் என நினைத்து அதற்கான முயற்சிகளை செய்வேன் அதே போன்றுதான் இந்த இலங்கை நிர்வாக சேவை என்ற தகமையை பெற்றுக் கொள்வதற்காகவும் முயற்சித்தேன்.

அத் தோடு நான் இலங்கை நிர்வாக சேவையில் சேர்ந்து கொள்ள எனது கனவரின் பங்களிப்பும் உதவியும் அளப்பெரியதாகும்.

என்னை இந்தப்பரீட்சைக்கு அழைத்து சென்றது முதல் எனது கடமை தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் எனது கனவரின் ஒத்துழைப்பும் ஒத்தாசையும் மிகவும் கூடுதலாக இருந்தது.

கேள்வி: காத்தான்குடி நகர சபையின் செயலாளராக முதலாவது முஸ்லிம் பெண்மனியாக நியமிக்கப்பட்டுள்ள நீங்கள் காத்தான்குடி நகர சபையில் எதிர் காலத்தில் எவ்வாறான வேலைத்திட்டத்தினை மேற் கொள்வீர்கள்?

பதில்: காத்தான்குடி நகர சபைக்காக வருமானத்தை அதிகரிக்க செய்ய வேண்டியுள்ளது. அதற்கான கலந்துரையாடல்களை நடாத்தி வருகின்றேன். அதே போன்ற காத்தான்குடியில் முiறாயன உட்கட்டமைப்புக்களை மேற் கொள்ள வேண்டியுள்ளது.

காத்தான்குடியை பொறுத்த வரைக்கும் முக்கியமான விடயமாக உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவம் அதனை முன்னேற்றி விணைத்திறனுடைய சேவைகளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளேன்.

பொலிதீன் பாவனையை முற்றாக தடை செய்து அதற்குரிய மாற்று வழிகளை முன் வைக்கவும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளேன்.

காத்தான்குடியின் தனித்துவத்தை கூறும் வகையிலும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் ஆலோசித்து வருகின்றேன்.

காத்தான்குடியின் முன்னேற்றத்திற்காகவும் நன்மைக்காகவும் பாடுபடும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களின் உதவியுடன் வேலைத்திட்டங்கள் மேற் கொள்ளப்படும்.

பொது மக்களுக்கு விணைத்திறனுடன் கூடியதும் நிலைத்து நிற்க கூடியதுமான சேவையை காலம் தாழ்த்தாது வழங்குவது முக்கியமானதாகும்.

கேள்வி: முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: முஸ்லிம் பெண்களும் அரசியலில் ஈடுபட வேண்டும். ஆனால் இஸ்லாமிய மார்க்க வரையறைக்குள் நின்று அரசியலில் ஈடுபட வேண்டும்.

அரசியல் மற்றும் குடும்பம் இவற்றை சரிசமனாக அவர்கள் கவனிக்க வேண்டும்.

கேள்வி: ஆண்களின் கல்வி நிலை வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அதனை மேம்படுத்த நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?

பதில்;: சமூகத்தை வழி நடாத்த மிகவும் பொருத்தமானவர்கள் ஆண்களேயாகும். எமதூர் மாத்திரமின்றி முழு இலங்கையிலும் ஆண்களை விட பெண்களின் கல்வி நிலைமை முன்னேற்ற மடைந்து வருகின்றது. உயர் பதவிகளுக்கும் பெண்கள் வருகின்றனர்.

இந்த நிலை கண்டிப்பாக மாற வேண்டும்.பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை குறிப்பாக ஆண் பிள்ளைகளின் கல்வி தொடர்பிலும் அவர்களது செயற்பாடுகள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

ஆண் மாணவர்கள் கல்வி கற்பதிலுள்ள தடங்கல்களை நீக்கி அவர்களை கல்வியின் பால் முன்னேற்ற வேண்டும். அத்துடன் சமூக நிறுவனங்களும் இது தொடர்பில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி: உங்களின் கல்வி நிலை குறித்து என்ன கூற விரும்புகின்றீர்கள்.?

பதில்: என்னுடைய பாடசாலைக் கல்வியில் தரம் 1 தொடக்கம் 7வரை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலத்திலும் 8 தொடக்கம் 11வரை மில்லத் மகளிர் வித்தியாலயத்திலும், உயர் தரம் விஞ்ஞானப்பிரிவை காத்தான்குடி மத்திய கல்லூரியிலும் கற்றதுடன் அதனைத் தொடர்ந்து பட்டப்படிப்பை யாழ்ப்பாண கலைக்கழகத்தின் வவுணியா வளாகத்தில் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பிரிவில் கற்றதுடன் அதில் பட்டத்தையும் பெற்றேன்.

அதன் பின்னர் தனியார் கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராக கடமையாற்றினேன். பின்னர் இலங்கை நிர்வாக சேவைப்பரீட்சை எழுதி அதில் சித்தியடைந்தேன். அதன் பின்னர் இலங்கை நிர்வாக சேவை தகமையுடன் திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளராகவும் மட்டக்களப்பு மாநகர சபையின் செயலாளராகவும் கடமையாற்றினேன்.

எனது கல்வி முன்னேற்றத்திற்கு காத்தான்குடியில் நான் கற்ற பாடசாலைகளும் எனக்கு கற்றுத்தந்த ஆசியர்களுமாகும்.

கேள்வி: உங்கள் கனவர் மற்றும் குடும்பத்தின் பங்களிப்பு எப்படியுள்ளது.

பதில்: எனது குடும்பத்தினரின் பங்களிப்பு எனக்கு உயரிய அளவிலுள்ளது. எனது தாய் மற்றும் தந்தை மற்றும் எனது கனவர் ஆகியோரின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அதிகளவு உள்ளது.

நான் 11 மாதக்குழந்தையின் தாய் எனது குழந்தை மற்றும் வீட்டு பராமரிப்பு போன்ற வற்றின் பாரிய பொறுப்புக்களை சமாளிப்பதற்கு எனது தாய் மற்றும் எனது சகோதரி பூரண ஒத்துழைப்புக்களை வழங்குகின்றனர்.

எனது தந்தை ஒரு விஞ்ஞானப் பாட ஆசிரிய ஆலோசகர் எனது கனவர் ஒரு தனியார் நிறுவனத்தின் விரிவுரையாளராக உள்ளார்.

நான் எனது கடமைகளை சரிவர நிறைவேற்ற எனது குடும்ப உறவுகளால் எனக்கு ஆதரவு பூரணமாய் உள்ளது.

கேள்வி: மேலதிகமாக என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: நான் காத்தான்குடி நகர சபை செயலாளராக இருந்து அல்லாஹ்வுக்கு பொருத்தமாக எனது கடமையை சரிவர செய்ய வேண்டும். எனும் எண்ணத்துடனேயே மேற்கொள்கின்றேன்.

எனது கடமைகளை சரிவர செய்ய அனைத்து தரப்பினரினதும் உதவியை கேட்டுக் கொள்கின்றேன்.

நேர்காணல்: எம்.எஸ்.எம்.நூர்தீன்(ஊடகவியலாளர்)

LEAVE A REPLY