-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூரில் முதன் முறையாக தரம் 1 தொடக்கம் 5 வரையுள்ள சுமார் 5000 மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பை இலவச விநியோகம்
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதின் சொந்த நிதி அனுசரணையில் ஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 1 தொடக்கம் 5 வரையுள்ள சகல முஸ்லிம் தமிழ் மாணவர்கள் சுமார் 5000 பேருக்கு கற்றல் உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பை இலவச விநியோகம் இடம்பெற்றுள்ளதாக முன்னாள் முதலமைச்சரின் ஏறாவூர் அலுவலகம் தெரிவித்தது.
இந்த இலவச கற்றல் உபகரண விநியோகத்திற்காக சுமார் 85 இலட்ச ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும் முன்னாள் முதலமைச்சரின் அலுவலகம் தெரிவித்தது.
அடுத்த கல்வி ஆண்டுக்காக ஏறாவூர் பிரதேசத்திலுள்ள ஐந்தாம் தரம் வரையிலான சகல மாணவர்களும் இலவசமாக புத்தகப்பைகளை கொடையாளியிடமிருந்து பெற்றுக் கொண்டது இதுவே முதன்முறையாகும் என பெற்றோரும் பாடசாலை நிருவாகங்களும் தெரிவித்தன.
குறிப்பாக இது ஏழை மாணவர்களின் பொருளாதாரக் கஸ்டத்தை நீக்க உதவியதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.
கடந்த நொவெம்பெர் மாதம் 01ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட இலவச கற்றல் உபகரணத் தொகுதி புத்தகப் பை விநியோகம் டிசெம்பெர் முதல் வாரத்தில் நிறைவடைந்தது.